அன்பு நாவல் குறித்து: வாஸ்தோ

நேற்று வாஸ்தோவிடமிருந்து ஒரு மெஸேஜ். ”அன்பு நாவலை ரொம்பவே நிதானமாக வாசிக்கிறேன் சாரு.”

எனக்கு அது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் ஒரே அமர்வில் ரெண்டு அல்லது மூணு மணி நேரத்தில் படித்து முடித்து விடுகிறார்கள். ராஜேஷுக்கு ஜுரம். அதனால் ஓய்வில் இருந்தார். இப்போது படிக்காதீர்கள் என்று அறிவுரை சொன்னேன். ஏனென்றால், எடுத்தால் வைக்க முடியாது என்பதுதான் காரணம். ஆனால் அதைச் சொல்லக் கூடாது என்று தணிக்கை செய்து விட்டேன். ஆனாலும் என் பேச்சைக் கேட்காமல் நாவலை எடுத்த ராஜேஷ் இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்து விட்டார். இப்படித்தான் நாவலைப் படித்த எல்லோரும் சொன்னார்கள் என்பதால் வாஸ்தோ சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

பின்னர் வாஸ்தோவிடமிருந்து இன்னொரு மெஸேஜ். ”ஒரே அமர்வில் படித்தேன் என்றால், நான் பிறழ்வு நிலைக்குப் போய் விடுவேனோ என்ற பயம் உள்ளுக்குள் உண்டாகி விட்டது. அதனால்தான் நிறுத்தி நிறுத்தி வாசிக்கிறேன். அதாவது, பிரதிக்கு உள்ளேயும் வெளியேயுமாக போய்ப் போய் வருகிறேன்.”

நாவலைப் பற்றி வளன் அரசு என்ன சொன்னானோ அதே அபிப்பிராயம் வேறு வார்த்தைகளில். நாவலை முடித்த பிறகு வாஸ்தோவுக்கு என்ன கருத்து இருந்தாலும் சரி, இப்போது இந்த நிலையில் இப்படிச் சொன்னதே பெரிய பாராட்டாகக் கருதுகிறேன்.

கீழே அன்பு நாவல் பற்றி வளன் கூறியது:

சாருவின் அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு என்ற புதிய நாவலைப் படித்ததிலிருந்து ஒருவிதமான ட்ரான்ஸ் மனநிலையில் இருக்கிறேன். இவ்வளவு பெரிய நாவலை இவ்வளவு சீக்கிரமாகவும் தீவிரமாகவும் வாசித்ததேயில்லை. நாவலின் pdf அனுப்பிய அன்றே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். முப்பது பக்கம் முடித்தவுடன் மனமில்லாமல் மூடிவைத்துவிட்டு மற்ற வேலைகளில் மூழ்கினேன். இன்று காலை மீண்டும் வாசிக்க ஆரம்பித்து மதியத்துக்குள் முழுவதும் முடித்துவிட்டேன். நடுவில் உணவில்லை தண்ணீரில்லை. மதியம் பன்னிரண்டு மணிக்கு முக்கியமான வேலை, வாசிக்கும் ஆர்வத்தில் சுத்தமாக மறந்துவிட்டேன். வாசிப்பை நிறுத்துவதே சிரமமாக இருந்தது.

சாரு இந்தக் கதையை அன்பிற்கு எதிரான கதை என்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. நாம் அன்பு என்று நம்பிக்கொண்டிருக்கும் வன்முறைக்கு எதிரான கதை என்று வேண்டுமானல் புரிந்துக் கொள்ளலாம்.

இப்படியொரு நாவல் இனிமேல் தமிழில் வருமா என்பது சந்தேகம் தான். முன்பெல்லாம் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையில் ஒரு பகுதியினர் ஒடுக்கப்படுவார்கள் அல்லவா? அந்த ஒடுக்கப்பட்ட பகுதியினரில் சிலர் தானாக முன்வந்து தாங்கள் கொண்ட நம்பிக்கைகாக தங்கள் உயிரையும் கொடுப்பார்கள். தொடக்க கால கிறிஸ்துவத்தில் இப்படி பல்லாயிரம் சம்பவங்கள் அரங்கேறின. அதில் ஒரேயொரு சம்பவத்தை மட்டும் சொல்லாம் என நினைக்கிறேன். 258ஆம் வருடம் வலேறியன் என்ற ரோமை பேரரசன் கிறிஸ்துவர்களை வதைத்தான். திருச்சபையின் சொத்துகளை சூரையாட நினைத்திருந்த போது இரண்டாம் சிக்ஸ்தூஸ் என்ற போப் திருச்சபையின் சொத்துகளை விற்று ஏழைகளுக்கு பகிர்ந்துக் கொடுத்தார். சொத்துகள் எதையும் கைப்பற்ற முடியாத வலேறியன் இரண்டாம் சிக்ஸ்தூஸை கொன்றுவிடுகிறான். போப்பின் உதவியாளரான லாரன்ஸையும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான். எப்படியென்றால் இரும்புக் கட்டிலில் லாரன்ஸை படுக்க வைத்து, கீழே விறகை மூட்டி தீ வைக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக லாரன்ஸின் சதை வேக ஆரம்பிக்கிறது. ஆனால் முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறார் லாரன்ஸ். பின் வலேறியனைப் பார்த்து என் ஒரு பக்கம் நன்றாக வெந்துவிட்டது, வேண்டுமானால் என்னைத் திருப்பிப் போட்டு வேக வைத்துக் கொள் என்று லாரன்ஸ் சொன்னதாக ஒரு பதிவு இருக்கிறது. இப்படியான முயற்சிதான் சாருவின் இந்நாவல்.

இந்நாவலின் வழியாக தான் நம்பிய கோட்பாட்டிற்காக உயிரையும் துச்சமாக நினைத்து தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்திருக்கிறார் சாரு. அன்பு குறித்த நம்பிக்கைகள் கட்டுடைக்கப்படும் அதிர்ச்சியுடன் இச்சமூகம் இப்புதினத்தைப் புசிக்கட்டும்.

வளன் அரசு

நாவல் கிடைக்குமிடம்:

https://tinyurl.com/yhvc8ush