வள்ளலாரின் வீச்சரிவாள்

நடந்து இருபது ஆண்டுகள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.  கணையாழியில் ஆண்டு தோறும் நடக்கும் தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் நான் எழுதிய நினைவுகளின் புதர்ச் சரிவுகளிலிருந்து என்ற குறுநாவல் பரிசு பெற்றிருந்தது.  (அந்தக் குறுநாவல் தான் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நாவலின் அடிப்படை.)  அதைப் படித்த சுஜாதா, “சாரு நிவேதிதா என்ற பெயரில் வேறு ஒரு புதிய நபர் எழுதிய கதையோ?” என்று கேட்டதாக கஸ்தூரி ரங்கன் என்னிடம் சொன்னார்.  ஏனென்றால், நான் அப்போது முனியாண்டி என்ற பெயரிலேயே சிறுகதைகள் எழுதி வந்தேன்.  மேலும், “இந்தக் கதையை வைஷ்ணவர் அல்லாத ஒருவர் எழுதியிருக்க சாத்தியம் இல்லை” என்று சுஜாதா சொன்னதாக கஸ்தூரி ரங்கன் சொன்னார்.  பிறகு சுஜாதாவின் அழைப்பின் பேரில் அவரை அவர் வீட்டில் சந்தித்தேன்.  மேலும் சில தடவைகள் அவர் வீட்டிலேயே சந்திப்பு நிகழ்ந்தது.  அவர் வீடு அப்போது கணையாழி அலுவலகத்துக்கு எதிரிலேயே இருந்தது.  ஆழ்வார்ப்பேட்டை.  தெருப் பெயர் மறந்து விட்டது.  இப்போது அந்தத் தெருவில் இந்திரா பார்த்தசாரதி வசிக்கிறார்.  டி.டி.கே. சாலை பெரும் பரபரப்பைக் கொண்ட சாலை என்றாலும் அதன் பக்கவாட்டில் இருக்கும் அந்தத் தெரு ரொம்பவும் அமைதியானது.  போக்குவரத்து இல்லாமல் மரங்கள் சூழ்ந்த தெரு.

அப்போது என் நண்பர் எம்.டி. முத்துக்குமாரசாமி அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் ஃப்ரெஞ்ச் படித்துக் கொண்டிருந்தார்.  அவருடைய ஆசிரியை ஒரு பேரழகி.  இருபத்து இரண்டு வயதே இருக்கும்.  அந்தப் பெண்ணை ஒரு க்ஷணம் தரிசிப்பதற்காக நானும் இன்னொரு எழுத்தாள நண்பரும் அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸுக்கு எம்.டி.எம்.மைப் பார்க்கப் போகும் சாக்கில் தினமும் போவோம்.  அந்த ஆசிரியைக்குத் தன் மீது காதல் இருப்பது போல் சந்தேகிப்பதகா எம்.டி.எம். ஒருநாள் இரவு தெரிவித்த போது நாங்கள் ஸ்டெர்லிங் ரோட் முனையில் உள்ள வேலு ஒயின்ஸில் ஓல்ட் மாங்க் ரம் அருந்திக் கொண்டிருந்தோம். பிரியும் போது இனிமேல் உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன் என்று நான் எம்.டி.எம்.மிடம் சொல்லி விட்டு வந்ததாக ஞாபகம்.  ஆனால் மறுநாளே நான் அலியான்ஸில் ஆஜர்.  பிறகு இருவரும் வேலு ஒயின்ஸுக்குப் போய் ஓல்ட் மாங்குடன் மரியோ பர்கஸ் யோசா பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  அதற்குள் அவர்கள் காதலை நான் அங்கீகரிக்கும் முதிர்ச்சியை அடைந்திருந்தேன்.

சுஜாதாவிடம் எம்.டி.எம். பற்றி அதிகம் பேசிக் கொண்டிருப்பேன்.  அவர் ஸில்வியா என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் அதியற்புதமான கதைகள் பற்றியும், மானுடவியல், அமைப்பியல் போன்ற விஷயங்களில் சர்வதேசக் கருத்தங்குகளில் கலந்து கொண்டு அவர் எழுதி வரும் ஆய்வுக் கட்டுரைகள் பற்றியும் சொல்லுவேன்.  அதனால் எம்.டி.எம். மீது ஆர்வமான சுஜாதா ஒருநாள் அவரைப் பார்க்க வேண்டுமே என்றார்.  அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை பார்ப்பதாக மூவரும் முடிவு செய்தோம். எம்.டி.எம். அப்போது வேளச்சேரியில் வசித்தார்.  (இப்போதும் அங்கே தான் என்று கேள்வி.)  நான் சனிக்கிழமை இரவு வேளச்சேரியில் அவரோடு தங்கி விட்டேன்.  ஞாயிறு காலை பார்த்தால் பெரும் மழை பெய்து கொண்டிருந்தது.  சந்திப்பு காலை பத்து மணிக்கு.  நாங்கள் கிளம்ப வேண்டிய எட்டரை மணி அளவில் மழை நின்று விட்டிருந்ததால் ஆட்டோவில் கிளம்பினோம்.  ஆனால் முழங்காலுக்கு மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததாலும், திரும்பவும் மழை பிடித்து விட்டதாலும் ஒன்பதரை ஆகியும் பாதி வழி கூட போயிருக்கவில்லை.  இடையில் ஆட்டோவை நிறுத்தி, சுஜாதா வீட்டுக்கு ஃபோன் போட்டு, முழங்கால் வரை தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது, எட்டரைக்கே கிளம்பி விட்டோம், பதினோரு மணிக்குத்தான் வந்து சேர முடியும் போல் இருக்கிறது, வரலாமா அல்லது சந்திப்பை ரத்து செய்து விடலாமா என்று கேட்டேன்.  தாராளமாக வாருங்கள், ஒன்றும் பிரச்சினை இல்லை என்றார்.  நான் திரும்பவும், “ஒரு மணி நேரத் தாமதத்தால் உங்கள் வேலை கெட்டு விடாதே?” என்று கேட்டேன்.  அதெல்லாம் ஒன்றுமில்லை, வாருங்கள்.

சரியாகப் பதினோரு மணிக்கு சுஜாதா வீட்டு வாசலைத் தட்டினோம்.  கதவைத் திறந்த எழுத்தாளர் சுஜாதா, மிகக் கடுமையான குரலில், எங்களைப் பார்த்து, உங்களால் என் வேலையே கெட்டு விட்டது, ஒரு மணி நேரமாக என்னைக் காக்க வைத்து விட்டீர்கள்.  என்னை எதற்காக நீங்கள் சந்திக்க வேண்டும்?” என்று ஆங்கிலத்தில் கத்தினார்.  கத்தினார் என்பதுதான் சரியான வார்த்தை.   எனக்கு வந்த கோபத்துக்கும் அவமான உணர்வுக்கும் அளவே இல்லை.

ஸாரி சார்; கிளம்புறோம் என்று சொல்லி விட்டு அந்த க்ஷணமே கிளம்பி விட்டோம்.  “ங்கோத்தா என் உயிர் இருக்கும் வரை இவன் முகத்தில் நான் முழிக்க மாட்டேன்” என்று எம்.டி.எம்.மிடம் சொன்னேன்.  முத்துவுக்கும் (எம்.டி.எம்.மை அப்படித்தான் நான் அழைப்பது வழக்கம்) தாங்க முடியாத அதிர்ச்சி.  பேயறைந்தது போல் ஆகி விட்டிருந்தது அவர் முகம்.

நான் சொன்னபடியே அதற்குப் பிறகு சுஜாதா முகத்திலேயே விழிக்கவில்லை.  அவர் என் எழுத்தை மலம் என்று கணையாழியில் எழுதியிருந்தார்.  அது எனக்குப் பொருட்டாகத் தெரியவில்லை.  அதற்குப் பிறகுதான் நான் அவரைச் சந்தித்ததே.  என் எழுத்தை ஒருவர் மலம் என்றோ, சாக்கடை என்றோ நினைக்க ஒருவருக்குப் பரிபூரண சுதந்திரம் இருக்கிறது.  அதில் நான் குறுக்கிட முடியாது.  பலருடைய எழுத்து எனக்கும் அப்படித்தான் இருக்கிறது.  ஆனால் சுஜாதா அவர் வீட்டில் என்னையும் எம்.டி.எம்.மையும் நடத்திய விதம் அவமானகரமானது.  ஒருவரை அழைத்து செருப்பால் அடிப்பது என்றால் அதுதான்.  அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர் முகத்தை சடலமாகத்தான் பார்த்தேன்.

இதை யாரிடம் சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள்.  இந்தச் சம்பவம் இதே மாதிரிதான் நடந்தது.  ஒரு இம்மி அளவு கூட நான் கூடவோ குறைவோ சொல்லவில்லை.

ஆனால் எனக்கு இந்த விஷயம் ஆச்சரியமாக இல்லை.  என்னைப் பார்த்தாலே எல்லோருக்கும் விஷத்தைக் கக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  அதற்கு நான் என்ன செய்ய?  வள்ளலாரே கூட என்னோடு பழகினால் கத்தியை எடுத்துக் குத்திக் கொன்று விடுவார் என்று என் நண்பர்களிடம் கிண்டலாகச் சொல்லிக் கொண்டிருப்பேன்.  அதுதான் இப்போது வரை என் அனுபவம்.  இவ்வளவுக்கும் நான் எந்தத் தவறும் தெரிந்தோ தெரியாமலோ கூட செய்திருக்க மாட்டேன்.  மேலே உள்ள சம்பவத்தைப் பாருங்கள்.  அதில் என் தவறு என்ன இருக்கிறது? இன்று சாலையெல்லாம் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது; இன்னொரு முறை பார்க்கலாம் என்று கூட நான் சுஜாதாவுக்கு ஃபோன் செய்திருக்கலாமே?  நான் அப்படிச் செய்யவில்லை.  அது மரியாதை இல்லை.  மேலும், இந்தச் சந்திப்புக்காக அவர் வேறு வேலைகளை ரத்து செய்திருப்பார் என்று எண்ணினேன்.  ஒரு மணி நேரம் தாமதமாகும் என்பதையும் மிக முன்னதாகவே தெரிவித்தேன்.  இருந்தும் செருப்படி.

தமிழ்ச் சமூகத்தில் இன்னமும் அறம் சார்ந்த விழுமியங்கள் கொஞ்சமாவது மிச்சமிருக்கிறது என்று சொன்னால் அதற்கு சிறு பத்திரிகைகளே காரணம்.  ஆபாசத்தையும் நச்சையும் பரப்பி வரும் சினிமாவோ, அதை ஆதாரமாகக் கொண்டு பிழைத்து வரும் வணிகப் பத்திரிகைகளோ அல்ல.  எழுத்து நடத்திய செல்லப்பா, இலக்கிய வட்டம் நடத்திய க.நா.சு., அஃக் நடத்திய பரந்தாமன், யாத்ரா ஜெயபாலன், இலக்கிய வெளிவட்டம் நடராஜன் என்று நூற்றுக் கணக்கான பேர் இந்தத் தமிழுக்காக தங்கள் உயிரையும் ஊணையும் ஈந்திருக்கின்றனர்.  நூறு பத்திரிகைகள் உள்ளன.  கசடதபற, ழ, நான் நடத்திய கிரணம், சிதைவு, கோவை ஞானி நடத்திய பரிமாணம், தமிழவன் முதலான பெங்களூர் நண்பர்கள் நடத்திய படிகள், பிறகு அவர்களே கொண்டு வந்த இங்கே இன்று, க்ரியா ராமகிருஷ்ணன் நடத்திய இனி, கோமல் சாமிநாதனின் சுப மங்களா, பிரம்மராஜனின் மீட்சி இப்படி எத்தனையோ சிறு பத்திரிகைகள்.

காட்டில் தவம் புரிந்து கொண்டிருக்கும் ஞானியால் சமூகத்துக்கு என்ன பயன் என்று கேட்பவரா நீங்கள்?  அப்படியானால் என் பதில்: அவர்களின் தவத்தால்தான் தினமும் சூரியன் உதித்துக் கொண்டிருக்கிறது.  பூமியில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.  மழை பொழிந்து கொண்டிருக்கிறது.  நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.  தவம் நின்றால் இந்தப் பூமி அழிந்து போகும்.  அப்படித்தான் மேலே கூறிய சிறு பத்திரிகைகளும்.  அதை நடத்தியவர்களால்தான் தமிழ் இன்னமும் அழியாமல் இருக்கிறது.  அறம் சார்ந்த விழுமியங்கள் இன்னமும் கொஞ்சம் மிச்சம் இருக்கின்றன.

இவர்களை நான் தியாகிகள் என்றே அழைப்பேன்.  சுதந்திரப் போராட்ட தியாகியையாவது மக்களுக்குத் தெரியும்.  ஆனால் மேலே குறிப்பிட்ட தியாகிகளைப் பற்றிய ஞானமே மக்களுக்குத் தெரியாது.  இன்னும் சொல்லப் போனால் கிறுக்கன் என்ற பட்டப்பெயரே கிடைக்கும்.  சுமார் 35 ஆண்டுகளாக விருட்சம் என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறார் அழகிய சிங்கர் என்ற கவிஞர்.  இதற்காக அவர் எவ்வளவு பணத்தைச் செலவழித்திருப்பார்?  எவ்வளவு நேரம்?  ஒருவருடைய ஒட்டு மொத்த வாழ்க்கை ஐயா, வாழ்க்கை.  வாழ்க்கையையே தந்துதான் இங்கே ஒவ்வொருவரும் இலக்கியப் பணி செய்து கொண்டிருக்கிறான்.

அப்படிப்பட்ட தியாகிகளில் ஒருவர் வெளி என்ற நாடகத்திற்கான பத்திரிகையைப் பல ஆண்டுகள் நடத்திக் கொண்டிருந்த ரங்கராஜன்.  இப்போது அவர் பெயரே வெளி ரங்கராஜனாக மாறி விட்டது.  சிறு பத்திரிகை நடத்தினால் ஒரே ஒரு அன்புப் பரிசு நம்முடைய நிஜமான இனிஷியல் மாறி நாம் நடத்திய சிறு பத்திரிகையின் பெயர் இனிஷியலாக வந்து விடும்.  வெளி ரங்கராஜன் ஒரு மகாத்மா.  சாது.  அதிர்ந்து கூட பேச மாட்டார். வள்ளலாரின் மறு அவதாரம்.  என்னுடைய நெருங்கிய நண்பர்.  அவருடைய வெளி பத்திரிகையில் ப்ரஸீலிய நாடகக் கலைஞரும் நாடகச் சிந்தனையாளருமான Augusto Boal எழுதிய Invisible Theatre என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்துத் தொடராக வெளியிட்டேன்.  அப்படிப்பட்ட வெளி ரங்கராஜன் என்னை மிகக் கேவலமாக அவதூறு செய்து ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தார்.  திரும்பவும் சொல்கிறேன்.  என் எழுத்தை விமர்சியுங்கள்.  திட்டுங்கள்.  அதற்கு ஒருவருக்கு உரிமை இருக்கிறது.  ஆனால் ஒரு பியர் பாட்டில் வாங்கிக் கொடுத்தால் சாரு உங்களைப் பாராட்டி எழுதுவார் என்றால் அது அவதூறு.  ஏனென்றால் நான் அதற்கெல்லாம் எதிரான ஆள்.  எனக்கு எழுத்து தான் மூச்சு.  எழுத்தே வாழ்க்கை.  லஞ்சம் கொடுத்தெல்லாம் என்னை விலைக்கு வாங்க முடியாது.  வெளி ரங்கராஜன் அந்த மாதிரிதான் என்னை அவதூறு செய்திருந்தார்.  என்ன என்று எனக்கு நினைவில்லை.  ஆனால் அந்த ஆளின் முகத்திலேயே முழிக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன்.  என்னை அவதூறு செய்தால் என் எதிர்வினை அதிகப் பட்சம் அவ்வளவுதான்.  ஆனால் என் சபதத்தை நானே மீறுகிறேன்.  வரும் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு லக்‌ஷ்மி சரவணகுமாரின் கானகன் நாவலைப் பற்றி அகநாழிகை புத்தக நிலையத்தில் என்னோடு பேச இருக்கும் மற்றொருவர் வெளி ரங்கராஜன்.

என் விஷயத்தில் மற்றவர்கள் எந்த அளவு நியாயமற்று நடந்து கொள்கிறார்கள் என்றால், வெளி பத்திரிகையில் வந்த படைப்புகளை ரங்கராஜன் புத்தகமாகப் போட்டார்.  அதில் நான் மொழிபெயர்த்த அகஸ்தோ போவாலின் நூலும் அடக்கம்.  அதன் ஒரு பிரதியை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று ரங்கராஜனுக்கு ஃபோன் செய்தேன்.  அனுப்புகிறேன் என்று சொல்லி விட்டு அனுப்பவில்லை.  வள்ளலார் கூட என் மீது கொலை வெறியோடுதான் திரிகிறார் போங்கள்.

 

Comments are closed.