சிருஷ்டிகரம் என்றால் என்ன?

ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு வாசகர் எழுதியிருந்தார்… எக்ஸைலின் பக்கங்களைப் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்களே, ஒரு நல்ல படைப்புக்கு அளவு, அதாவது பக்கங்களின் எண்ணிக்கை முக்கியமா என்ன என்று.  அது ஒரு அருமையான கடிதம்.  எக்ஸைலை முடிக்கும் வரை யாருக்கும் பதில் எழுதுவதில்லை என்பதால் அவருக்கும் எழுதவில்லை.  எனக்கு 200 பக்க நாவல்தான் உத்தமம்.  400 என்றால் ஓகே.  ஆயிரம் பக்கமெல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதான் என்று தோன்றும்.  ஆனால் என் நண்பன் தருண் மூன்று நாவல்களையுமே ஆயிரம் ஆயிரம் பக்கம்தான் எழுதியிருக்கிறான்.  என்னுடைய தேர்வு அல்லது என் விருப்பம் என்றால் முன்னூறு பக்கம்தான் நாவலின் அளவு.  ஆனால் எக்ஸைல் இழுத்து விட்டது.  இப்போது 1000 பக்கங்களை சரி செய்து விட்டேன்.  இன்னும் 600 பக்கங்கள் உள்ளன.  இந்த நிலையில் செல்வா சற்று நேரத்துக்கு முன்பு ஒரு எழுத்தாளரின் மேற்கோளை அனுப்பியிருந்தார்.  அந்த மேற்கோள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  என் கருத்தும் அதுவே.  அந்த எழுத்தாளர் என்னை ஜென்ம வைரியாக நினைப்பவர்.  ஆனால் எனக்கு அப்படி அல்ல.  எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத உத்தமத் தமிழ் எழுத்தாளரின் சினிமா வசனங்களை மிகவும் சிலாகித்து எழுதியவன் நான்.  எனக்கு ஆள் முக்கியம் அல்ல.  கருத்துதான் முக்கியம்.  என்னை அவர் மதிக்கிறாரா மிதிக்கிறாரா என்பதும் முக்கியம் அல்ல.  அவர் என்னைத் திட்டினால் பாவம் அவருக்குப் புரியவில்லை என்று நினைக்கும் நிலையில் உள்ளவன் நான்.  இப்படி ஒரு நிலையை அடைவதற்கு உண்மையிலேயே மிகுந்த உழைப்பும், திமிரும், தன்னம்பிக்கையும் வேண்டும்.  சரி…  அந்த மேற்கோளைச் சொல்லி விடுகிறேன்…

”ஒருமைப்பட்ட மனமும் மூளையும் ஒன்றாகக் கூடிய மோன நிலையே சிருஷ்டிகரம் அல்லது படைப்பூக்கம். அந்த நிலையில் கலைஞனின் நாட்டம் எண்ணிக்கையிலோ அளவில் எத்துனைப் பெரிது என்பதிலோ இருக்க முடியாது. முழுமை மட்டுமே அவனது குறி. மொழுக்கென இருப்பதெல்லாம் முழுமை அல்ல. எடுத்துக் கொண்ட கருவுக்கேற்ற முழுமை. கருப்பொருள் தீர்மானிக்கும் கட்டமைப்பின் முழுமை.”

சொன்னவர் விமலாதித்த மாமல்லன்.  அவருக்கு என் எழுத்து பிடிக்காது.  ஆனால் மேலே சொன்ன கருத்து எனக்கு ரொம்ப முக்கியம்.  எழுத்து பற்றிய என் ஆதார எண்ணமே அதுதான்.  எக்ஸைல் நாவலின் அளவை அதன் கருப்பொருளே தீர்மானிக்கிறது.  விரைவில் வெளியே வருவேன்…

 

 

Comments are closed.