ஆர்த்தோ நாடகத்தைக் காண்பதற்கான ஒரு முன் தயாரிப்பு

Antonin Artaud: The Insurgent

ஆர்த்தோ பற்றிய நாடகத்தை சில நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன்.  அவர்கள் அனைவருக்குமே நாடகத்தைப் படித்ததும் ஒரு ‘இன்ப அதிர்ச்சி’ ஏற்பட்டது என்றே அவர்களின் எதிர்வினையிலிருந்து தெரிந்து கொண்டேன்.  வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு ஆச்சரிய உணர்வு அவர்கள் பேசும் போது எனக்குத் தெரிந்தது. 

சீனியிடம் இதை என்.எஃப்.டி.யில் விடலாமா என்று கேட்டேன்.  வேண்டாம், நாடகங்களுக்கு வரவேற்பு இருக்காது என்று சொல்லி விட்டார். இம்மாதிரி விஷயங்களில் சீனி பேச்சுக்கு மறு பேச்சு இல்லை. 

நேசமித்திரன் நாடகத்தைப் பற்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.  தொண்ணூறுகளில் பார்த்த சாருவைப் பார்க்கிறேன் என்றார்.  நீண்ட காலத்துக்குப் பிறகு – இல்லை இல்லை, முதல் முதலாக எல்லோருக்கும் பிடித்த ஒரு கலைப் படைப்பைக் கொடுக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

நாடகம் பற்றி சீனி சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.  அதற்கான பதிலைச் சொன்னால் பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.  சீனியின் கடிதம் கீழே:

சாரு

இதை எழுதுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னமே நாடகத்தைப் படித்து விட்டேன். ஒரு உள்மன  எழுச்சியில் எழுத வேண்டாம் எனத் தள்ளிப்போட்டு இப்போது எழுதுகிறேன்.

நீங்கள் இதுவரை எழுதியதில் இது ஒரு புது வகையான எழுச்சி .

இப்படி ஒன்றை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவேயில்லை.

நாடகம் என வருகையில் , அதற்குண்டான அயற்சி இருக்கும்தானே? ஆனால் உங்கள் ஆர்த்தோ நாடகம் எல்லாவற்றையும் தாண்டி அடித்துக்கொண்டு போயிற்று.

இதற்கே, இதைப்படிக்கையில், இதற்குண்டான பின்புலம் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனாலும் அடித்துக்கொண்டு போயிற்று.

இதுவரையில் நீங்கள் எழுதியதில் மிகப் புதியதான மொழி நடை மற்றும் , மிகப்புதிய …என்ன சொல்வதென்று தெரியவில்லை .

எழுபது வயதில் படைப்பூக்கத்தில் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுக்க முடியும் எனக் காட்டியது அனைத்து எழுத்தாளர்களுக்கும் ஓர் உந்துசக்தி.

—————

எனக்கு நாடகம் பற்றி, தியேட்டர் பற்றி கிஞ்சித்தும் அறிவில்லையெனினும், இது ஒரு நாடகம் என்பதைத் தாண்டி ஒரு பின் நவீனத்துவ நாவல் நாடக வடிவில் இருப்பது போலவே தோன்றியது.

இருப்பினும் கொஞ்சம் கான்ஷியஸ் ஆகவே படித்தேன். ஏன் நாடகம் என்பதைத் தாண்டி நாவல் எனச் சொல்கிறேன் என்றால், நாடகத்தில் இருக்கும் நீண்ட நெடிய வசனங்கள்தான்.

நாடகங்களுக்கு உரித்தான விஷுவல்ஸ் கம்மியாக இருக்கின்றன. நவீன நாடகங்களில் இவ்வகை விஷுவல்ஸ் செயற்கையாகத் துருத்திக்கொண்டு இருக்கின்றன.  அவைகளுக்கு எந்த அர்த்தமும் இருப்பதில்லை. அவ்வகைத் தொந்தரவுகள் உங்கள் நாடகத்தில் இல்லை எனினும், நாடகத்திற்கான கூறுகள் குறைவாகவே உள்ளன.

இதை ஒரு குறை எனச் சொல்ல முடியாது. இதை எப்படி இயக்குநர் எடுக்கிறார் என்பதை வைத்தே பார்க்க முடியும்.

நாடகம் எனச் சொல்வதாலேயே இவைகளைக் கூறுகிறேன்.

—————

நாடகம், நாவல் என எதற்குள்ளும் அடங்காத ஒரு கலைப்படைப்பாக இதைப் பார்த்தால்,

இது ஒரு க்ளாஸிக் போஸ்ட் மாடர்ன் பிரதி. எதற்குள்ளும் அடங்காத ஒரு படைப்பு.

——————

ஒரே ஒரு குறை என்னவென்றால், அந்த ஆர்த்தோ யார், அவர் எப்படிப்பட்ட ஒரு மாபெரும் ஆளுமை என ஒரு சராசரி பார்வையாளனுக்கு அல்லது வாசகனுக்கு நாடகத்தில் அறிமுகம் இல்லை. அப்படிப் பார்க்கையில், இது சராசரி வாசகனுக்கான ஒரு பிரதி இல்லை.

இது புத்திஜீவிகளுக்கான ஒரு படைப்பு. அதிலும் இலக்கிய புத்திஜீவிகள்.

அராத்து.

இதற்கு நான் நீண்ட பதில் எழுத வேண்டும்.  சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

முதலில் இது நூற்றுக்கு நூறு நாடகம்தான்.  நாவலின் சாயல் கொஞ்சமும் கிடையாது.  இதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இயக்குனரின் கையிலும் நடிகர்களின் திறமையிலும்தான் இருக்கிறது. 

வசனம் அதிகமாக, நீளமாக இருக்கிறது என்பதற்கு என் பதில்.  ஆர்த்தோவின் நாடகக் கோட்பாட்டின்படி நாடகத்தில் வசனமே இருக்கக் கூடாது.  ஆனால் ஆர்த்தோவின் நாடகங்கள் அனைத்தும் நீண்ட நெடிய வசனங்களாலேயே ஆனது.  தான் நினைத்த்தைச் செய்வதற்கு அவருக்குப் போதிய பணம் இல்லை.  ஆரோக்கியமும் கெட்டு விட்டது.  அதனால் அவருடைய விருப்பத்துக்கு மீறி அவர் வசனங்களாலேயே எழுதினார்.  ஆனாலும் அந்த வசனங்களையும் தாண்டி தனது மற்றும் நடிகர்களின் குரலைக் கொண்டு, அலறலைக் கொண்டு, ஊளையைக் கொண்டு, பிற கருவிகளைக் கொண்டு அதை சமன் செய்தார்.  ஆர்த்தோ தன் அறையில் ஒத்திகை பார்க்கும் போது – அவர் வசித்த இடத்தில் (பாரிஸின் அருகில் உள்ள Ivry-sur-Seine) மனிதர்கள் இல்லாவிட்டாலும் – அங்கே இருந்த மருத்துவர் ”இதை ஆர்த்தோ பிற இடங்களில் செய்தால் அவரை அடித்துத் துரத்தியிருப்பார்கள்” என்று சொல்கிறார்.  கையில் ஒரு சுத்தியலை வைத்துக் கொண்டு ஒரு இரும்புத் தகட்டின் மீது அடிப்பாராம் ஆர்த்தோ.  அதுதான் நாடகத்துக்கு இசை. 

ஆர்த்தோ தன் இறுதிக் காலத்தில் ஒரு நாடகம் எழுதினார்.  To have done with the judgement of god.  அவர் கடவுளுக்குப் பெரிய எழுத்து போடுவதில்லை.  அந்த நாடகம் முழுக்க வசனங்கள்தான்.  பத்துப் பன்னிரண்டு பக்கம் இருக்கும்.  அது ஒரு வானொலி நாடகம்.  வானொலியில் ஒலிபரப்புவதற்கு முதல் நாள் அதை வானொலி நிலைய இயக்குனர் தடை செய்து விட்டு, சில முக்கியஸ்தர்களை மட்டும் நிலையத்துக்கு வரவழைத்துப் போட்டுக் காட்டினார்.  தெரிதா உட்பட எல்லா பாரிஸ் புத்திஜீவிகளும் பார்த்தார்கள்.  தெரிதா கடைசி வரை ஆர்த்தோவுக்கு ஆதரவாகவே இருந்தார். 

அந்த நாடகத்தின் முதல் பகுதியை ஆர்த்தோ வாசித்தார்.  ஆ, வாசிப்பு என்றால் எப்பேர்ப்பட்ட வாசிப்பு!  ஏதோ செவ்வாய் கிரகத்து மனிதன் ஒருவன் வந்து நம் பிரதியை வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.  அவருடைய வாசிப்புக்கு இணையாக இன்று வரை வேறு யாரும் வாசிக்கவில்லை.

அந்த நாடகம் இப்போது நமக்குக் கேட்பதற்குக் கிடைக்கிறது.

https://archive.org/details/ToHaveDoneWithTheJudgmentOfGodWrittenAndReadByAntoninArtaud

ஜாப் ப்ளாங்க்

ஃப்ரெஞ்சாக இருந்தாலும் கொஞ்சமாகவாவது கேட்டுப் பாருங்கள்.  முதலில் வருவது ஆர்த்தோவின் குரல்.  அந்தக் குரல் ஐரோப்பியரின் போலித்தனத்துக்கு எதிரான குரல்.  ஐரோப்பியரின் வறட்டு விஞ்ஞானத்துக்கும், மனித விரோதக் கோட்பாடுகளுக்கும் எதிரான போர்க்குரல்.  ஒன்றை மறந்து விடாதீர்கள்.  ஹிட்லரின் வதை முகாம்கள் அறிமுகம் ஆவதற்கு முன்பே தன் தீர்க்கதரிசனத்தால் மனிதர்கள் கோடிக்கணக்கில் அழியப் போகிறார்கள் என்று முன்னறிவித்தவர் ஆர்த்தோ.  எப்படி அந்த தீர்க்கதரிசனத்தை அடைந்தார் என்றால், ஐரோப்பியரின் மனித விரோதக் கோட்பாடுகள்.  இந்தப் பாதையில் சென்றால் இப்படியான அழிவைத்தான் நீ சந்திப்பாய் என்றார்.  அவர் சொன்னபடியேதான் நடந்தது.  அதற்கு முன்னால் ஆர்த்தோவைப் பைத்தியக்காரன் என்று சொன்ன ஐரோப்பியர் ஹிட்லரின் வதைமுகாம்களைப் பார்த்து விட்டு மிரண்டு போனார்கள்; ஆர்த்தோவின் தீர்க்கதரிசனத்தைக் கண்டு பிரமித்துப் போனார்கள். 

To have done with the judgement of god நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை பின் வரும் இணைப்பில் காணலாம்.

https://www.labster8.net/wp-content/uploads/2015/08/Artaud-ToHaveDoneWithJudgementofGod.pdf

இந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் ஆர்த்தோ தான் ”body without organs” ஆக மாறுவேன் என்கிறார், கவனியுங்கள்.  அதாவது, நித்தியத்தன்மையை அடைவேன் என்று பொருள்.  அதுதான் ஆர்த்தோவின் பங்களிப்பு.  இன்றைய உலகின் இசை, தத்துவம், அரசியல், பொருளாதாரம், இலக்கியம், நாடகம் என்று பல துறைகளில் ஆர்த்தோவின் சிந்தனைகள்தான் அடிப்படையாக விளங்குகின்றன.  உதாரணமாக, ஃபூக்கோவுக்குப் பிறகான சிந்தனையாளர்கள் தெல்யூஸ் (Gilles Deleuze) மற்றும் க்வத்தாரி (Félix Guattari) ஆகிய இருவரும் ஆர்த்தோவின் ‘உறுப்புகளற்ற சரீர்ம்’ என்ற கருத்தாக்கத்தை வைத்துத்தான் தங்களுடைய சில கோட்பாடுகளைக் கட்டமைக்கிறார்கள்.  நாம் அதற்குள் செல்ல வேண்டாம்.  ஆர்த்தோவின் சிந்தனை எந்த அளவுக்கு இன்றைய உலகில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன். 

இந்த நாடகத்தை சில முக்கியமான நாடக இயக்குனர்கள் இயக்கி நடித்திருக்கிறார்கள்.  அதில் எனக்குப் பிடித்த இயக்கம் இது:

https://jaapblonk.bandcamp.com/album/antonin-artauds-to-have-done-with-the-judgment-of-god

இது ஆங்கிலத்தில் இருப்பதால் நீங்கள் சுலபமாகக் கேட்கலாம்.  எந்த வகையிலும் ஆர்த்தோவின் நடிப்பைத் தொட முடியவில்லை என்றாலும் வார்த்தைகளால் மட்டுமே ஆன நாடகப் பிரதியை எப்படி குரலின் ஏற்ற இறக்கங்கள் மூலமும் இசையின் மூலமும் குரல் ஒலிகளின் மூலமும் நாடகமாக மாற்ற முடியும் என்பதற்கு இது ஒரு பாடம் என்று சொல்லலாம். 

Prologue, Fulminating Order, Interlude I, Black Sun, Interlude II, Fecality, Interlude III, Raise The Question, Interlude IV, Some Conclusions, Epilogue என்று பதினோரு பகுதிகளைக் கொண்டிருக்கிறது நாடகம்.  பல இடங்களில் இசை Iannis Xenakisஇன் இசையை ஒத்திருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.  இதில் Fulminating Order 8.48 நிமிடங்கள், Black Sun 7.43 நிமிடங்கள், Fecality 8.57 நிமிடங்கள், Raise The Question 8.57 நிமிடங்கள், Some Conclusions 9.15 நிமிடங்கள்.   இதில் எதைக் கேட்காவிட்டாலும் Raise The Questionஐ மட்டும் கேட்டுப் பாருங்கள்.  இசையும், வசனமும், குரலும் சேர்ந்து எப்படி இந்தப் பிரதி நாடகமாக மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

இதை இயக்கி நடித்திருப்பவர் Jaap Blonk.  இதை முழுமையாகக் கேட்கப் பொறுமை இல்லாதவர்கள் நாடகத்தின் ஆங்கிலப் பிரதியை வைத்துக் கொண்டு ”சில முடிவுகள்” என்ற பகுதியைக் கேளுங்கள்.  ஜாப் ப்ளாங்கின் இந்த நாடகத்தில் இசை ஏன் இந்த அளவுக்கு மகத்தானதாக இருக்கிறது என்பதன் காரணம், அவர் ஒரு Punk Rock இசைக் கலைஞர் என்பதுதான்.  அவரது ஒரு இசை நிகழ்ச்சி இது.  அவசியம் முழுமையாகக் கேளுங்கள். 

ஏனென்றால், இந்த சப்தங்களைத்தான் ஆர்த்தோ தியேட்டரில் முதல் முதலாகக் கண்டு பிடித்தார், உருவாக்கினார்.  இதற்குத் தமிழில் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.  ஆங்கிலத்தில் onomatopoeia என்கிறார்கள்.  நான் இதை விளக்கப் போவதில்லை.  ஜாப் ப்ளாங்க் இதைச் செய்து காட்டியிருக்கிறார்.  அதுதான் ஒனாமாடோப்பியா.    

To have done with the judgement of god நாடகத்தை Bill White இயக்கி Billy Barnum மற்றும் ஜான் வாய்ட் நடித்த இந்தக் காணொலியையும் நீங்கள் பார்க்கலாம்.

Billy Barnum

ஆனால் இது எல்லாமே ஆர்த்தோவின் குரலுக்கும் நடிப்புக்கும் அருகில் கூட நெருங்க முடியாததாக இருக்கிறது என்பதை வானொலி நாடகத்தில் ஆர்த்தோவின் குரலைக் கொண்டே நாம் புரிந்து கொள்ளலாம். 

வானொலி நாடகத்தில் ஆர்த்தோவும் ராபர்ட் ஃப்ளின் என்ற புகழ் பெற்ற நடிகரும் ஆண்கள்.  அதோடு அதில் இரண்டு பெண்களும் நடித்திருந்தார்கள்.  அவர்களில் ஒருவர் அப்போது பிரபலமாக இருந்த ஸ்பானிஷ் நடிகை Maria Casares. ஆர்த்தோவைத் தொடர்ந்து வரும் பெண் குரல் சாஸரேஸ்தான்.  யோசித்துப் பாருங்கள், என்னுடைய நாடகத்தில் நடிக்க தமிழின் பிரபலமான ஒரு நடிகையை அழைத்தால் வருவார்களா?  எழுத்தாளர்களுக்கு இங்கே அவ்வளவுதான் மதிப்பு. ஆனால் ஃப்ரான்ஸில் ஆர்த்தோ என்னதான் பிரெட் வாங்கக் காசு இல்லாமல் தெருக்களில் பிச்சை எடுத்தாலும் அவர் ஒரு சூப்பர் ஸ்டாராகவே விளங்கியிருக்கிறார்.  இங்கே ரஜினி அழைத்தால் எந்த நடிகையும் நடிக்க வருவார் இல்லையா?  அப்படித்தான் ஃப்ரான்ஸில் எழுத்தாளர்களின் செல்வாக்கு.  இன்னொரு பெண் குரல் – நாடகத்தில் கடைசியாக வருகிறார் – Paule Thevenin.  இவர் ஆர்த்தோவுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர்.  1946 இலிருந்து 1993இல் இவர் காலமாகும் வரை ஆர்த்தோ எழுதிக் குவித்த, வரைந்து தள்ளிய அத்தனை காகிதங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் சேகரித்து காலிமார் பதிப்பகத்துக்காகத் தொகுத்து செப்பனிட்டவர்.  இவர் மட்டும் இல்லாவிட்டால் ஆர்த்தோவின் எழுத்து நமக்குக் கிடைத்திருக்காது. 

இது தவிர இன்னொரு நாடகத்தையும் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைக்கிறேன். 

The persecution and assassination of Jean-Paul Marat as performed by the inmates of the Asylum of Charenton under the direction of the Marquis de Sade.. 

Peter Weiss ஜெர்மன் மொழியில் எழுதியது.  ஆங்கில மொழிபெயர்ப்பைப் பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம்.  இந்த நாடகம் ஆர்த்தோவியக் கோட்பாட்டின்படி இயக்கப்பட்டது.  ஆங்கிலத்தில் இயக்கியவர் பீட்டர் ப்ரூக். 

https://archive.org/details/persecutionassas00weis

மேற்கண்ட இணைப்பு ஓர் இணைய நூலகம். அங்கே நீங்கள் ஒரு மணி நேரத்திலிருந்து ஒரு மாதம் வரை இலவசமாகக் கடன் பெற்று புத்தகத்தைப் படிக்கலாம். 

பீட்டர் ப்ரூக் இயக்கிய இந்த நாடகம் சுருக்கமாக Marat/Sade என்ற தலைப்பிலும் அழைக்கப்படுகிறது.  மாரட்/சேட் என்று வாசிக்கக் கூடாது.  மாரா/ஸாத் என்பது சரியான உச்சரிப்பு.  இந்த நாடகத்தைக் காண வேண்டுமானால் பின்வரும் இணைப்பில் கிடைக்கும்.

இதை சப்டைட்டிலோடு பாருங்கள்.

இதில் ஸாதும் மாராவும் பக்கம் பக்கமாகப் பேசுவார்கள்.  நான் எழுதிய ஆர்த்தோ நாடகத்தில் வரும் கோமாளியும் ஆர்த்தோவும் இதை விட கம்மியாகவே பேசுகிறார்கள்.  இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் நான் நாடகத்தை எழுதினேன்.  ஆனால் மாராவும் சாதும் அப்படி பக்கம் பக்கமாகப் பேசுவதை நாம் நாடகத்தைப் பார்க்கும் போது உணரவே மாட்டோம்.  அதுதான் இயக்குனர் மற்றும் நடிகரின் திறமை.  அதனால்தான் ஆர்த்தோ சொன்னார், நாடகம் என்பது முழுக்க முழுக்க இயக்குனரின் கலை என்று.  ஆனால் இயக்குனர் ஆர்த்தோ மாதிரியோ பீட்டர் ப்ரூக் மாதிரியோ இருக்க வேண்டும். 

நாடகத்தில் வசனம் அதிகம் என்று அராத்து சொன்னதால் இத்தனையும் எழுதினேன். 

அராத்து சொல்லும் இன்னொரு விஷயம், சராசரி மனிதர்களுக்கு ஆர்த்தோ என்றால் புரியாதே என்பது.  புரிகிற மாதிரி நாடகத்திலேயே வர வேண்டும் என்கிறார்.  வேண்டாம்.  நான் மலையாளத்தில் ஒரு வார்த்தை தெரியாமல் கேரளத்தின் மலைவாசிகளிடையே பேசியிருக்கிறேன்.  உன்னிப்பாகக் கேட்பார்கள்.  சராசரிகளும் புரிந்து கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.  நாடகம் அத்தனை வலுவான கலை.  நம்மிடம் உள்ள கலைகளிலேயே நாடகம்தான் உடனடியாகப் பார்வையாளரைச் சென்றடையக் கூடியதாகவும் அவரை நேரடியாகத் தாக்குவதாகவும் இருக்கிறது.   

மற்றவை கோவாவில் நாடக வாசிப்பில் சந்திப்போம்.