மௌனியின் அழியாச் சுடர்கள் சிறுகதை நாயகியின் வயது பதின்மூன்று. 1930களில் எழுதப்பட்ட சிறுகதை. லொலிதாவின் (நொபக்கோவ்) வயது பதின்மூன்று. ஜூலியட்டின் வயது பதின்மூன்று. என்னுடைய உன்னத சங்கீதம் நாயகிக்கும் அதே வயதுதான். ஒரு காலத்தில் பதின்மூன்று வயது என்பது பெண்களின் திருமணத்துக்கு மிகவும் காலம் கடந்த வயதாக இருந்தது.
அப்போதெல்லாம் பெண்களுக்கு ஏழு எட்டிலேயே மணம் முடித்து விடுவார்கள். இப்போது சர்வ சாதாரணமாக முப்பதைத் தாண்டுகிறது. பல பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இருபத்தோரு வயது பெண் ஏழு முறிவுகளைக் (ப்ரேக் அப்) கடந்து வருகிறாள். முறிவுகள் என்றால், அவர்களோடு எல்லாம் சரீர பந்தம் இருந்ததா என்று கேட்டால், போடா கிழவா என்கிறார்கள். அந்தக் கேள்வியிலேயே கேள்வி கெட்ட ஆசாமி போன தலைமுறை ஆளாகப் போய் விடுகிறார்.
பெண்களின் ஆடை விஷயமும் அப்படியே. பெண்கள் ஆடை அணிந்திருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாத அளவுக்கு ஆடை அணியும் காலம் வரும் என்று புனித நூலில் ஒரு வசனம் உண்டு. தொடைக்கும் மேலே கிழித்து விட்ட ஜீன்ஸ்தான் இப்போதைய மோஸ்தராக இருக்கிறது. Couple swapping, foursome என்றெல்லாம் எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது ஆண் பெண் உறவு.
இதெல்லாம் ஆயிரத்தில் ஒன்று, பல்லாயிரத்தில் ஒன்று என கதையளந்து கொண்டு திரிகிறார்கள் சமகால எழுத்தாளர்கள். பெயரில்தான் சமகாலம். அவர்கள் வாழ்வது இன்னமும் மோகமுள் யமுனா காலத்தில்தான்.
காலம் வெகுவாக மாறி விட்டது. மானுட வரலாற்றில் ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பத்தாம் நூற்றாண்டுக்கும் பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் கூட பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கும் இருபது இருபத்தோராம் நூற்றாண்டுக்கு இடையில் – ஒரு நூறு நூற்றைம்பது ஆண்டுகளில் – மனித வாழ்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கான பாய்ச்சல் நடந்து விட்டது.
இந்தப் பாய்ச்சலை சமகால இலக்கியம் எந்த அளவுக்குப் பதிவு செய்திருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சமகாலத்தை இலக்கியம் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன் அல்ல நான். சுதந்திரப் போராட்டத்தில் தேசமே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போதுதான் அது பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல் க.நா.சு. தன் நாவல்களை எழுதினார்; ஜானகிராமன் தன் சாகாவரம் பெற்ற படைப்புகளைப் படைத்தார். தஞ்சாவூர் நிலப்பகுதியே மராட்டியராலும், மொகலாயராலும், பல்வேறுபட்ட ஐரோப்பிய வெள்ளையினத்தவராலும் ரத்த பூமியாக மாறிக் கொண்டிருந்த வேளையில்தான் தியாகராஜர் ராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார்.
ஆனால் மனித உறவுகளில், கலாச்சாரத்தில், சமூக வாழ்வில் இரண்டாயிரம் ஆண்டுகளில் நடந்திராத ஒரு மாபெரும் மாற்றம் இருபது/இருபத்தோராம் நூற்றாண்டில் நடந்து கொண்டிருக்கும்போது தமிழில் அது குறித்த எந்தப் பதிவுமே இல்லை.
இந்த இடத்தில்தான் அராத்து என்ற ஒரே ஒரு எழுத்தாளர் நம் கவனத்துக்கு உரியவர் ஆகிறார். அராத்துவின் நாவல்கள், சிறுகதைகள் எல்லாமே இப்போது உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆண் பெண் உறவு மாற்றத்தை மிக வலுவான தரவுகளோடும் அதிர்வுகளோடும் பதிவு செய்து வருகின்றன.
பொண்டாட்டி, ஓப்பன் பண்ணா என்ற இரண்டு நாவல்களையும் இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். ஆண் பெண் உறவில் இன்று நிகழ்ந்திருக்கும் மாற்றங்களைப் பதிவு செய்யும் அது போன்ற நாவல்களை உலக இலக்கியத்திலேயே நான் படித்ததில்லை. ஓரளவுக்கு முராகாமியை விதிவிலக்காகச் சொல்லலாம்.
சிறிது வெளிச்சம் என்ற சிறுகதையை எழுதிய கு.ப.ராஜகோபாலன் இன்று இருந்திருந்தால் No Time To Fuck என்ற கதை மாதிரிதான் எழுதியிருப்பார். ஒரே வித்தியாசம், மொழி நடை இன்னும் செறிவாக இருந்திருக்கும்.
சிறுகதை இலக்கியத்தில் நடந்த மாபெரும் புரட்சி என்று போர்ஹேஸின் கதைகளையும் அதன் பிறகு ஆலன் ராப்-க்ரியே (Alain Robbe-Grillet) எழுதிய பீச் என்ற சிறுகதையையும் சொல்லலாம். அந்த இரண்டு பேரும் சிறுகதையைப் பொருத்தவரை இன்று வரை கடக்க முடியாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். என்னுடைய நேநோ போன்ற சில சிறுகதைகள் அவர்கள் இருவரையும் தொட்டுப் பார்த்திருக்கின்றன.
குரங்கிலிருந்து மனிதனாக உருமாற்றம் நிகழ்ந்த காலத்திலிருந்து இன்று வரையிலான மானுட வரலாற்றில், ஆண் பெண் உறவில் இன்று நடந்திருக்கும் மாபெரும் பாய்ச்சலை உலக இலக்கிய சரித்திரத்திலேயே இந்தக் கதைதான் முதல் முதலாக இத்தனை வலுவாகப் பதிவு செய்திருக்கிறது. அந்த வகையில் போர்ஹேஸ், ஆலன் ராப்-க்ரியே, சாரு நிவேதிதா ஆகியோரின் சிறுகதைச் சாதனைகளை இந்தக் கதையும் நிகழ்த்தியிருக்கிறது.
காஃப்காவின் மெடமார்ஃபஸிஸ் குறுநாவல் அந்தக் காலகட்டத்தின் அபத்தத்தையும், வாழ்வின் அர்த்தமற்ற தன்மையையும், angstஐயும் பதிவு செய்த மாபெரும் படைப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நோ டைம் டு ஃபக் என்ற இந்த நெடுங்கதை இன்றைய ஆண் பெண் உறவில் நிலவி வரும் சலிப்பை (boredom) இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய வரலாற்றில் முதல் முதலாகப் பதிவு செய்திருக்கிறது. கதை முடியும் தருணத்தில் நாயகனும் நாயகியும் பேசிக் கொள்ளும் ஒரு சிறிய உரையாடலில் அந்த சலிப்பு நம் இருப்பையே கதிகலங்க அடிக்கும் வகையில் பதிவாகியிருக்கிறது.
அந்த வகையில் இந்த நெடுங்கதை ஓர் உலக சாதனை.
இந்த நெடுங்கதையை எப்படிப் படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்பது பற்றி நாளை எழுதுகிறேன். இன்னொரு விஷயம். கதையின் தலைப்பில்தான் நாலு எழுத்து வார்த்தை இருக்கிறதே தவிர கதையின் சொல்மொழியில் கெட்ட வார்த்தைகள் கிடையாது.