இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக பத்து மணிக்கு கலையும் மீறலும் என்ற தலைப்பில் என்னுடைய பேச்சும் அதைத் தொடர்ந்த உரையாடலும் நடந்தது. நெல்ஸன் சேவியர் ஒருங்கிணைத்தார். லக்ஷ்மி சரவணகுமார் அறிமுக உரை ஆற்றினார். நான் ஒரு இருபது பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு ஐநூறு பேர் இருந்திருப்பார்கள். ஐம்பது நூறு பேர் வேறு நின்று கொண்டிருந்தார்கள். இதற்காக நான் தமிழ்நாடு அரசையும், அண்ணா நூலகத்தின் அதிகாரிகள் அனைவரையும், இதில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் பாராட்டுகிறேன். குறிப்பாக இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள். இதுவரை தமிழ்நாட்டில் இலக்கியத்துக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. அதிலும் அந்த ஐநூறு பேரும் எங்கிருந்தோ அழைத்து வரப்பட்டவர்கள் இல்லை. இந்த உரையை, இந்த உரையாடலைக் கேட்பதற்கென்றே வந்தவர்கள். வெளியூரிலிருந்தெல்லாம் பலர் வந்திருந்தார்கள். அவர்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். எல்லோருமே கவனமாகக் கேட்டார்கள். பலரும் மிகச் சிறந்த முறையில் எதிர்வினையாற்றினார்கள். மிகச் சிறந்த முறையில் கேள்விகள் கேட்டார்கள்.
ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது.