ஒளித்தீற்றல்: ஸ்ரீ

அதிகாலையிலொரு சொப்பனம்
கண்காட்சி போன்றவொரு இடத்தில்
நீயும் நானும் பேசியபடி
உலாவிக் கொண்டிருக்கிறோம்
மறுநாள் நீ வரவில்லை என்கிறார்கள்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
என் தொலைபேசி அழைப்பையும் எடுக்கவில்லை
திரும்பி வர இயலாதபடி மறைந்து விட்டாய்
அடக்க இயலாமல் தேம்பித் தேம்பி அழுகிறேன்
உணர்வு நிலைகொள்ளவில்லை
***
உனக்கான ஒரு கூட்டம்
நானும் இருக்கிறேன்
உன் நண்பனொருவன் என்னை அணுகி
உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது
கலவி கொள்ளலாமா என்கிறான்
***
ஒரு தனியறையில் அவனும் நானும்
மூர்க்கமாக முயங்கிக் கிடக்கிறோம்
இருவரும் சரியும் நிலையில்
கைபேசி ஒலிக்க
மிஸ் யூ குட்டி, எங்கே இருக்கிறாய்
என்கிறான் கணவன்
நித்திரையிலிருந்து கண்கள் திறக்க
கனவென நம்ப நொடி சில ஆயிற்று
***
நான் இல்லை என்றால் எப்படி உணர்வாயென
ஒருமுறை கேட்டாய்
நீ என்னைப் பிரிவதே இல்லை
நீ என் மனம் என்றேன்
இப்போது கேட்டால்
என்ன சொல்வேன்
நீ இல்லை என்பதைக் கனவிலும்
ஏற்க மறுக்கிறது மனம்
உன் ஸ்பரிஸத்தின் உயிர்த் துடிப்பை
வேறு எதனாலும் வழங்க முடியாது
உன் வாழ்வெனும் கலையில்
வண்ணமயமானவொரு
சிறுபகுதி
நான்

அது போதும்

(ஸ்ரீ எழுதிய கவிதைகளில் ஒன்று. ஸ்ரீ பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவள். இலக்கியத்திலும் சாருவைத் தவிர வேறு யாரையும் படித்ததில்லை என்கிறாள். தன் எழுத்துக்களை வெளியிடுவதில் இப்போதைக்கு விருப்பம் இல்லாதிருக்கிறாள்.)

ஸ்ரீ