ஒரு நாள்

காலை நான்கு மணிக்கு எழுந்து கொள்வேன்.  படுக்கையில் அமர்ந்தபடியே சில மந்திரங்களைக் கேட்பேன்.  பிறகு சில நிமிடங்கள் ப்ரம்மரி பிராணாயாமம் செய்து விட்டு வந்து பல் துலக்கி விட்டு கையோடு ஒரு கஷாயம் குடிப்பேன்.   சர்க்கரை, கொழுப்பு போன்ற பிரச்சினைகள் அணுகாமல் இருப்பதற்கான கஷாயம்.  உடனடியாக பூனைகளுக்கு உணவு கலந்து கொடுப்பேன்.  அடுத்து, பூனைகளின் மல ஜலம் சுத்தம் செய்வேன்.  அதற்கு ஒரு பதினைந்து நிமிடம் ஆகும். 

நாலரை ஆகி இருக்கும்.  பிறகு சௌந்தர் கற்பித்த யோகா மற்றும் பிராணாயாமம் செய்து முடித்தால் ஆறு மணி.  காஃபி.  பிறகு ஏழு மணி வரை படிப்பு.  ஏழு மணிக்கு மொட்டை மாடியில் கடல் காற்று வாங்கியபடி நடைப் பயிற்சி.  எட்டேகாலுக்குக் கீழே இறங்கி இட்லி வைத்து சாப்பாடு. 

மீண்டும் படிப்பு அல்லது எழுத்து.  பன்னிரண்டு மணிக்கு உடம்பு பூராவும் மூலிகை எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு, அரை மணி நேரம் ஊறிய பிறகு சீயக்காய் மற்றும் அரப்பு தேய்த்து குளிப்பேன்.  தலைக்கு எண்ணெய் போட்டுக் கொள்வதில்லை.  தலைக்குப் போட்டால் எனக்கு ஒத்துக் கொள்வதில்லை.  தினமும் சீயக்காய் போட்டுக் கொள்வதாலும் மூலிகை எண்ணெயாலும் உடம்பு தேவலோகத்துப் புஷ்பங்களைப் போல் மணக்கிறது.  (மற்ற விவரங்களை A-செக்‌ஷுவல் என்ற என் நாவலில் காண்க.)

பிறகு பழ உணவு.  மூன்றரை மணிக்கு மதிய உணவு தயாராகும்.  அதில் கொஞ்சமே கொஞ்சம் சாப்பிடுவேன்.  எழுத்து மற்றும் படிப்பு. இரவு பத்து மணி வரை இரண்டும் தொடரும்.  இடையில் இரண்டு முறை பூனைகளுக்கு சாப்பாடு போடுவேன். 

மற்றபடி வெளியுலகைப் பார்த்தே ஒரு மாதம் இருக்கும்.  பத்து மணிக்கு பூனைகளின் மலஜலம் எடுத்து சுத்தம் செய்வேன்.  பிறகு பிராணாயாமம் ஒரு இருபது நிமிடம் செய்து விட்டு உறக்கம். 

இதைத் தவிர ஒரு நாளில் வேறு எதுவுமே செய்வதில்லை.  இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கொக்கரக்கோவுடன் பேசுவேன்.  பேச ஆரம்பித்ததும் எங்கிருந்தோ அவந்திகாவிடமிருந்து குரல் வரும்.  தோ வர்றேம்மா என்று சொன்னபடி ஓடி விடுவேன்.  எனக்கு ஃபோன் வந்தது அவந்திகாவுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை.  ஆனாலும் அப்படித்தான் நடக்கும்.  சாட்சி கொக்கரக்கோ. 

கணக்குப் போட்டுப் பார்த்தால் சுமாராக ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் எழுதுகிறேன், படிக்கிறேன்.  தற்சமயம் பதினேழாம் நூற்றாண்டில் போர்த்துகலில் வாழ்ந்த மரியானா என்ற கன்னிகாஸ்த்ரி தன் ஃப்ரெஞ்ச் காதலனுக்கு எழுதிய காதல் கடிதங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  போர்த்துகீஸ் மொழியில் எழுதப்பட்ட மூலம் கிடைக்கவில்லை என்றாலும் ஃப்ரெஞ்சுக்காரர்கள் அதை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்து விட்டதால் ஆங்கிலத்தில் கிடைக்கிறது.    

இன்று மாலை நான்கு மணிக்கு ஹைதராபாத் செல்கிறேன்.  எந்த வேலையும் இல்லை.  வைன் அருந்துவதற்காகவும் கொக்கரக்கோவுடன் பேசுவதற்காகவும் மட்டுமே செல்கிறேன்.  இதைச் செய்யாவிட்டால் நான் செய்யும் வேலைக்குப் பைத்தியம் பிடித்து விடும்.  பகலில் சும்மாதான் இருப்பேன்.  நண்பர்கள் சந்திக்கலாம். ஏற்கனவே இரண்டு மூன்று நண்பர்கள் சந்திக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

charu.nivedita.india@gmail.com