புத்தக விழா குறிப்புகள் – 4

நேற்று (8.1.2024) விசேஷமான நாள். இரண்டு காரணங்கள். ஒன்று, மாலாடு கிடைத்தது. சாப்பிட்டு பல காலம் இருக்கும். இரண்டாவது, வெளியே பகிர முடியாது. டைட்டானிக் படத்தில் கப்பலின் விளிம்பில் நிற்பார்கள் இல்லையா இருவர்? அது போன்றதொரு அனுபவம்.

மற்றபடியும் விசேஷமான நாள்தான். ஸீரோ டிகிரி அரங்கில் இருந்த நேரம் பூராவும் கையெழுத்துப் போட்டபடியே இருந்தேன். பலரும் கட்டுக்கட்டாக என் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து கையெழுத்து வாங்கினார்கள். ஒரு புத்தகத்தில் கையெழுத்து வாங்கியவர்கள் ஒன்றிரண்டு பேர்தான். பலரும் பெட்டியோவைத் தேடி வந்தார்கள். பிரதிகள் அச்சகத்திலிருந்து வரவில்லை. எழுத்தாளனுக்கும் பதிப்பகத்துக்கும் எதிராக பபாஸி தாதாக்கள் மட்டும் எதிராக இல்லை. அச்சகத்தாரும் அப்படித்தான் இருக்கிறார்கள் போல. அவர்கள் பிரச்சினை எனக்குப் புரிகிறது. ஆனால் டிசம்பர் மாதம் கொஞ்சம் ராப்பகலாகத்தான் வேலை செய்தாக வேண்டும். ஒரு தம்பதி பொன்னேரியிலிருந்து பெட்டியோவை வாங்க வந்தார்கள். ஆனால் பெட்டியோ வரவில்லை. ஆனால் அவர்கள் கிளம்பிப் போன கொஞ்ச நேரத்தில் பத்து பிரதிகள் வந்தன.

இந்தக் கண்றாவியெல்லாம் போதாது என்று ஒரு நிஜக் கண்றாவி மழை. மழை போற்றுதலுக்குரியது. மழையைச் சொல்லி குற்றமே இல்லை. ஆனால் மழையை எப்படி எதிர்கொள்வது என்ற திட்டம் பப்பாஸி தாதாக்களிடம் இல்லை. எங்கு பார்த்தாலும் ஒரே சேறும் சகதியும்தான். பொதுமக்களின் நிலைதான் பரிதாபம். கைக்குழந்தையோடு அவர்கள் படும் அவஸ்தையை நேரில் பார்த்தேன். அரசு தரும் மானியம் 75 லட்சத்தையும் வாங்கி ஜேபியில் போட்டுக்கொண்டு புத்தகம் வாங்க வரும் மக்களை இந்தப் பாடு படுத்தும் பப்பாஸி ஆட்களை கடவுள்தான் கவனிக்க வேண்டும்.

இன்று (8.1.2024) புத்தக விழா இல்லை என்று அறிவிப்பு வந்துள்ளது.

நாளை (9.1.2024) ஒருநாள்தான் நான் வருவேன். பத்தாம் தேதி கோழிக்கோடு செல்கிறேன். பதினைந்தாம் தேதியிலிருந்து புத்தக விழா முடியும் வரை மாலை நாலரை மணியிலிருந்து ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன்.