அராத்துவின் புதிய சிறுகதை

அவர் எழுதுவது நன்றாக இருக்கிறதா, இல்லையா என்ற பேச்சுக்கே இடமில்லை; பாரம்பரியமான எழுத்தாளர்கள் யாவரும் அராத்துவை ஒரு எழுத்தாளராகவே ஒத்துக்கொள்வதில்லை. அப்புறம்தானே நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற பேச்சு. ஆனால் நான் உலக இலக்கியத்தை நன்கு வாசித்திருக்கிறேன். என் வாசிப்பு பற்றி நான் பெருமையாகவே சொல்லிக் கொள்ளலாம். எனக்கு ஒரு புத்தகத்தை அவசரமாகப் படிக்க வேண்டும். ஆனால் அதன் விலை எக்கச்சக்கம். எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்கும் இரண்டு மூன்று பேரில் ஸ்ரீராமும் ஒருவர். அவரிடம் சொன்னேன். ஒரு நிறுவனத்தில் உறுப்பினர் ஆகி அதைக் கடனாகப் பெற்றுக் கொடுத்தார். எல்லாம் மென்பிரதிதான். அதற்கு உறுப்பினர் கட்டணம் 500 டாலர். ஒரு வாரத்தில் எனக்கு உறுப்பினர் ஆக விருப்பம் இல்லை என்றால் 500 டாலரைத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். நேற்று இரண்டாவது நாள். இன்றைக்குள் முடிக்க வேண்டும். காலை எட்டரையிலிருந்து இரவு எட்டரை வரை படிக்கிறேன். ஐஏஎஸ்ஸுக்குப் படிப்பவர்களைப் போல் படிக்கிறேன். கசாயம் குடிப்பது போல் இருக்கிறது. உலகிலேயே நான் அதிகம் வெறுக்கும் வேலை படிப்பதுதான். ஆனால் இந்த நூலைப் படித்தே ஆக வேண்டும். படித்துக் கொண்டே குறிப்புகளும் எடுக்கிறேன்.

ஏன், புத்தகத்தை ஸ்கேன் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கேட்கலாம். ஸ்கேன் எடுக்கலாம். வேண்டாம் என்றுதான் எடுக்கவில்லை. சீக்கிரம் முடித்தால்தான் வேலை நடக்கும்.

அடிக்கடி சீனி கேட்பார், ஏன் நீங்கள் சுற்றுலா செல்லும்போது – கோவாவில், ஹைதராபாதில், ஆரோவில்லில், ஏற்காட்டில் எல்லாம் – எழுதுவதே இல்லை, படிப்பதே இல்லை? எப்போதும் இசை கேட்டுக் கொண்டும் குடித்துக் கொண்டும் இருக்கிறீர்கள்?

மேலே சொன்னேன் இல்லையா, அதுதான் காரணம். காலையில் எட்டரையிலிருந்து இரவு எட்டரை வரை படித்துக் கொண்டே இருந்தால் எப்படி சுற்றுலா செல்லும்போதும் எழுதுவது, படிப்பது? யாரோடும் பேசுவதில்லை. வெளியிலும் செல்வதில்லை. எப்போதும் படிப்பு, எழுத்து. அதனால்தான் சுற்றுலா செல்லும்போது அந்த இரண்டையும் செய்வதில்லை.

அந்த அளவுக்குப் படிக்கும் தகுதியில் சொல்கிறேன், அராத்துவை நம் தமிழ் எழுத்தாளர்கள் ஒத்துக் கொள்கிறார்களோ இல்லையோ அராத்து போல் எழுதுவதற்கு உலகிலேயே ஒன்றிரண்டு பேர்தான் இருக்கிறார்கள். பழையவர்களில் மிலன் குந்தேராவையும் புதியவர்களில் முராகாமியையும் சொல்வேன்.

அராத்துவின் முந்தைய சிறுகதையை – இல்லை, அதை நெடுங்கதை என்றே சொல்ல வேண்டும் – No Time to Fuck – எல்லோராலும் வாசிக்க முடியாது. பழமையில் ஒரு காலும் புதுமையில் ஒரு காலும் வைத்துக் கொண்டிருக்கின்ற டார்ச்சர் கோவிந்தன் போன்ற நண்பர்களே அந்தக் கதையைப் படித்து முகத்தைச் சுளித்தார்கள். ஆனால் என்னுடைய எழுத்தை ரசிப்பவர்களுக்கும், அராத்துவின் எழுத்தை ரசிப்பவர்களுக்கும் அந்தக் கதை வெகுவாகப் பிடித்திருந்தது. அது அராத்துவின் ஆகச் சிறந்த கதை. அதை என்.எஃப்.டி. மூலம் இதுவரை மூன்று லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள்.

ஆனால் அராத்து இப்போது எழுதியிருக்கும் எலி என்ற சிறுகதை எல்லோருக்கும் பிடிக்கும். வண்ணதாசனுக்கே பிடித்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன். மட்டுமல்லாமல் உலகின் சிறந்த நூறு கதைகளில் எலியும் ஒன்றாக இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

நேற்று மாலை அராத்து என்னிடம் பேசும்போது “ஒரு சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன், முடித்ததும் அனுப்புகிறேன்” என்றார். எனக்கு இப்போதெல்லாம் உங்கள் சிறுகதைகளைப் படித்தால் மன உளைச்சல் ஆகிறது என்றேன். ஏன் என்றார். “நீங்கள் எழுதுவது போல் என்னால் எழுத முடியவில்லை, பொறாமையாக இருக்கிறது, அதனால் மன உளைச்சல் உண்டாகிறது” என்றேன்.

அதற்கு அவர் சொன்ன பதிலை எழுதினால் தற்புகழ்ச்சி என்பீர்கள். அதனால் அதை விட்டு விடுவோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அராத்து நேற்று எழுதிய எலி என்ற சிறுகதை நம் இணையதளத்தில் வரும்.