அன்பு: ஒளி முருகவேள்

நாவல் முழுவதும் அன்பினால் ஏற்படும் ரணங்கள் இருந்தாலும், பெருமாளை வலிகள் வாட்டு வாட்டென்று வாட்டினாலும் சாருவின் வசீகர எழுத்து நடையால் பக்கத்துக்கு பக்கம் சிரிப்பை அடக்க முடியவில்லை. சோகத்தைக்கூட கொண்டாட்டமாய் சொல்லும் அவரது மொழி நம்மை கட்டிப்போடுகிறது. அதுவே அவரது வாழ்வின் தத்துவமாகவும் நமக்கு அள்ளி அள்ளி வழங்கப்படுகிறது. நான் ரசித்துப் படித்த ராஸ லீலாவிற்குப் பிறகு சாருவின் ராட்சஸ விஸ்வரூபம் இது.

இதை வாசிக்கம்போது சார்லி சாப்ளினின் திரைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. சாப்ளினின் நகைச்சுவை கலந்த சோகம் நம்மை சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும். அதேபோல் அன்பு நாவல் நம்மை எந்த அளவிற்கு சிரிக்க வைக்கிறதோ அதே அளவிற்கு ஆழ்ந்து சிந்திக்கவும் வைக்கிறது.

இதுவரை அன்பானது நமக்குக் கற்பிக்கப்பட்ட முறையில்… அன்பு தான் அனைத்திற்கும் அடிப்படை, அன்பு தான் முதன்மை, அன்பு தான் இவ்வுலகத்தை இயக்குகிறது, அன்பே கடவுள், அன்பே அடைக்கலம், அன்புக்கு நான் அடிமை என்றெல்லாம் சொல்லிச் சொல்லி அன்பை ஒரு உயர்வான இடத்தில் வைத்துப் பார்க்கும்படி நம்மைப் பழக்கப்படுத்தி விட்டார்கள். ஆனால் அன்பு எவ்வளவு கொடூரமானது என்பதை சாரு வேரோடு அறுத்து அடையாளம் காட்டுகிறார்.

அன்பின் பிணைப்பில்தான் நாம் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பொறுப்புடனும் இருக்கிறோம் என்ற மாயையை உடைத்து சின்னாபின்னமாக்கி அன்பின் சுயரூபத்தை அதன் மறுபக்கத்தை அம்மணமாய் நம்முன் நிறுத்துவது மட்டுமல்லாமல் அன்பு என்பது எப்படி நம்மை நம் விருப்பம் போல் வாழ விடாமல் ஒரு சிறை போல் இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ளாத நமது அறியாமையையும் துல்லியமாய் சுட்டிக் காட்டுகிறார். எல்லாவறையும் அடிவரை தோண்டி விமர்சிக்கும் நாம் அன்பை மட்டும் ஒரு கடவுள் போல் நினைப்பதே எத்தனை பெரிய தவறான புரிதல் என்று மீண்டும் மீண்டும் நம்முடன் வாதிட்டு உணர்த்துகிறார் சாரு.

இது ஓர் பத்தாயிரம் வாலா ஆட்டம்பாம் சரவெடி. படித்துக் கொண்டாட வேண்டிய படைப்பு!

சாரு – “என் எழுத்தின் செய்தி என்ன தெரியுமா? மானுட சுதந்திரம். சுதந்திரமே என் உயிர் மூச்சு. என் தாரக மந்திரம்”

நாவலை வாங்குவதற்கு:


https://tinyurl.com/yhvc8ush