கோச்சடையான் பற்றி…

ஹலோ சாரு,

கோச்சடையான் பட விமர்சனம் எழுதுங்கள்.உங்களின் காரசார வாள்முனை போன்ற கூர்மையான வார்த்தைகளால் விமர்சியுங்கள்.செய்வீர்கள் என்று நம்புகிறேன்.நன்றி…

விக்கி ரெட்

அன்புள்ள நண்பருக்கு,

யாரோ எதையோ வைத்து சந்தோஷப்படுகிறார்கள்.  அதை ஏன் நாம் கெடுக்க வேண்டும்?  எந்திரன் படத்தை விமர்சித்தேன்.  குக்கூ விமர்சித்தேன்.  பரதேசி விமர்சித்தேன்.  இதெல்லாம் நம் சமூகச் சீரழிவின் அடையாளங்கள்.  சமீபத்தில் யாமிருக்க பயமே என்ற சாக்கடையில் விழுந்து எழுந்தேன்.  அந்தப் படம் தான் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாம்.  குடும்பம் குடும்பமாக அந்தப் படத்தைப் பார்க்கிறார்கள்.  தெருவில், முச்சந்தியில் உட்கார்ந்து ரெண்டு மூணு பேர் மலம் கழித்துக் கொண்டிருப்பதை நீங்கள் நின்று நிதானித்துப் பார்ப்பீர்களா?  அதுதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.  ரெண்டு ஹீரோயின் அந்தப் படத்தில்.  ரெண்டு ஹீரோயினும் ஹீரோவின் மீது விழுந்து அள்ளுகிறார்கள்.  என்னை செய் என்னை செய் என்று அவனைத் தேய்க்கிறார்கள்.  ரெண்டு ஹீரோயினுக்கும் அதனால் சண்டை.  ஒருத்தி கேட்கிறாள், என் பூரியை நீ பார்த்திருக்கிறாயா? என்று.    பூரி என்றால் பு… என்ற அர்த்தத்தில் வருகிறது.  அந்தக் காலத்தில், கிராமங்களில், ஊருக்கு ஒதுக்குப் புறமாக ரெக்கார்ட் டான்ஸ் என்று ஒரு கலை நிகழ்ச்சி நடக்கும்.  மேடையில் ஒரு பெண் அரைப் பாவாடையில் ஆடிக் கொண்டிருப்பாள்.  எல்லார் ஈஸ்வரியின் பாட்டுக்கு…  (அம்மன் பாடல் அல்ல… வேறு பாடல்.)  பெண்டாட்டியை சரியாக சுகிக்கக் கொடுத்து வைக்காதவர்களெல்லாம் அங்கே வந்து பூரி தெரிகிறதா என்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.   கடைசி வரை தெரியாது என்பது வேறு விஷயம்.  அந்த ரெக்கார்ட் டான்ஸை பெரிசுகள் ஒளிந்து மறைந்துதான் பார்க்கும்.  ஆனால் இப்போது மாலில் வந்து 150 ரூபாய்க்கு ரெண்டு லிட்டர் கோக்கும் இன்னொரு 150 ரூபாய்க்கு ரெண்டு கிலோ பாப் கார்னும் வாங்கித் தின்று கொண்டு குடும்பம் குடும்பமாக பூரி பார்க்கிறார்கள்.  இது போன்ற ஆபாசத்தைப் பார்த்ததற்காக வெட்கப்படுகிறேன்.  கோச்சடையான் இந்த அளவுக்கு ஆபாசமாக இருக்காது.  பொம்மைப் படம்.  பொம்மைப் படம் பார்ப்பது குழந்தைகளுக்கு நல்லது.  நான் குழந்தை அல்லவே?  இன்னும் மன வளர்ச்சி அடையாமல் குழந்தையாகவே இருந்து கொண்டிருக்கும் தமிழர்கள் கோச்சடையான் பார்த்து சிரித்து சந்தோஷமாக இருக்கட்டும்.  அவர்களின் சந்தோஷத்தைக் கெடுக்க மாட்டேன்.

செய்வதற்கு நிறைய வேலை இருக்கிறது.  நேற்று non stop ஆக பனிரண்டு மணி நேரம் டைப் செய்தேன்.   பேய் வேகம்.  மனதிலிருந்து கதை அருவியாய்க் கொட்டியது.  ஆறு மணிக்கு பின் கழுத்தில் கொடுமையான வலி.  தலையைத் திருப்பாமல் ஒரே திக்கில் பார்த்து டைப் செய்ததன் பலன்.  எக்ஸைல் முடிக்க வேண்டும்.  அதற்கு அடுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நாவல் காத்துக் கிடக்கிறது.  அதைத் தொடர வேண்டும்.  வெகுஜன கலாச்சாரத்திலிருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்தால்தான் எதையாவது உருப்படியாகச் செய்ய முடியும்…

எக்ஸைலிலிருந்து கொஞ்ச நேரம் விலகி வர சந்தர்ப்பம் அளித்த உங்களுக்கு நன்றி…

சாரு

 

 

Comments are closed.