இதெல்லாம் அபாண்டம் சாரு. நானா பலமுறை செய்தேன். ஒரே முறை சந்தித்தேன். அவ்வளவு தான். ஒரு அரங்கேற்றத்துக்கு நீங்கள் தலைமை தாங்குகிறீர்கள். சரி தலைவர் வருவாரேன்னு வந்தா நீங்கள் எப்போதும் போல முதல் வரிசையில் என்னுடனேயே உட்காருங்கள் என்றீர்கள். உலகளந்தானும் நானும் எவ்வளவோ மன்றாடினோம் நீங்கள் விடவில்லை. அது தான் உங்கள் பண்பு. நாங்க தான் வேண்டாம் வேண்டாம் என்கிறோமே கேட்டீர்களா(ஜெயலலிதா குரல்). அது தான் இங்கேயும் நடந்திருக்கிறது. அவங்க ஒரு நான்கு பேரை கூப்பிட்டார்கள். அதோடு முடிந்திருக்கும். பிள்ளையையும் கிள்ளி விட்டு தாளாட்டவும் செய்தால் எப்படி சாரு?
வினித்.
வினித்தின் இந்தக் குற்றச்சாட்டுக்கும் இப்போது பதில் எழுத வேண்டியிருக்கிறது. அன்பு நாவலிலேயே எழுதி விட்டேன். ஆனால் உங்களில் பலரும் அந்த நாவலைப் படிக்கவில்லை என்று யூகிப்பதால் மறுபடியும் எழுதுகிறேன். அன்பு நாவலைப் படித்த வினித்தே திரும்பத் திரும்ப நோண்டுவதால் நானும் திரும்பத் திரும்ப எழுத வேண்டி வருகிறது.
அன்னார் குறிப்பிடும் நிகழ்ச்சியில் அன்னாரை என் பக்கத்தில் வந்து அமரச் சொன்னது நான்தான். ஆனால் மனிதர்களுக்குக் காமன்சென்ஸ் வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் நான். அதிலும் என் நண்பர்களுக்கு அதிகம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். சீனி பெயரைச் சொன்னால் அவந்திகா கொலைவெறி ஆகி விடுவாள் என்பது பற்றி இதுவரை ஆயிரம் முறை எழுதி விட்டேன். ஏனென்றால், ஒரு உத்தம புருஷனாக இருந்த என்னை சீனிதான் ஊற்றி ஊற்றிக் கொடுத்துக் கெடுத்து விட்டார் என்று அவள் நம்புகிறாள். ஆனால் நடுவாந்திரமாக மது அருந்தும் சீனியைக் கொலைகாரத்தனமாக மது அருந்தும்படி தூண்டுபவன் அடியேன்தான். ஏனென்றால், என் அளவு எட்டு ரவுண்ட். அவரது நான்கு. நான் அப்படித் தூண்டுவதற்குக் காரணம், எனக்குப் பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும். சீனியின் அம்மா சொல்வார்களாம், உன்னால்தான்டா சீனிவாசன் உன் நண்பர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று. (முழுப் பெயரையும் சொல்லி மகனை அழைக்கும் ஒரே தாய் அவர்தான்!) ஆனால் அந்தத் தாயைப் பார்த்தால் நான் சொல்ல வேண்டும், அப்பேர்ப்பட்ட உங்கள் மகனையே கெடுப்பது நான்தான் அம்மா என்று. இதுவாவது பரவாயில்லை, ஸ்ரீராமனைப் போல ஓர் ஒழுக்க சீலனாக வாழ்ந்து (!) கொண்டிருந்த என்னை ஸ்த்ரீலோலனாக மாற்றியதும் சீனிதான். இது அவந்திகாவின் உறுதியான கருத்து. இதையெல்லாம் பார்த்து ஒரு கண்ணகி தெய்வம் என்ன செய்யும்? அதைத்தான் அவந்திகா செய்கிறாள். சீனியின் பெயரைக் கேட்டாலே அவள் கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும்.
இது அத்தனையும் வினித்துக்குத் தெரியும். என் பக்கத்தில் வந்து உட்கார்ந்ததும் வினித் சொன்னது என்ன தெரியுமா? ”நாளைக்கு நானும் அராத்துவும் பொன்னியின் செல்வன் படத்துக்குப் போறோம். நிச்சயம் அராத்து அது பற்றி எழுதுவார். அப்புறம் என்ன, riot தான். அவர் எழுதிட்டா அவ்ளோதான். முடிஞ்சுது கதை.”
வீட்டுக்கு வந்த்தும் அவந்திகா என்னிடம் சொன்னது: டேய், யார்ரா அவன் அராத்து? அவன் என்ன பெரிய புடுங்கியாடா, மயிரு? யார்ரா இந்த வினித்து? இவனுங்கள்ளாம் என்னடா நினைச்சுக்கிட்டிருக்கானுங்க… (கெட்ட வார்த்தையும் பிரயோகித்தாள், இங்கே வேண்டாம்.) இந்தப் புடுங்கி எழுதிடுவானாம். படமே புடுங்கிக்குமாம். ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாத வெட்டிப் பயலுங்க…
(இப்படியே கால் மணி நேரம்.)
சும்மா கிடக்கும் நாயைக் கல்லால் அடிக்கும் செயல்தானே? அப்படியானால் என்ன அர்த்தம்? நான் எழுதுவது எல்லாவற்றையும் படித்து விட்டு அதை சூத்து வழியாகக் குசுவாக விட்டு விட்டால் இப்படித்தான் திரும்பத் திரும்ப ஒரே செயலை செய்யச் சொல்லும், இல்லையா?
இன்னொரு முறை. நான் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே ’அந்த வெட்டிப் பயல்’ வருகிறானா என்று கேட்டுக் கொள்வாள் அவந்திகா. நானும் செவ்வனே ”சீனிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவன் கிடக்கிறான் வெட்டிப் பயல்” என்று திட்டி விட்டு (இன்னும் திட்டுவேன், இங்கே வேண்டாம்) ”குமரேசனுடன் போகிறேன், செல்வாவுடன் போகிறேன்” என்று நல்ல பிள்ளைகளின் பெயரைச் சொல்லி விட்டுக் கிளம்பி விடுவேன்.
ஒருநாள் ஆரோவில் கிளம்புகிறோம். காரை என் வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்து விட்டார் வினித். தப்பு. காரை வெளியிலேயே நிறுத்த வேண்டும். வினித்தைப் பார்த்தாலே அவந்திகாவுக்கு சீனியின் டபுளைப் பார்ப்பது போல் தோன்ற ஆரம்பித்து விட்டது. காரை வாசலில் நிறுத்திய வினித்திடம் நான் – வினித் எப்படிப்பட்ட ஆள் என்பதை மறந்து விட்டு – நீங்கள் முன்னாடி உட்காருகிறீர்களா, நான் உட்கார வேண்டுமா என்று கேட்டுத் தொலைத்து விட்டேன். வினித்திக்கு சீனியைப் போலவே குரல் பெரிது. “இல்லை சாரு, முன்னால் அராத்து உட்காருவார்.” பக்கத்தில் நிற்கிறாள் அவந்திகா. என்னை வழியனுப்புவதற்காகக் கீழே வந்திருக்கிறாள்.
திரும்பி வந்ததும் விவாகரத்து நோட்டீஸ் கையில் கொடுக்கப்படும் என்று நினைத்தேன். எதுவும் நடக்கவில்லை.
இதெல்லாம் பரவாயில்லை. அவந்திகா இலக்கியம் படிக்காதவள். இலக்கியம் படித்தவர்களின் நிலை எப்படி இருக்கிறது தெரியுமா? அன்பு நாவலில் விலாவாரியாக எழுதியிருக்கிறேன். வினித் செய்யும் காரியம் என்னவென்றால், அன்பு நாவலை அப்படியே என்னை இங்கே திரும்பவும் எழுதச் செய்கிறார். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இலக்கியம் படித்த ஒரு நண்பர் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு ஐநூறு முறை சொல்லி என் மனநிலையே பாதிக்கப்பட்டு ஒருநாள் மது அருந்தி விட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டு விட்டேன். அதையும் அந்த நண்பர் விடியோ எடுத்து எனக்கு அனுப்பி என்னை மகிழ்வித்தார். என்ன சொல்வார் தெரியுமா? சீனியால்தான் எனக்கு புக்கர் கிடைக்க மாட்டேன் என்கிறது. சீனியால்தான் எனக்கு நோபல் கிடைக்க மாட்டேன் என்கிறது. ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவிலேயே மார்ஜினல் மேன் பற்றிப் புகழ்ந்து எழுதியும் புக்கர் கிடைக்காததற்குக் காரணம் சீனியின் நெகடிவ் வைப்தான். அந்த நெகடிவ் வைபின் காரணமாகத்தான் நீங்களும் தொடர்ந்து எல்லோரைப் பற்றியும் நெகடிவாகவே எழுதிக் குவிக்கிறீர்கள். உங்களை விட்டு எல்லோரும் விலகி ஓடுவதற்குக் காரணமே சீனியின் நெகடிவ் வைப் உங்களையும் தொற்றி விட்டதுதான். பாருங்கள், உங்களோடு நெருங்கிப் பழகிக் கொண்டிருந்த விஞ்ஞானி கிருஷ்ணமூர்த்தியையும் விரட்டி விட்டீர்கள். சீனியின் நெகடிவ் வைப் உங்களைத் தொற்றியதுதான் அவர் உங்களை விட்டு ஓடியதற்கும் காரணம். இத்தனை ஏன்? அவந்திகா மட்டும் உங்களோடு இல்லையென்றால் – ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – சீனி உங்களுக்கு ஊற்றி ஊற்றிக் கொடுத்து உங்களைக் கொன்று விடுவார். அவந்திகாவின் காரணமாகத்தான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்.
இதைச் சொன்னது அவந்திகா போல் படிக்காதவர் இல்லை. என்னைக் கரைத்துக் குடித்தவர். உலக இலக்கியத்திலும் போதுமான அளவுக்குப் படித்தவர். சீனி மட்டும் உங்களோடு இல்லாவிட்டால் நீங்களும் ஒரு எஸ்.ரா.போல, ஒரு ஜெயமோகன் போல நல்லபடியாக வாழ்ந்திருப்பீர்கள். இப்போது ஜெயமோகன் நடந்தால் அவர் கூடவே இருபது பேர் நடப்பது போல் உங்கள் பக்கம் முப்பது பேர் நடந்திருப்பார்கள். இப்போதோ உங்கள் பக்கம் சீனி மட்டும்தான் நடக்கிறார். எப்படி வீணாய்ப் போய் விட்டீர்கள் பாருங்கள்.
இதையெல்லாம் நான் இணைய தளத்தில் எழுதி விட்டேனா? உடனே நண்பர் என்ன சொன்னார் தெரியுமா? சாமி சத்தியமாக இதையெல்லாம் நான் சொல்லவே இல்லை என்கிறார்.
அவர் பொய் சொல்லவில்லை. அவர் சொல்லவில்லை என்று அவர் நம்புகிறார். அவ்வளவுதான். அவர் சொன்னது அவருக்கு சுத்தமாக மறந்து போயிற்று. நானாக இட்டுக் கட்டவில்லை.
அதிலிருந்து அவந்திகா சீனி மீது காண்டாக இருப்பது பற்றிக் கவலை கொள்வதை நிறுத்தி விட்டேன். புத்திஜீவிகளே இப்படி இருக்கும்போது இலக்கியம் படிக்காத ஒரு பிராட்டி இப்படி இருப்பதில் என்ன ஆச்சரியம்?
இனிமேலும் வினித் ஏதாவது எழுதினால் பதில் சொல்ல மாட்டேன். இதுவே கடைசி. வேறு வேலை இருக்கிறது.