ஆர்த்தோவின் வாழ்வில் ஒரு வரலாற்று அபத்தம் நிகழ்ந்தது. பின்நவீனத்துவ ஃப்ராய்டியர் லக்கான் ஆர்த்தோவை மனநோயாளி என்றும், பொருளற்றவற்றை எழுதுபவர் என்றும் சொன்னார். இன்று ஆர்த்தோ மானுடத்தின் ஒரு குரல். இன்று கல்வித்துறையின் சில பழைய ஆசாமிகளுக்கு மட்டுமே லக்கான் முக்கியமானவர். நவீன நரம்பியலின் வருகைக்குப் பின் முற்றிலும் அர்த்தமற்ற சொற்றொடர்களின் குவியலாகவே லக்கான் பார்க்கப்படுகிறார்.
அறிவு காலாவதியாகும்போது சாஸ்வதமாக நின்றிருக்கும் இன்னொன்று உள்ளது. பித்தின் வழியாக மட்டுமே சென்றடையத்தக்க ஓர் இடம். அதைச் சொல்ல உங்கள் நாடகத்தால் முடிந்துள்ளது. உங்கள் முக்கியமான படைப்புகளில் ஒன்று இந்த நாடகம். வாழ்த்துக்கள்.
உங்கள் வழக்கமான ஆசிரியர் ஊடுருவல் கொண்ட ’மெட்டாஃபிக்ஷன்’ பிரதிதான் இது. ஆனால் கூடுதலாக பலவகையான வரலாற்று ஊடுருவல்கள் உள்ளன. முக்கியமாக இந்நாடகத்தின் மையமென்பது வரலாறு, சிந்தனை, ஆன்மிகம் அனைத்திலும் பித்து எனும் அதீத நிலைக்கு இருக்கக்கூடிய இடம் பற்றிய ஒரு தரிசனம்.
தொன்மையான குகை ஓவியங்களில் மானுடனின் கலை வெளிப்பாடு உள்ளது. கலை வெளிப்பட்டு நீண்ட காலம் ஆன பின்னரே சிந்தனை வெளிப்பாடு தொடங்கியது. கலையை விளக்கும் பொருட்டே சிந்தனை உருவானது என்றுகூட சொல்லலாம். அந்த ஓவியங்களை ஆராய்பவர்கள் அவை காளான்கள், சிலவகை பூஞ்சைகள், சிலவகை மூலிகைகள் அளித்த போதையின் வழியாக அடையப்பட்ட நிலையில் அவை உருவாகியிருக்கலாம் என்கிறார்கள்.
தொன்மையான குகை ஓவியங்கள் அனைத்திலுமுள்ளவன் ‘வெறியாட்டு’ ஆடும் பூசாரி. அவனே தொன்மையான கலைஞன், சிந்தனையாளன், மந்திரவாதி, சூனியக்காரன், ஒவியன், பாடகன், நடனக்கலைஞன், கவிஞன் எல்லாமானவன். அவனிடமிருந்தே எல்லாம் தொடங்கின. அவனே வேதங்களை எழுதினான். சோம சுரா பானங்களே வேதங்களை உருவாக்கின. தொல்வேதங்கள் அனைத்துமே பித்து கொண்டவை.
ஆர்த்தோ அவர்களில் ஒருவர். அந்தத் தொல்பூசாரியின் வம்சம். தொல்பூசாரிகள் தெய்வமென கொண்டாடப்பட்டனர். அவர்களின் உடலுருவமே பின்னாளில் தெய்வ உருவம் ஆகியது. பித்தின் வடிவான நிலவு சூடி, பித்தின் வடிவான எருக்குமாலை அணிந்து, யோகமும் பித்தும் ஒன்றேயான யோகேஸ்வரனாகியது. பிஞ்ஞகன் பித்தன் என பண்டையோர் கொண்டாடி வணங்கினர். எந்தப் புள்ளியில் அந்த ஞானியாகிய பிஞ்ஞகன் வதைக்கவேண்டிய, ஒழிக்கவேண்டிய ஒருவனாக ஆனான்? எப்போது அவனுக்கெதிராக மொத்த சமூகமும் மாறியது? அது அரிஸ்டாட்டிலிய யதார்த்தவாதம் தொடங்கும்போதே தொடங்கிவிட்டது. மெல்ல மெல்ல ஓங்கி ஐரோப்பிய மறுமலர்ச்சியின் மாபெரும் தர்க்கப் பேரலையின்போது சமூகப் பொதுநியதியாக வேரூன்றியது. அந்த சமூகப் பொதுநியதியே ஆர்த்தோவை சித்திரவதை செய்கிறது.
கொடிய காட்சிகள் வழியாகச் செல்லும் நாடகத்தில் ஐரோப்பாவின் அந்த தர்க்க சிந்தனையின் நூறு நூறு கைகள் எழுந்து ஆர்த்தோவை வதைப்பதன் சித்திரத்தை அளிக்கிறீர்கள். ஊடே ஊடுருவும் தொல்குடியின் பாடகன் ஆர்த்தோ எவர் என சுட்டுகிறான். அதை நாடக இறுதியில் நாடக ஆசிரியனும் வேறொரு வகையில் சொல்கிறான்.
ஐரோப்பாவில் சமூகத்தை ஒரு மிகச்சரியான இயந்திரமாக ஆக்கிவைத்திருக்கிறார்கள். பித்து என்பது மேகம். மேகத்தின் வடிவமாற்றத்தை, அதன் பாதையை இயந்திரம் பின் தொடரவே முடியாது. முன்பொருமுறை நீண்டகாலம் ஓடாத ஓர் இயந்திரத்தின்மேல் ஒரு மலர்க்கொடி படர்ந்திருப்பதைக் கண்டேன். அந்த இயந்திரம் எப்படி ஓடினாலும் அந்த கொடி அழிவது உறுதி. அவை இசைந்துபோகவே முடியாதென எண்ணினேன்.
வரலாறு என்பதே தர்க்கம் என்பது பித்தின்மீது தொடுத்த போரும், அறுதியாக அதை அழித்தொழித்ததும்தானா என்ற வினாவுடன் வந்து நின்றிருக்கிறது இந்த நாடகப்பிரதி. காலந்தோறும் வேட்டையாடி அழிக்கப்பட்ட எல்லா பழங்குடிகளும், எல்லா மெய்ஞான மரபுகளும் தர்க்கபுத்தி என்ற பெரும்பூதம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்சொல்ல முடியாதவைதான். இன்று ஐரோப்பா டாலியை, ஆர்த்தோவை, வான்கோவை கொண்டாடுகிறது. ஏனென்றால் அவர்கள் அந்த பித்தர்கள் மறைந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை தர்க்கபூர்வமாக விளக்கிவிட்டார்கள். கல்வித்துறைக்குக் கொண்டுசென்றுவிட்டார்கள். கொள்கைகளும் கோட்பாடுகளும் உருவாகிவிட்டன. அது வரை மூளையில் மின்னதிர்ச்சிதான் அளிக்கப்படும்.
இன்றைய நூற்றாண்டில் உலகமே ஒன்றாகிவிட்டிருக்கிறது. உலகத்தின் எல்லா இடங்களிலும் ஐரோப்பாவின் வெல்ல முடியாத மாபெரும் தர்க்கபுத்தி கொடூரமான டிராகன் போல சுற்றிச் சுற்றிப் படர்ந்து அனல் உமிழும் நாவும் எரியும் கண்களுமாக நிலைகொண்டுள்ளது. கலை, இலக்கியம், ஆன்மிகம் என எல்லா பித்துகளிடமும் அது நூற்றொரு கேள்வி கேட்கிறது. ஒரு கேள்விக்கு பதில் பிழையானாலும் தூக்கி காளவாயில் எறிகிறது. தர்க்கத்தின் இரும்பு யுகம். அதனுள் ஊடுருவும் ஒரு பித்தின் குரலாக தன்னைத்தானே பலவாறாக சிதைத்துக்கொண்ட பித்து வடிவுடன் இந்நாடகம் அமைந்துள்ளது.
நடராஜ குரு 1970களில் அமெரிக்காவில் ஹிப்பிகளிடம் மட்டுமே ஆன்மிகம் பேசமுடியும் எனக் கண்டடைந்தார். அவர்களுடனேயே வாழ்ந்தார். நித்ய சைதன்ய யதியை ஹிப்பிகளுடன் வாழும்படி பணித்தார். அமெரிக்காவின் இரும்புத் தர்க்கத்திற்கு எதிரான குறுகிய காலக் கலகம் ஹிப்பி இயக்கம். ஆனால் அதன்பின் அப்படியொன்று நிகழவில்லை. உலகம் தொழில்நுட்பத்தின் முன் தலைவணங்கியது. முன்னாள் ஹிப்பி உருவாக்கிய ஆப்பிள் நிறுவனம் அதற்குக் கண்கூடான சான்று. தொழில்நுட்பம் என்பது தர்க்கத்தின் பருவடிவம்.
இன்றும் ஒரு எதிர்க்குரலாக பித்துக்கான ஓர் அறைகூவல் கலையில் இருந்து எழுந்துகொண்டிருக்கிறது. Nonsense பேசுவதற்கான உரிமையே கலைஞன் கோரும் முதல் சுதந்திரம் என்று நான் எண்ணுவதுண்டு. அரசியல்சரிநிலைகள், விரிவான அலசல்கள், ஆய்வுகள் ஆகியவை அளிக்கும் மூளைச்சலிப்பை காண்கையில் முற்றிலும் அர்த்தமில்லாமல் கூச்சலிடவேண்டும் என்று தோன்றுவதுண்டு. இந்நாடகம் வழியாக ஆர்த்தோவில் அந்த மனநிலையை கண்டடைந்தேன். அவருடைய இடத்தில் தன்னைப் படுக்கவைத்து இந்த யுகத்தின் வதையை வாங்கிக்கொள்ள ஒவ்வொரு கலையுள்ளம் கொண்டவனையும் இந்நடகம் அழைக்கிறது.
வாழ்த்துக்கள்…
ஜெயமோகன்