NFT – அராத்து – டிஜிடல் புரட்சி

அராத்து எழுதிய நோ டைம் டு ஃபக் என்ற நெடுங்கதை என்.எஃப்.டி. மூலம் முதல் பிரதி இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விற்றது.  அதுவும் விற்பனைக்கு வந்த ஓரிரு தினங்களில்.  அடுத்த பிரதிகளின் விலை பத்தாயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.  அதுவும் மிண்ட் பண்ணி இரண்டு தினங்களில் விற்றன.  இதுவரை பத்து பிரதிகள்.  ஆனால் என்.எஃப்.டி.யில் நூல் விற்பனை என்பது நான் நினைத்தது போல் அத்தனை சுலபம் அல்ல போல் தெரிகிறது.  நூலை வடிவமைக்க (வடிவமைப்பு மற்றும் இசை) இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும்.  அது தவிர, ஒரு நாளில் ஐந்து பிரதிகளைத்தான் மிண்ட் பண்ண முடியும்.  ஏனென்றால், நிறுவனத்தின் லிமிட் அவ்வளவுதான்.  ஐந்து பிரதிகளும் ஒரே நாளில் விற்று விட்டாலும் மறுநாள்தான் அடுத்த ஐந்து பிரதிகளை மிண்ட் பண்ண முடியும்.  அதிலும் ஒரு புத்தகத்தை மிண்ட் பண்ணுவதற்கு – அது சரி, மிண்ட் என்றால் என்ன?  கீழே:

Minting an NFT, or non-fungible token, is publishing a unique digital asset on a blockchain so that it can be bought, sold, and traded.

அவ்வளவுதானே, ஒரு நாளில் ஐந்து பிரதிகளை மிண்ட் பண்ணினால் போயிற்று என்றேன் சீனியிடம். 

அப்போதுதான் அடுத்த குண்டைப் போட்டார் சீனி.  ஒரு புத்தகத்தின் விலை எத்தனையோ அதில் பத்து சதவிகித்த்தை என்.எஃப்.டி.யிடம் கட்டணமாக்க் கொடுத்து விட வேண்டுமாம்.  அதாவது, என்னுடைய புதிய நாவல் A-செக்‌ஷுவலின் முதல் பிரதிக்கு ஒரு லட்சம் ரூபாய் விலை வைக்கிறேன் என்றால், பத்தாயிரம் ரூபாய் கட்டணத்தை நான் என்.எஃப்.டி.யிடம் கட்ட வேண்டும்.  இது கட்டணம் என்பதால் புத்தகம் விற்றாலும் விற்காவிட்டாலும் பத்தாயிரம் ரூபாய் எனக்குத் திரும்ப வராது.

அதற்கும் மேல் இன்னொரு குண்டு என்னவென்றால், ஒரு லட்சம் ரூபாய்க்கு அந்த முதல் பிரதி ஒரு வார காலத்துக்குள் விற்க வேண்டும்.  ஒரு வாரத்தில் விற்காவிட்டால் பத்தாயிரமும் போய் விடும்.  கோய்ந்தா!

இதையெல்லாம் ஏன் சீனி முன்னாலேயே சொல்லவில்லை?

சொல்லியிருந்தால் நீங்கள் A-செக்‌ஷுவல் நாவலை எழுத ஆரம்பித்திருக்க மாட்டீர்கள்.  மேலும், இதெல்லாம் புரியவில்லை என்று சொல்லி விடுவீர்கள். 

ஆக, இப்போது அராத்துவின் முதல் பிரதி 25000 ரூபாய்க்கு விற்றது என்றால் அதற்கு அவர் கட்டிய கட்டணம் 2500 ரூ.  ஆனால் அவருடைய பெயருக்கு அவர் நூல் தினமும் ஐந்து விற்று விடுகிறது.  ஒருவருக்கு ஒரு வாரம் வரை ஒரு பிரதி கூட விற்கவில்லை என்றால், அன்னாருக்கு 5000 ரூ. நஷ்டம் ஏற்படும். 

ஆக, இப்படி என்.எஃப்.டி. மூலம் நூல்களை விற்கக் கூடிய எழுத்தாளுமைகள் என்று தமிழில் மூவரைத்தான் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது.  அராத்து, அடியேன், ஜெயமோகன்.  மற்றவர்களும் முயற்சி செய்யலாம்.  விற்கவில்லை என்றால் கட்டிய கட்டணம் கை விட்டுப் போய் விடும். 

விரைவில் என் நாவல் A-செக்‌ஷுவலோடு வருகிறேன்.  அதில் உள்ள ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம் கூட என் இணைய தளத்தில் எழுதப்பட்டிருக்காது.  முற்றிலும் முற்றிலும் புதிய விஷயம்.  ஏன் அதையெல்லாம் தளத்தில் எழுதவில்லை என்றால், எழுதியிருந்தால் என் தலை போய் விடும்.  இப்போது ஏன் என்.எஃப்.டி.யில் எழுதுகிறேன் என்றால், என்னைத் தெரிந்தவர்கள் யாரும் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிப் படிக்க மாட்டார்கள்.  ஏன் இத்தனை தைரியமாகச் சொல்கிறேன் என்றால், இதுவரை அராத்துவின் நூலை 25000 ரூ. கொடுத்து வாங்கியரும், பத்தாயிரம் கொடுத்து வாங்கிய பத்து பேரும் அராத்துவுக்கு முற்றிலும் புதியவர்கள்.  ஒருவர் கூட சாரு வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை.  வட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏழைபாழைகள்.  பத்தாயிரமெல்லாம் அவர்களுக்குத் தாங்காது. 

இப்போது அராத்துவின் நூல் விற்பனையில் உலக அளவில் பதினாலாவது இடத்தில் உள்ளது.  விரைவில் பத்துக்குள் வரும்.

இன்னொரு விஷயம், இந்தக் கதையைப் படித்ததும் நான் சில விஷயங்களை சீனியிடம் சொன்னேன். அந்தக் கணத்தில்தான் இந்தக் கதையை என்.எஃப்.டி.யின் மூலம் வெளியிட வேண்டும் என்று அவர் முடிவு செய்தாராம். மகிழ்ச்சியாக இருந்தது. கவனியுங்கள், அவருடைய காதல் பற்றிய நாவலை என்னால் படிக்கவே முடியவில்லை என்று சொல்லி விட்டேன்.