ஆர்த்தோவும் ஜெயமோகனும்…

சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இரவில் நான் Cradle of Filth என்ற பாப் குழுவின் Nymphetamine என்ற பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். க்ரேடில் ஆஃப் ஃபில்த் எனக்கு மிகவும் பிடித்த குழு. அடித் தொண்டையிலிருந்து அலறுவார் பாடகர். சாஸ்த்ரீய இந்திய இசை கேட்ட செவிகள் பிய்ந்து விடும். செவிகளிலிருந்து ரத்தம் வருவது போல் இருக்கும். அதுதான் இசை என்கிறார் ஆர்த்தோ. ஆர்த்தோவின் கோட்பாடுகள்தான் இம்மாதிரி இசைக்கான உந்துதல் என்பதை இன்று இசை வல்லுனர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆர்த்தோ குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தார், ஐரோப்பியர்களுக்கு அலறத் தெரியவில்லை, கத்தத் தெரியவில்லை என்று. அதனால்தான் அவருடைய நாடகங்களில் அலறல் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது.

நிம்ஃபடமைன் பாடலை ஜெயமோகன் கேட்டால் அவர் அதை எப்படி எதிர்கொள்வார் என்று தெரிந்து கொள்ள அந்த இரவில் எனக்கு ஆசையாக இருந்தது. ஏனென்றால், அவரது ரசனை இந்தியப் பாரம்பரியத்திலிருந்து வருகிறது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பன்னிரண்டு மணி சுமாருக்கு அந்த இசையை அவருக்கு அனுப்பி வைத்தேன். காலையில் நான் ஐந்து மணிக்கு எழுந்து பார்த்தால் ஒரு நீண்ட கடிதம். க்ரேடில் ஆஃப் ஃபில்த் பற்றியும் அதை ஒத்த இசை பற்றியும் ஒரு அற்புதமான கடிதம் அது. “என்ன இது, நீங்களும் என்னைப் போல் அதிகாலையில் எழுந்து கொள்பவரா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். இன்னும் தூங்கவே போகவில்லை. இனிமேல்தான் போக வேண்டும், குட் நைட் என்றார்.

இப்போது ஆர்த்தோ பற்றிய நாடகத்தை முடித்து விட்டு ஜெயமோகனுக்கும் அனுப்பத் தோன்றியது. இலக்கிய ரசனையில் நானும் அவரும் எதிரெதிர் துருவம் என்பதைத் தமிழ்நாடே அறியும். ஆனால் ஆர்த்தோ நாடகம் அவருக்குப் பிடிக்கும் என்று உள்மனம் சொன்னது. பிடிக்காமல் போனாலும் விவாதிக்கலாமே என்ற எண்ணத்தில் அனுப்பினேன். ஏன் அவருக்குப் பிடிக்கும் என்று தோன்றியது என்றால், ஆர்த்தோ முற்று முழுதாக ஐரோப்பிய சிந்தனையை, ஐரோப்பியக் கலையை நிராகரித்தவர். அவர் ஏற்றுக் கொண்டது ரேம்போ, எட்கர் ஆலன் போ, நெர்வால் போன்றவர்களை மட்டுமே. யாரெல்லாம் சமூகத்திலிருந்து மனநோயாளிகள் என்று ஒதுக்கப்பட்டார்களோ அவர்களைத்தான் அவரால் வாசிக்க முடிந்தது. அவர் ஏற்றுக் கொண்ட ஒரே ஓவியர் வான் கோ. Van Gogh the man suicided by society என்ற அவருடைய புத்தகம் அவர் எழுதிக் குவித்தவற்றில் மிக முக்கியமான ஒன்று.

ஆர்த்தோவின் சிந்தனை கிழக்கத்திய சிந்தனையின் பக்கமே வேர் கொண்டிருந்தது. பிராணாயாமம் என்ற பெயர் தெரியாமலேயே மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டார். தன் நாடகங்களிலும், நாடக ஒத்திகைகளிலும் அதைப் பயன்படுத்தினார். அக்குபஞ்சரை உபயோகித்துக் கொண்டிருந்தார். பிரக்ஞையை வலுப்படுத்துவதன் மூலமாக நாம் நெருப்பிலும் நடக்கலாம், நீரிலும் நடக்கலாம் என்று நம்பினார். வெறும் நம்பிக்கை இல்லை. அதை ஒரு தத்துவமாகவே பயின்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இந்தியா வராமல் மெக்ஸிகோ போய் விட்டார். இமயம் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவருடைய மூச்சுப் பயிற்சியையும் பிரக்ஞை பற்றிய சிந்தனைகளையும் பைத்தியக்காரனின் உளறல் என்று நினைத்தார்கள் ஐரோப்பியர். ஐரோப்பிய வாழ்க்கையையும் தத்துவத்தையும் கலையையும் முற்றாக வெறுத்த ஆர்த்தோவுக்குத் தன் உடல் நலனைப் பேணுவதற்கு 1930களில் சித்த மருத்துவர்களோ யோகாச்சாரியார்களோ கிடைக்கவில்லை. அவருக்குக் கிடைத்தது ஐரோப்பிய போதை மருந்து. Laudanum என்று பெயர். மார்ஃபைன் கலந்த வலி நிவாரணி. அவருடைய உடம்பு பூராவும் வலித்துக் கொண்டே இருந்தது. ஆர்த்தோவுக்கு நாலு வயதில் வந்த மூளைக் காய்ச்சலுக்கு அவர் தந்தை சிறிய அளவிலான மின்னதிர்ச்சி கொடுத்தார். அதுதான் அப்போது அவர்களுக்குக் கிடைத்த ஒரே மருத்துவம். அதன் காரணமாகவே ஆர்த்தோவை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது உடல் உபாதை. அதிலிருந்து மீள்வதற்கு லாடனம். ஆனால் அதுவே அவரைக் கொன்று விட்டது. ஐரோப்பிய வாழ்வையே வெறுத்த ஆர்த்தோவுக்குக் கிடைத்தது ஐரோப்பிய போதை மருந்துதான்.

ஆர்த்தோ இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர் உடல் உபாதை தீர்ந்திருக்கும். அது நடக்கவில்லை.

எனக்கும் ஆர்த்தோவுக்கும் உள்ள வித்தியாசம் அவர் வலியையும் வேதனையையும் எழுத்தாக்கினார். நான் இந்தியாவில் இருப்பதால் கொண்டாட்டத்தை எழுத்தாக்கினேன்.

என் நாடியைப் பார்த்த சித்த மருத்துவர் பாஸ்கரன் உங்கள் பிரச்சினைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம், தூக்கமின்மை என்றார். ஐயோ, நான் நன்றாகத் தூங்குவேனே என்றேன். ஏனென்றால், நான் படுத்த உடனேயே தூங்கி விடுவேன்.

”கனவுகள் இல்லாமலா?” என்று கேட்டார்.

“கனவுகள் இல்லாமல் தூங்கினதே இல்லை. அதுவும் கொடூரமான கனவுகள்.”

நான் தூங்கும் போது பேய் மாதிரியெல்லாம் ஏதேதோ அலறுகிறேன் என்பார்கள் நண்பர்கள். ஒரு நண்பர் ஒலிப்பதிவே எடுத்துக் காண்பித்தார். அன்றைய இரவு நான் அலறியது ஞாபகம் இருந்தது. பேய்கள் என்னைத் துரத்தின. நானும் பேய் மாதிரி அலறினேன். காலையில் ஒலிப்பதிவைக் கேட்ட போது எனக்கு பயத்தில் மயிர்க் கூச்செரிந்து விட்டது. அப்படிப்பட்ட கொடுங்கனவுகள்.

சித்த மருத்துவர் பாஸ்கரன் ஒரு பொடி கொடுத்தார். அந்தப் பொடியை சாப்பிட ஆரம்பித்ததிலிருந்து இப்போது அடித்துப் போட்டது போல் தூங்குகிறேன். ஒன்றும் ரகசியம் இல்லை. மருதம்பட்டைப் பொடி என்றார். ஆயிரம் வருஷத்திய மரம், நீங்கள் வேலூர் வரும்போது காண்பிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஆர்த்தோவின் துரதிர்ஷ்டம் அவருக்கு மூலிகைகள் கிடைக்கவில்லை; Laudanumதான் கிடைத்தது. ஆர்த்தோ சாதாரணமாகச் சாகவில்லை. லாடனத்தினாலும் அவருக்கு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்காமல் போன போது லாடனத்தையே அதிகமாகப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அதனால்தான் ஜெயமோகனுக்கு ஆர்த்தோ நாடகம் பிடித்தாலும் பிடிக்கலாம் என்று நினைத்தேன். ரொம்பவும் பிடித்து விட்டது என்பது ஜெயமோகனின் நீண்ட பதிலிலிருந்து தெரிந்தது. நேற்று இரவு கிடைத்தது கடிதம்.

அதையே முன்னுரையாக வைத்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு அது ஒரு அறிமுகமாகவும் இருந்தது. தான் எழுதிய எதிர்வினை பற்றி ஜெயமோகன் இரண்டு வாட்ஸப் மெஸேஜும் அனுப்பினார். அதுவும் நம் கவனத்துக்கு உரியதுதான்.

I can write an intellectually perfect one later, but this spontaneous emotion is more important. Plays are meant for emotional connectivity…

It was a sudden response. Written within minutes after finishing the play. It was spontaneous but not intellectually perfect. If you feel it’s good, you can use it.

நான் ஜெயமோகன் அனுப்பிய உடனடி எதிர்வினையையே முன்னுரையாக வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அவர் சொல்வது போல நாடகம் என்பது உடனடி எதிர்வினைக்கு ஆன கலை. அவர் இதை விடவும் செறிவாக இரண்டொரு நாளில் எழுதி அனுப்புவார். ஆனால் அது வேண்டாம் என்று சொல்லி விட்டேன். இதுதான் நாடகத்துக்குத் தேவை.

கோவையில் விஷ்ணுபுரம் விழாவில் எனக்கு விருது அளிக்கப்பட்ட தருணத்தை விடவும் ஜெயமோகனின் முன்னுரை எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. ஜெயமோகனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆர்த்தோ நாடகத்துக்கு ஜெயமோகன் எழுதிய பதிலை இங்கே பதிவேற்றம் செய்கிறேன்.