“ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு”
சமகால எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் அன்பை பிழிந்து சாறு எடுத்துக்கொடுத்து கொண்டிருக்கும் தருணத்தில் அன்பைமறுசீராய்வுக்கு உட்படுத்திய “ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” நாவல் தமிழ் எழுத்துலகில் முக்கியத் தடம் என்பேன். இது போன்ற ஒரு படைப்பை இனி யாராலும் தரமுடியாது. சாருவின் பள்ளியிலிருந்து வருபவர்கள் கூட தொடத் தயங்கும் களம். சில எழுத்தாளர்கள் அன்பை உயிர் உள்ள ஜீவன்களில் கொட்டித்தீர்த்து விட்டு இப்பொழுது சடப்பொருட்கள், நகரங்கள் மீதெல்லாம் காட்டத் தொடங்கி விட்டார்கள். இப்படிபட்ட இடத்திலிருந்து அன்பை குற்றவிசாரணை செய்யும் சாருவை நாம் கொண்டாட வேண்டாமா?அவர் குரல் கொடுப்பது மிதிக்கப்படும் நம் குரல்வலைக்காக என்பது சரி இங்குள்ள சராசரிகளுக்கு புரியும் என்று தோன்றவில்லை.நாம் அன்பின் பெயரால் குடும்ப அமைப்பில் புரியப்படும் அடக்கு முறையை புனிதப்படுத்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இல்லை, அதற்கு பழக்கப்பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.
நேற்று “Ode to my father” என்ற கொரியப் படத்தை பார்த்தேன். படம் முடிந்தும் சில நிமிடங்கள் உறைந்து டிவியில் எழுத்து ஓடுவதை பார்த்து “ஷா என்னா ஒரு படம்” என்று சிலாகித்து கொண்டிருந்தேன். கதையின் சாரம் அன்புதான். யுத்தத்தில் தன் தந்தையை பிரிய நேரும் மகன் வாழ்நாள் முழுவதையும் தன் தாய் மற்றும் உடன் பிறப்புகளை காப்பாற்ற தந்தையின் ஸ்தானத்திலிருந்து தன்னை வதைத்து அவர்களை கரைசேர்த்து எப்படி முதுமையடைத்து செத்துப் போகிறான் என்பது தான் கதை. இதில் அன்பு என்ற பெயரில் அவன் வஞ்சிக்கப்படுகிறான். இது அவனுக்கே தெரியாது. இயக்குனர் சொல்ல வந்த கதையும் அதுவல்ல. சாருவின் சீடனாக அக்கதையை இப்படித்தான் நான் அர்த்தப்படுத்திக் கொண்டேன்.
ராசலீலாவில் வரும் கண்ணாயிரம் பெருமாளின் அப்பா மகளின் பிள்ளையின் காது குத்துக்கு பணம் கேட்டு எழுதும் கடிதத்திற்கு பதில் கடிதத்தில் “நானே கிடைக்கும் சொற்ப சம்பாத்தியத்தில் கரமைதுனம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ இப்படி மாசத்துக்கு ஒரு முறை எதோ ஒரு காரணத்தை சொல்லி பணம் கேட்கிறாய்” என்ற தொனியில் ஓர் பதில் கடிதம் எழுதுவான். நாவலில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி. இதையெல்லாம் படித்த நானே நெக்குறுகி அந்த கொரியப் படத்தை பார்த்தேன். அன்பு அந்த அளவுக்கு நம் சுயத்தை மளுங்கடித்து விடுகிறது.
இந்நாவலில் வரும் வைதேகி தான் பெருமாளுக்கு யாதுமே. அப்படி இருந்தும் அன்பு என்ற ஆயுதத்தை கொண்டு அவள் எப்படி எல்லாம் பெருமாளை வதைக்கிறாள் என்று அவளுக்கே தெரிவதில்லை.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரோ, இல்லை முழு குடும்பமுமோ இப்படி மாறி, மாறி ஒருவரை ஒருவர் வதைத்து கொள்வார்கள். இந்நாவலை படிக்கும் யாரும் இதை இனி செய்யத் தயங்கக் கூடும். நாவலை வாசியுங்கள் நான் சொல்வது புரியும்.
நாவல் கிடைக்கும் இடம்:
https://tinyurl.com/yhvc8ush