பிரார்த்தனை

குஷ்வந்த் சிங் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். நூறு வயது வரை ஆரோக்கியமாக இருந்தார். நூறு வயது வரை தினமும் விஸ்கி அருந்தினார். அளவாக. உறக்கத்திலேயே இறந்தார். இறக்கும் அன்றைய இரவு கூட இரண்டு பெக் விஸ்கி அருந்தினார். இதெல்லாம் கூட முக்கியம் இல்லை. இறக்கும் வரை அவர் தன்னுடைய நகைச்சுவை உணர்வை இழக்கவில்லை. சிருஷ்டிகரத்தன்மையை இழக்கவில்லை. நுண்ணுணர்வை இழக்கவில்லை. அவர் ஒரு பரம்பரைப் பணக்காரர். இந்தக் கடைசித் தகவலை ஏன் சொல்கிறேன் என்றால், பணக்காரர்களுக்கு சிறுவயதிலிருந்தே கிடைக்கும் ஊட்டமும் அவர்களின் ஆரோக்கியத்துக்கு ஒரு காரணம். குஷ்வந்த் படித்தவர், எழுத்தாளர் என்பதால் நுண்ணுணர்வையும் இழக்கவில்லை.

ஒருவேளை நான் தொண்ணூறு வயதுக்கு மேல் வாழ்ந்தால் அருட்பெருஞ்சோதி மாதிரி பாடும் அவலம் எனக்கு ஏற்படக் கூடாது என்று என் நண்பர்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அம்மாதிரி ஒரு கதையை நான் எழுதக் கூடாது. அம்மாதிரி ஒரு கட்டுரையை நான் எழுதக் கூடாது. இப்போது என் நுண்ணுணர்வு எப்படி இருக்கிறதோ அப்படியே தொண்ணூறுக்கு மேலும் இருக்க வேண்டும். குறைந்த பட்சம், என் நுண்ணுணர்வு குறைந்தால் அதைக் குறை சொல்வதற்கு, இடித்துக் காட்டுவதற்கு, என்னை விமர்சிப்பதற்கு ஒரு குழாம் என்னோடு இருக்க வேண்டும். அவர்கள் பேச்சைக் கேட்கும் அளவு எனக்கு சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். எனக்காகப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

ஆனால் இளையராஜா ரசிகர்கள் எனக்கு செத்துப் போ கடிதங்களை எழுதுவார்கள். நிறைய எழுதுங்கள். நீங்கள் அப்படி எழுதுவதுதான் எனக்கான உங்கள் பிரார்த்தனையாக எடுத்துக் கொள்வேன். தொடங்குங்கள்…