அன்பு நாவல் ஒரு நண்பரின் வாழ்க்கையில்…

அன்பு நாவலில் மூன்று நண்பர்கள் காரில் ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பார்கள். சேலம் பக்கத்தில் ஒரு அசைவ மெஸ் வரும். அங்கே சாப்பிட வேண்டாம் என்பார் ஒரு நண்பர். மற்ற இருவரும் அங்கே சாப்பிட விரும்பியும் ஏதோ ஒரு பவனில் சைவ உணவு உண்பார்கள். மூவரில் பெருமாள் ஒருத்தன். அவனுக்கு எப்போதெல்லாம் பவனில் சைவம் சாப்பிட்டாலும் வயிற்று வலி வந்து விடும். தவறினதே இல்லை. அன்றைய தினமும் வந்தது. அன்பு நாவல் எழுதியதற்கு அந்த வலியே ஆரம்பப் புள்ளி.

இப்போது அந்த அன்பு நாவலை யாருக்கு சமர்ப்பணம் பண்ணினேனோ அவருக்கும் அதே வலி. அதே மாதிரி ஏதோ ஒரு எழவு பவன் காரணமாக. இதோ அவரது வார்த்தைகளில்:

ஒளி முருகவேள்

வளசரவாக்கத்தில் ஶ்ரீ கணேஷ் பவன் என்றொரு ஹோட்டல். மெயின் ரோட்டிலேயே இருக்கிறது. பகல் 12 மணிக்கு பசிக்கிறதே என்று சாம்பார் சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டேன். கடுமையான காரம். நான்கு வாய் மட்டுமே சாப்பிட்டுவிட்டு வீடு வந்ததும் தலை வெடிப்பதுபோல் வலித்தது. முந்தின இரவு சரியாக தூங்காமல் இருந்ததுதான் காரணம் என்று நினைத்து ஒரு டோலோ 650 எடுத்துக்கொண்டு உறங்கிவிட்டேன். தூக்கத்திலேயே பொங்கி வந்தது வாந்தி. பாத்ரூமுக்கு போவதற்குள் தரையெல்லாம் சிதறிவிட்டது. 6-7 முறை வாந்தி எடுத்திருப்பேன். அதில் கடைசி இரண்டு முறை ரத்தம் வந்தது. இரவு பதினோரு மணிக்கு பக்கத்திலுள்ள 24/7 மருத்துவமைக்கு சென்று மருத்துவரைப் பார்த்ததில் இது food poisoning போல தெரிகிறதென்றார். பலமுறை வாந்தி எடுத்ததால் உடலில் நீருமில்லை சக்தியுமில்லை என்பதனால் க்ளுகோசுடன் இன்னும் சில மருந்துகளும் ஏற்றப்பட்டது. தொண்டைவழி எதையோ உருவி எடுப்பதுபோல் வலிக்கிறது. பேசுவதும் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. இதனால் ஒரு டிசைன் பிராஜெக்ட் ஒன்று கைவிட்டுப்போவதுபோல் இருக்கிறது. முக்கியமாக சாருவுடனான பாண்டிச்சேரி சிறுகதை பட்டறையில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். அதுவும் கெட்டுப்போனது. இந்த கணேஷ் பவன் ஹோட்டல் காலியாக இருந்த பொழுதே நான் உஷராகியிருக்க வேண்டும். பசியில் வயிறும் காலியாக இருந்ததால் கண்ணுக்கு வேறேதும் தெரியவில்லை.

***

ஒளிக்கு ஒரு அறிவுரை: இப்படி கண்ட கண்ட பவன்களில் சாம்பார் சாதம் சாப்பிடுவதை விட ரோட்டோரத்தில் உள்ள தள்ளுவண்டியில் மீன் சாதம் சாப்பிடலாம். அதுவும் பிடிக்காது என்றால், எங்காவது ஒரு நல்ல நான் வெஜ் ஓட்டலாகப் பார்த்து பிரியாணி ஆர்டர் பண்ணி அதில் உள்ள கறியையெல்லாம் தலையைச் சுற்றித் தூக்கி எறிந்துவிட்டு சோறை மட்டும் சாப்பிடலாம்.

ஒன்றிரண்டு முறை பவனில் சாப்பிட்டு அவதியுற்றதால் பல ஆண்டுகளாக நான் வீட்டை விட்டு வெளியே போனால் சைவ உணவே சாப்பிடுவதில்லை. அதிலும் பவன் பக்கம் தலைகாட்டுவதே இல்லை. இட்லி தோசை சாப்பிடலாம். பிரச்சினை இல்லை. நான் சொல்வது மதிய உணவு. அந்த விரதத்தை ஒரே ஒரு முறை மீறினேன். அன்பு நாவல் உருவானது.

சாரு