அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு குறித்து ஒரு வார்த்தை

அன்பு நாவல் வெளிவந்து விட்டது.  கையெழுத்திட்டுக் கொடுப்பதற்காக நாளை நான்கு மணிக்கே ஸீரோ டிகிரி அரங்கிற்கு வந்து விடுவேன். அரங்கம் எண் எஃப் 19.   இது குறித்து ஒரு விண்ணப்பம் தெரிவிக்க வேண்டும்.  அச்சகத்திடம் ராம்ஜி 200 பிரதிகள் சொல்லியிருந்ததாகத் தெரிந்து நான் அச்சகத்திடம் 300 பிரதி என்று சொல்லி விட்டேன்.  ராம்ஜி அப்போது சர்வதேசப் புத்தகச் சந்தையில் இருந்ததால் அவரிடம் தெரிவிக்க முடியவில்லை.  அவரிடம் மாலையில்தான் தெரிவித்தேன்.  நட்பு கருதி நான் எடுத்துக் கொண்ட உரிமை அது.  இதை உங்களை நம்பித்தான் செய்தேன்.  300 பிரதியையும் இன்னும் நான்கைந்து தினங்களில் தீர்த்து விட வேண்டியது உங்கள் கையில். 

***

இன்று புத்தக விழாவில் எனக்கு மிகக் கசப்பான ஒரு அனுபவம் ஏற்பட்டது.  அந்த சம்பவம் நான்கு நாட்களுக்கு முன்பு நடந்திருந்தால் அதை அன்பு நாவலில் இறுதி அத்தியாயமாகச் சேர்த்திருப்பேன்.  அன்பு நாவல் எது பற்றிப் பேசுகிறதோ அதேதான் இன்று நடந்தது.  அன்பு நாவல் எது பற்றிப் பேசுகிறது?  நாவலைப் படித்துப் பாருங்கள்.