வாசகர்கள்…

சாரு நிவேதிதா வாசகர் வட்டம் என் வாசகர்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான வட்டம் என்பது அனைவரும் அறிந்ததே.  இப்போதைய எக்ஸைல் நாவலை மூவரிடம் படிக்கக் கொடுத்து மூவரும் அது போரடிக்கிறது என்று சொன்னதையும், அதை நான் மனமுவந்து ஏற்றுக் கொண்டதையும் நீங்கள் அறிவீர்கள்.  ஆனால் எனக்குள் ஒரு திமிர் உண்டு.  மூவருக்கும் போரடித்தால் மூவருக்கும் புரியவில்லை போல என்று எடுத்துக் கொண்டு விட்டேன்.  ஆனாலும் அதை மேலும் செம்மையாக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஒருவேளை அது இன்னமும் அதிக அளவில் போர் அடித்தாலும் அடிக்கலாம் என்ற எண்ணமும் உள்ளூர உண்டு.  சரி…  இப்போது ஒரு நண்பர் சாரு வாசகர் வட்டத்தில் சாரு நல்ல கட்டுரையாளர் என்று சொல்கிறார்.  அதாவது என் புனைகதைகளை மறுத்து, நிராகரித்து விட்டு அதைச் சொல்கிறார்.  கிட்டத்தட்ட என்னைக் கொலை செய்வதற்கு சமம் அந்த வார்த்தை.  என்னை அவமானப்படுத்துவதற்காக உத்தமத் தமிழ் எழுத்தாளர் அடிக்கடி சாரு ஒரு நல்ல columnist என்று சொல்லுவார்.  அதாவது நான் அவரை ஒரு நல்ல திரைப்பட வசனகர்த்தா என்று சொல்வதைப் போல.  ஆனால் நான் உண்மையிலேயே அவரைப் பற்றி அப்படி நினைக்கிறேன்.  ஆனால் அவரோ என்னை அவமானப்படுத்துவதற்கு மட்டுமே அப்படிச் சொல்கிறார். அவருக்கு என் உயரமும் இடமும் தெரியும்.  அவர் ஒரு தேர்ந்த வாசகர்.  சச்சின் என்றால் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்?  அவர் விளையாட்டாக டேபிள் டென்னிஸ் ஆடுவார்.  கபடி கூட ஆடலாம்.  அதெல்லாம் அவருடைய ஜாலியான நேரங்கள்.  பொழுதுபோக்கு.  கிரிக்கெட்டில் சச்சின் ஒரு லெஜண்ட்.  ஆனால் ஒருவர் சச்சினின் நண்பர்கள் வட்டத்தில் எப்படியோ உறுப்பினராகி, அங்கே போய், “எனக்கு சச்சினின் கிரிக்கெட் பிடிக்காது.  அதில் அவர் ஒன்றும் சாதிக்கவில்லை.  கிரிக்கெட்டில் சாதனையாளர்கள் என்று சொன்னால் ஷாஹித் அஃப்ரிதி, மனோஜ் பிரபாகர் இருவர்தான்…  ஆனால் டேபிள் டென்னிஸில் சச்சின் ஒரு கிங்” என்று சொன்னால் அவரை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்?

கட்டுரைகள் நான் விளையாட்டாக, பொழுதுபோக்காக எழுதுபவை.  இப்போது நான் சிறுகதைகள் எழுதுவதில்லை என்றாலும் நான் எண்பதுகளில் எழுதிய சிறுகதைகள் இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் உலக அளவில் எந்த மொழி இலக்கியவாதிகளாலும் விஞ்ச முடியாதவை.  ஏனென்றால், non-linear writing என்ற புதிய இலக்கிய வடிவத்தையே (genre) அடியேன் தான் உலக இலக்கியத்துக்கு வழங்கியிருக்கிறேன்.  இந்த விஷயம் தமிழர்களுக்குத் தெரியாவிட்டாலும், ஸீரோ டிகிரியின் மூலம் சர்வதேச இலக்கிய வாசகர்கள் அறிந்து கொண்டு விட்டனர்.  என்னுடைய non-linear சிறுகதைகளின் நீட்சியே ஸீரோ டிகிரி. 

நான் – லீனியர் எழுத்து வடிவத்தை நான் உலக இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும் இதை ஒன்றும் சுத்த சுயம்புவாக எழுதிவிடவில்லை.  விஞ்ஞானத்தில் எப்படி நூற்றாண்டுகளின் கண்டுபிடிப்புகள் ஒரு புதிய கண்டுபிடிப்புக்குக் காரணியாக இருக்கிறதோ அதே போல் என்னுடைய நான் – லீனியர் எழுத்து வடிவத்துக்குக் காரணிகளாக இருந்தவை, ஐரோப்பிய சினிமா மற்றும் போர்ஹேஸின் சிறுகதைகள்.  ஐரோப்பிய சினிமா என்றாலும் குறிப்பாக கொதார் (Jean-Luc Godard).  எனக்கு நான் – லீனியர் வடிவம் கோதாரிலிருந்துதான் கிடைத்தது.  சினிமாவில் நான் – லீனியர் கதை சொல்லும் முறையை முதல் முதலாகக் கண்டு பிடித்தவர் கொதார்.  அதற்கு அடுத்து அந்த வடிவத்தை மேலும் செழுமைப்படுத்தியவர் என Glauber Rocha-வை சொல்லலாம். (க்ளாபர் ரோச்சாவின் படங்களைப் பார்த்தவர்களைத் தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணி விடலாம்.)

ஆனால் உலக அளவில் நான் – லீனியர் எழுத்து வடிவம் தமிழ்நாட்டில் தான் எழுதப்பட்டது.  எழுதியது அடியேன்.  

அவசர வேலையாக பாம்க்ரோவ் வரை செல்கிறேன்.  வந்ததும் தொடர்வேன்…  இந்தப் பஞ்சாயத்தை முடித்து விட்டுத்தான் எக்ஸைலில் உட்கார வேண்டும்… 

Comments are closed.