அச்சு ஊடகங்களின் காலம்

வணக்கம் சாரு ஐயா,

என்னுடைய கேள்விக்கு உங்களுடைய தளத்தில் பதில் கூறியமைக்கு மிக்க நன்றி. உயிர்மை சிற்றிதழ் நான் வாசித்ததில்லை.காலச்சுவடு, நான்  கல்லாரியில் இளநிலை படித்த பொழுது தொடர்ச்சியாக வாசித்து வந்தேன். அந்த சமயத்தில் காலச்சுவடு எனக்கு ஒரு அறிவுப்பெட்டகமாகவே விளங்கியது.அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் சிலவற்றையும் வாசித்திருக்கிறேன்.

இப்பொழுது தொலைதூர வழியில் முதுநிலை பயில்வதால்  தொடர்ச்சியாக அதை வாசிக்க  இயலவில்லை. .ஆங்கிலத்தில், நிறைய பொதுவான விஷயங்களைப் பேசும் இணையதளங்கள் உள்ளன. தமிழில் அது போன்றவை குறைவாகவே உள்ளன. சந்தா தொகையும் ஆங்கிலத்தைப் போலவே மிகுதியாக உள்ளது. அருஞ்சொல் ஒரு விதி விலக்கு. போதாக்குறைக்கு பல்வேறு இணையதளங்களிலும் டெலிகிராம் போன்ற செயலிகளிலும் பதிப்பாளரின் அனுமதியின்றி  செய்தித்தாள்கள், இதழ்கள் pdf ஆக பதிவேற்றுகின்றனர். இதுவும் இதழ்களின் விற்பனையை பாதிக்கின்றது.

சுலபமாக இணையதளங்களில் வாசிக்க முடிந்தாலும் தரமான கட்டுரைகள், படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவர அச்சு ஊடகத்தாலே சாத்தியப்படும் என்று நினைக்கிறேன்.

த.செந்தமிழ்

அன்புள்ள செந்தமிழ்,

ஒரு நாவலை முடிக்க வேண்டிய கடுமையான பணியில் இருக்கிறேன்.  இருந்தாலும் உங்கள் கடிதத்தில் பல தவறான புரிதல்கள் இருப்பதால் உடனடியாக பதில் எழுதுகிறேன். 

சமீபத்தில் என் தோழி ஒருவர் ஃபோன் செய்தார்.  ”திட்டாதீர்கள், இரண்டு நாளாகத் தேடி விட்டேன், கிடைக்கவில்லை.  ஆலன் ராப் க்ரியேவின் கடற்கரை கதை இணையத்தில் எங்குமே கிடைக்கவில்லை.  லிங்க் தர முடியுமா?” பயந்து பயந்துதான் கேட்டார்.  லிங்க் கொடுக்கவில்லை.  ஆலன் ராப் க்ரியேவின் ஸ்பெல்லிங்கைச் சொன்னேன்.  கதையைக் கண்டு பிடித்து விட்டார்.  நன்கு படித்தவர்.  பெரிய வேலையில் இருக்கிறார்.  என்னுடைய தளத்தில் தேடல் என்ற இடத்தில் போய் ஆலன் ராப் க்ரியே என்று தட்டினால் ராப் க்ரியேவின் பெயரோடு ஸ்பெல்லிங்கும் சேர்ந்து வரும்.  அந்த விவரம் தெரியவில்லை. 

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், இன்றைய இளைஞர்களிடம் ஏதோ ஒன்று குறைகிறது.  அதுவும் இத்தனை வசதிகள் இருந்தும். 

இணையத்திலேயே நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு இரண்டு பிஹெச்டி செய்யும் அளவுக்குத் தமிழ் இலக்கியப் படைப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.  அழியாச் சுடர்கள் என்று ஒரு தளம் உள்ளது.  அதைப் படித்து முடிப்பதற்கு மட்டும் உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் போதாது.  அ. மாதவையாவிலிருந்து ஹெப்சிபா ஜேசுதாசன் வரை அத்தனை எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த படைப்புகளும் அத்தளத்தில் உள்ளன.  அழியாச் சுடர்கள் என்று ஒரு தளம் இருக்கிறது என்று எனக்கு எப்படித் தெரியும் என்று ஒருவர் கேட்கலாம்.  நானே அப்படிக் கேட்டுக் கொண்டுதான் தேடும் படலத்தை ஆரம்பித்தேன்.  அழியாச் சுடர்கள் என்ற தளம் பற்றி எனக்குத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.  ஆனாலும் தமிழில் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.  மௌனி என்று கூகிளில் தட்டினேன்.  இரண்டு நிமிடங்களில் அது அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் கொண்டு போய் விட்டது. 

புதுமைப்பித்தன் என்று தட்டுங்கள்.  அது தினமணியில் கொண்டு போய் விடும்.  தினமணியில் புதுமைப்பித்தனின் 99 கதைகளும் உள்ளன.  இப்படி சுமாராக 300 இணைய தளங்கள் உள்ளன.  நான் கிட்டத்தட்ட 90 அ-புனைவு நூல்கள் எழுதியிருக்கிறேன்.  அதில் ஒரு 40 நூல்கள் என் இணைய தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. 

தமிழில் படிக்க காசு செலவே இல்லை.  எல்லாமே இலவசம்தான். 

மேலும், அச்சு ஊடகங்களின் காலம் முடிந்து விட்டது என்றே நினைக்கிறேன்.  உதாரணமாக, ஹாருகி முராகாமியின் மென் விதவ்ட் விமன் என்ற நூல் என்னிடம் உள்ளது.  ஆனால் என் நூலகத்தில் தேட எனக்கு நேரமில்லை.  இணையத்தில் ஏகப்பட்ட இலவச நூலகங்கள் உள்ளன.  அதன் மூலம் மென் விதவ்ட் விமென் கிடைத்து விட்டது.  இப்படி எனக்குத் தேவையான பல நூல்களையும் இணைய நூலகங்களின் மூலம்தான் படித்துக் கொள்கிறேன். 

இன்றைய காலகட்டத்தில் அச்சு ஊடகங்களுக்கும் தரத்துக்கும் சம்பந்தமே இல்லை.  உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களை விதிவிலக்கு என்று வேண்டுமானால் சொல்லலாம். 

இணையம் ஒரு பொக்கிஷம்.  தங்கக் கிடங்கு.  தேடிப் பார்க்க வேண்டும்.

சாரு