பேரன்பின் தரிசனம் (2)

மரம் அறுக்கிற சத்தம் அவன் நடந்த வழியெங்கும் கேட்டபடியே இருக்க, முன்பு ஒன்றிரண்டு பேர் வந்து மரம் வெட்டி எடுத்துப் போனது போய் இப்போது கூட்டமாக வந்து விட்டார்களே என நினைத்தான்.  இந்த மரங்களை எல்லாம் வெட்டி எடுத்து மலைக்கு அந்தப் பக்கம் மலையாளத்தானிடம் விற்றுத் தீர்ப்பதில் மரம் வெட்டுபவர்கள் வெறித்தனமாய் இருந்தனர்.  பாதையை விட்டு மெதுவாக மரம் வெட்டும் சத்தம் கேட்ட திசை நோக்கி நடந்தான்.  சத்தம் நெருங்கி வர, அச்சத்தில் மரங்களில் கூடு கட்டியிருந்த பறவைகள் பெரும் அலறல் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.  அந்த மரங்களைப் பிரிய முடியாத பெரும் துயரோடு அவை மரங்களையே சுற்றிச் சுற்றி வருவதும் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு பறப்பதுமாய் இருந்தன.  முற்றிய ஒரு தோதகத்தி மரத்தை நான்கு பேர் அறுத்துக் கொண்டிருந்தனர்.  அந்த மரத்திற்கு வயது இருநூறு வருசமாவது இருக்கும்.  பெரும் பரப்பைக் குளிர்வித்து உயர்ந்திருந்த அதன் அடியில் ஒவ்வொரு பக்கத்தும் இரண்டு பேராய் ஒரே சீரான வேகத்தில் அறுத்துக் கொண்டிருந்தனர்.  இந்தக் காட்டின் மரம் ஒவ்வொன்றுக்குமான தாய் நிலாவில் இருக்கிறாள்.  இந்த மரங்கள் அவளின் பிள்ளைகள்.  இதைக் கொல்கிறவர்களை எல்லாம் அமாவாசை நாளில் நிலாவில் இருக்கும் பாம்பு வெறி கொண்டு விழுங்கி விடும் என பாட்டா சொல்லி இருக்கிறார்.  ஆனால் இவர்கள் எத்தனையோ பேர் இந்த மரங்களை அறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஏன் அந்தப் பாம்பு இவர்களை விழுங்குவதில்லை என்கிற தவிப்பு இவனுக்கு எப்போதும் இருக்கும்.  இந்தக் காட்டின் மரங்கள் ஒவ்வொன்றோடும் எத்தனையோ பளியன்களின் ஆன்மாவும் சேர்ந்தேதான் இருக்கிறது.  தன் குழந்தையைப் பிரசவிக்கும் பளிச்சி அவளாகவேதான் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டும்.  மூன்று நாட்களுக்கு யாரும் அவளையும் அவள் பிள்ளையையும் தொட மாட்டார்கள்.  தன் குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கிறவள் அந்தக் குழந்தையை முதலில் காட்டுவது இந்தக் காட்டிற்குத்தான்.  பளியன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே காட்டின் வாசனை அறிந்தவன் என்பதால் குழந்தை தான் இருக்கும் இடத்தை எளிதில் கண்டு கொள்ளும்.  அப்படி எத்தனையோ பேர் பார்த்து வளர்ந்து செத்துப் போன பின் அவர்களின் ஆன்மா எங்கும் போவதில்லை.  பளிச்சி இந்தக் காட்டோடு என்றென்றைக்குமாக அவர்கள் இருக்கட்டும் என மரங்களில் வாழ அனுமதித்திருக்கிறாள்.  அந்த ஆத்மாக்களைத்தான் இவர்கள் வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலே வருவது லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதிய கானகன் என்ற நாவலின் 73-ஆம் பக்கம்.  இந்தப் பக்கத்தை நீங்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காக  நானே இங்கே அதைத் தட்டச்சு செய்தேன்.  வாசிக்க வாசிக்க இந்த நாவலை என் பைபிள் என்றே சொல்லத் தோன்றுகிறது.  இதேபோல் வேம்புவின் மீது  பளிச்சியம்மன் வந்து அவள் கதறும் இடமும் நம் நாடி நரம்புகளையெல்லாம் உலுக்கக் கூடியது.  “அவள் கண்ணீரும் ஒப்பாரியுமாய் அந்தக் காட்டின் ஆதிக் கதை நோக்கி தன்னை நகர்த்திக் கொள்ள நினைத்தவளாகவும் மனிதர்களின் மீதான அச்சத்தில் பைத்தியங்கொண்டவளாகவும் அரற்றினாள். ‘மனுசனுக்கு ஒரு பாடுன்னா தெய்வத்துக்கிட்ட போறோம்…  தெய்வத்துக்கு ஒரு பாடுன்னா அது எங்க போவும்…’  கிழவிகள் வாய்க்குள்ளாகவே புழுங்கிக் கண்ணீர் விட்டனர்.”

லக்‌ஷ்மி சரவணகுமார்

தொடர்பு எண்: 91768 91732

lachudreams@gmail.com

 

Comments are closed.