எதைப் பெற்றோம்? எதைத் தருகிறோம்?

இது ஒரு நீண்ட கதை.  கதை என்ன கதை?  என் வாழ்க்கையில் நடப்பதுதான் கதை.  பொறுமையாகப் படியுங்கள்.  இதில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டதுதான்.  ஆனாலும் இங்கே அது எல்லாமே ஒரு தொகுப்பாகக் கோர்க்கப்பட்டிருக்கும்.  இதில் இப்போது சொல்லப் போகும் சம்பவங்கள் இனி வரப் போகும் கதையிலோ நாவலிலோ வந்தால், இது சாரு ஏற்கனவே அவர் ப்ளாகில் எழுதியதுதானே என்று சொல்லாதீர்கள்.  ப்ளாகில் நான்தானே எழுதுகிறேன், என் ஆவியா எழுதுகிறது? அதனால் ப்ளாகில் எழுதியதுதான் புத்தகமாகவும் வரும்.  விதிவிலக்கு ஒன்றிரண்டு உண்டு. 

”உங்கள் வாழ்க்கையில் நம்பவே முடியாத, மிகவும் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் என்ன?” என்று என்னைக் கேட்டால் இந்தச் சம்பவத்தைத்தான் சொல்வேன்:

ஆனந்த் என்று ஒரு நண்பர்.  அவர் தந்தை எம்.பி.  ஒருநாள் அவர் தந்தையை – அவர் என்னிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் – என் நண்பர் ஒருவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்.  நண்பர் ஒரு கிங்மேக்கர்.  அந்த கிங்மேக்கர் நண்பரால் எனக்கு ஒரு பயனும் இல்லை என்றாலும் என்னுடைய மற்ற நண்பர்களுக்கு அந்த கிங் மேக்கரால் நல்ல பயன்கள் விளைவதைக் கண்டிருக்கிறேன்.

பொதுவாகவே எனக்கு யாரையும் என் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாது.  1980களின் முற்பகுதியில் நான் தில்லி சிவில் சப்ளைஸில் ஸ்டெனோவாக இருந்தேன்.  அப்போது நான் தில்லியில் ஒரு தாதா மாதிரி வளைய வந்து கொண்டிருந்தேன்.  உதாரணம் ஒன்று சொல்கிறேன்.  வெங்கட் சாமிநாதன் தில்லி சி.பி.ஐ. துறையில் டெபுடி டைரக்டர்.  அவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தும் அவரிடம் ரேஷன் கார்ட் இல்லை.  அப்போதெல்லாம் ரேஷன் கார்ட்தான் ஆதார் கார்ட் மாதிரி.  உங்கள் அடையாள அட்டையே ரேஷன் கார்டுதான்.  வெ.சா.விடம் ட்ரைவிங் லைசன்ஸ் கிடையாது.  அப்படிப்பட்டவருக்கே ஒரே நாளில் ரேஷன் கார்டு வாங்கிக் கொடுத்தேன்.

ஏற்றுமதி இறக்குமதித் துறை என்று ஒரு துறை.  மத்திய அரசின் கீழ் வரும்.  அங்கே கபூர் என்று ஒரு டெபுடி டைரக்டர்.  அவர் எப்படியோ எனக்குப் பழக்கமானார்.  அவருக்கு வாரம் இரண்டு ரேஷன் கார்டு செய்து கொடுப்பேன்.  அவர் மனைவி குடும்பத்துக்கு.  ட்ரைவர் குடும்பத்துக்கு.  அவருடைய செயலாளர் குடும்பத்துக்கு.  இப்படி போய்க்கொண்டே இருக்கும்.  ஒருநாள் கபூர் கேட்டார், ”ரவிஜி (என் பெயர் அங்கே அப்படித்தான்), நான் என்ன துறையில் என்ன வேலையில் இருக்கிறேன் என்று தெரியுமா?” என்று கேட்டார். 

அவர் வகிக்கும் பதவியையும் துறையையும் சொன்னேன். 

“சரி, இதன் மதிப்பு தெரியுமா உங்களுக்கு?”

“தெரியாதே?”

பிறகு விளக்கினார்.  அவரைப் பயன்படுத்தி என்னால் ஒரே வருட்த்தில் கோடீஸ்வரனாகி விட முடியும்.  லஞ்சம் வாங்கி அல்ல.  இன்னாருக்கு இன்ன உதவியைச் செய்தால். 

“ஏன் ரவிஜி என்னிடம் ஒரு உதவி கூட கேட்பதில்லை?  நீங்கள் காந்தியவாதியா?”

“அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை கபூர் சாப்.  என் நண்பர்களெல்லாம் எழுத்தாளர்கள்.  அவர்களுக்கு இதெல்லாம் ஒரு மண்ணும் தெரியாது.  அவ்வளவுதான்.”

இன்னொரு நண்பர்.  கல்வித் துறையில் ஜாயிண்ட் செக்ரடரி.  வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு நடந்தேதான் போவார்.  காந்தியவாதி.  அவருக்கும் அதே மாதிரி ரேஷன் கார்டுகளை செய்து கொடுத்தேன்.  அவரும் கபூர் மாதிரியே கேட்டார்.  ”நான் காந்தியவாதிதான்.  ஆனால் என்னை வைத்து என் செயலாளர் காசு பண்ணுவதை என்னால் தடுக்க முடியாது” என்றார்.  நானோ அவரை ஒரு குமாஸ்தா மாதிரியே பாவித்தேன்.  அந்த வேதனை தாங்க முடியாமல், ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காக யார் யார் காத்திருக்கிறார்கள் என்பதைக் காண்பித்தார்.  இந்தியாவில் உள்ள முக்கியமான மருத்துவப் பல்கலைக்கழகங்களின் பிரின்ஸிபால்கள் அவரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தார்கள்.  அவரை வைத்து நான் பல கோடி சம்பாதித்திருக்கலாம்.

ஆனால் இப்படிப்பட்ட நண்பர்களை என் மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவேன்.  அதனால் அவர்கள் ஆதாயம் அடைந்தால் எனக்கு மகிழ்ச்சி. 

அப்படித்தான் ஆனந்தையும் எம்.பி.யாக இருந்த ஆனந்தின் தந்தையையும் என் கிங் மேக்கர் நண்பருக்கு அறிமுகப்படுத்தேன்.  அறிமுகப்படுத்தி ஒருசில மாதங்களிலேயே கிங்மேக்கரின் சிபாரிசினால் ஆனந்தின் தந்தை மத்திய மந்திரி ஆனார்.  அன்றைய தினத்திலிருந்து இன்று வரை என் வாழ்விலிருந்து காணாமல் போய் விட்டார் ஆனந்த். 

ஆனந்த் என் மிகத் தீவிர வாசகர்.  எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலிலிருந்தெல்லாம் மேற்கோள் காட்டுவார்.  அவர் தந்தை மத்திய மந்திரி ஆவதற்கு சில தினங்கள் முன்பு ஆனந்தும் நானும் அடையாரில் உள்ள ஆனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் கர்ப்பகிருஹத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.  விஷ்ணு கை தொடும் இடத்தில் சயன நிலையில் இருக்கிறார்.  அப்போது ஆனந்த் சொல்கிறார்: ”சாரு, பெருமாள் இத்தனை பக்கத்தில் இருக்கிறார்.  இவர் மீது சத்தியமாக, என் மூன்று வயது பெண் குழந்தையின் மீது சத்தியமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்.  உதவி செய்யாவிட்டால் அந்தப் பாவம் என் மகள் மீதுதான் விழும்.”

எனக்குச் சற்று கோபம் வந்து விட்டது.  ”இதையெல்லாம் வாய் விட்டு சொல்லக் கூடாது ஆனந்த்.  செயலில் காண்பியுங்கள்.  அது போதும்.  செயல்படாவிட்டாலும் ஒன்றும் குற்றமில்லை.  அன்பாக இருந்தாலே போதுமானது.”

“சாரி சாரு.  செய்து காண்பிக்கிறேன்.”

அவர் தந்தை மத்திய மந்திரி ஆன அன்றிலிருந்து இன்று வரை ஆனந்த் என் பக்கம் திரும்பவில்லை. 

இதுதான் எனக்கு நம்ப முடியாத ஆச்சரியம்.  ஆனந்த் பழையபடியே சுறுசுறுப்பாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறார்.  இலக்கிய விழாக்களில் சந்தித்தால் இனிமையாகப் பேசுகிறார்.  மகள் பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருக்கிறாள். 

நம் நாட்டில் பெற்றோர் தங்கள் உயிரை விடத் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையைத்தான் பெரிதாக நினைக்கிறார்கள்.  அதிலும் பெண் குழந்தை என்றால் சொல்லவே வேண்டாம்.  அப்படிப்பட்ட நிலையில் ஆனந்த் இப்படி சத்தியத்தை மீறியதை என்னால் நம்ப முடியவில்லை.  இத்தனைக்கும் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர். 

ஆனந்த் எனக்கு நண்பராக இருக்கும்போது என் வீட்டில் அரிசி கூட அவ்வப்போது இருக்காது.  தமிழ் ஸ்டுடியோஸ் அருண்தான் மாதாமாதம் எனக்கு அரிசி மூட்டை கொடுத்துக் கொண்டிருந்தார்.  கிட்டத்தட்ட அதை ஒரு சேவை போல் செய்து கொண்டிருந்தார் அருண். 

அதே காலகட்டத்தில் ஒரு நண்பர்.  பெயர் மறந்து விட்டேன்.  ஒரு வாசகர் வட்டக் கூட்டத்தில் வைத்து, பல பேர் முன்னிலையில், “சாரு, நான் உங்களுக்கு மாதாமாதம் முப்பதாயிரம் ரூபாய் தருகிறேன்” என்றார்.  அப்போது அது மூணு லட்சத்துக்கு சமம்.  வேண்டாம் ஐயா, மாதம் ஐயாயிரம் கொடுங்கள், அதுவே எதேஷ்டம் என்றேன். 

பெரும் வாக்குவாதம். 

என்னால் முடியும்.  உங்கள் வாழ்நாள் பூராவும் தருகிறேன்.

மீண்டும் வாக்குவாதம்.

மூன்று மாதம் கொடுத்தார்.  மூன்றாவது மாதத்திலிருந்து காணாமல் போய் விட்டார். 

இதை நான் ராஸ லீலாவிலோ வேறு எங்கோ எழுதியிருந்தேன்.  இதை ஆதவன் என்ற நண்பர் படித்து ஒரு பாடம் கற்றுக் கொண்டார்.  நாம் எப்போதுமே யாருக்கும் பருவமழையாக இருக்கக் கூடாது.  கோடைமழையாக இருந்தால் போதும்.  பருவமழை பொய்த்தால் ஏச்சு கிடைக்கும்.  கோடை மழை என்றால் பெய்தால் நன்மை, பெய்யாவிட்டால் ஏச மாட்டார்கள்.  நேற்றுதான் ஆதவன் இதை என்னிடம் சொன்னார். 

நான் ஆதவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்து போனேன்.  முப்பதாயிரம் நண்பர் பணம் கொடுக்கவில்லையே என்று எனக்குக் கோபம் இல்லை.  காணாமல் போனதுதான் கோபம்.  பிரச்சினை என்றால் அதை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும்.  ”சாரு, நான் சொன்னபோது இருந்த நிலை வேறு, இப்போதைய நிலை வேறு.  தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.”  இப்படிச் சொன்னால் நான் என்ன அடிக்கவா போகிறேன்?  காணாமல் போனதால்தான் எழுதினேன். 

ஆதவன் என் எழுத்தை கடந்த இருபது ஆண்டுகளாகப் படித்து வருகிறார்.  ஆனால் என்னை நெருங்கியது இல்லை.  என்னிடம் பேசியதும் இல்லை. 

சென்ற மாதம் தற்செயலாக அந்தச் சந்திப்பு நடந்த்து.  அவர் செய்த ஒரு உதவியால் வாழ்நாள் முழுவதும் என்னிடம் இருந்த ஒரு பிரச்சினை சரியாகி விட்டது.  (பண உதவி அல்ல.  என்னிடம் பணம் இல்லாவிட்டாலும் அது எனக்கு ஒருபோதும் பிரச்சினையாக இருந்தது இல்லை.)   என்னுடைய ஆதங்கம் என்னவென்றால்,

இரண்டு விஷயங்கள்.  எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய ஹார்ட் அட்டாக் வந்த்து.  அதில் நான் விடை பெற்றிருக்கலாம். அப்படி ஆகியிருந்தால் ஆதவன் என்னைச் சந்திக்க முடியாமலே போயிருக்கும் இல்லையா?  அது அவருக்கு எத்தனை பெரிய இழப்பு?  நடிகர் பார்த்திபன் அடிக்கடி என்னிடம் சொல்லுவார்.  எல்லோரிடமும் சொல்லியிருப்பார்.  அவர் துணை இயக்குனராக இருந்து பரம் பைசாவுக்கு சிங்கியடித்துக் கொண்டிருந்தபோது அவர் நைனா இருந்திருக்கிறார்.  அவர் நடிப்பு ஹீரோவாகி, இயக்குனரும் ஆகி கோடி கோடியாய் சம்பாதிக்கும்போது நைனா இல்லை.  எத்தனை துயரம் பாருங்கள்!

இன்னொரு விஷயம்.  வாழ்நாள் பூராவும் எனக்கு இருந்த ஒரு பிரச்சினை ஆதவன் என்னை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்திருந்தால் அதிலிருந்து நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே விடுபட்டிருப்பேன் இல்லையா?

ஆனாலும் சமீபத்தில் நடந்த அந்தத் தற்செயல் சந்திப்பினால் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டேன் என்று மகிழ்ச்சி அடைந்தேன்.  கடவுளுக்கு நன்றி.  ஆதவனுக்கும் நன்றி.

என் ஆதங்கம் என்னவென்றால், ஒரு ஞானியிடமிருந்து உங்களுக்குச் சில விஷயங்கள் கிடைக்கின்றன.  அந்த ஞானி உஞ்சவிருத்தி செய்து கொண்டிருக்கிறான்.  அந்த உஞ்சவிருத்திப் பையில் உங்களிடமிருக்கும் ஏதேனும் ஒன்றைப் போடுவதால் உங்கள் கடனும் தீரும்.  ஞானியின் தேவையும் நிறைவேறும்.  அவ்வளவுதான். 

லா.ச.ரா.விடம் ஒரு சிறுபத்திரிகை ஆசிரியர் ஒரு கதை கேட்கிறார்.  பதிலுக்கு என்ன தருவீர்கள் என்கிறார் லாசரா.  இலவசமாகக் கொடுப்பதில் லாசராவுக்கு உடன்பாடு இல்லை. 

“என்னிடம் பணம் இல்லை சார், என்னால் பணம் தர இயலாது.”

“சரி, வேறு என்ன தர முடியும்?”

“வீட்டில் ஒரு காய்கறித் தோட்டம் இருக்கிறது.  காய்கறி தருகிறேன்.”

ஆஹா, அது போதுமே என்று சொல்லி வாங்கிக் கொள்கிறார் லாசரா. 

இதையேதான் நானும் சொல்கிறேன். 

நாலாயிரம் ஆண்டு வரலாற்றை நான் திருத்தி எழுதியிருக்கிறேன். எழுத்தாளனுக்குப் பணம் கொடுங்கள்.  பணம் இல்லாவிட்டால் வேறு ஏதேனும் கொடுங்கள்.  அவனிடமிருந்து இலவசமாகப் பெறாதீர்கள்.

இப்படிச் சொன்னதற்கு ஞாநி என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று எழுதினார்.  பிரபஞ்சனும் அப்படியே எழுதினார்.  ஆனால் ஒரு கட்டத்தில் ஞாநியே வாசகர்களிடம் பணம் கேட்கும் நிலை ஏற்பட்டது.  ஒருமுறை “மாடு மேய்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூட எழுதினார்.  அப்போதும் ஒரு தறுதலை ”அதைச் செய்யுங்கள்” என்று பின்னூட்டத்தில் எழுதினான்.  கடைசியில் அவர் வாழ்நாளெல்லாம் தினமலம் என்று திட்டித் தீர்த்த தினமலர் பத்திரிகைதான் அவர் வாழ்நாள் வரை அவருக்கு மிகப் பெரிய உதவியைச் செய்தது.  பிரபஞ்சனுக்கும் மருத்துவ உதவி தேவைப்பட்ட போது ஒரு சினிமா இயக்குனர்தான் ஐந்து லட்சம் கொடுத்தார்.  அவ்வளவு ஏன்?  எழுத்து உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய சுஜாதாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தபோது அதற்கு அவரிடம் பணம் இல்லாமல், இயக்குனர் மணி ரத்னமும் கமல்ஹாசனும்தான் பணம் கொடுத்ததாக தினசரிகளில் செய்தி வந்தது.

காரணம், என்னதான் சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் எழுத்தாளனுக்கு பத்திரிகைகள் இருநூறு ரூபாய்தான் கொடுத்தன.  இப்போது 900 ரூ. (நூறு ரூபாய் வருமான வரிக்குப் பிடித்துக் கொள்கிறார்கள்!) 

நாலாயிரம் ஆண்டு இலக்கிய வரலாற்றில் நான்தான் முதல் முதலாக எழுத்தாளனுக்குப் பணம் கொடுங்கள் என்று வாசகர்களிடம் கேட்டேன்.  அப்போது என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று ஊரே தூற்றிக்கொண்டிருந்த போது ஜெயமோகன் ஒருத்தர்தான் “சாரு கேட்பதில் தப்பே இல்லை” என்று ஆணித்தரமாக எழுதினார்.  ஒருமுறை அல்ல, பலமுறை எனக்கு ஆதரவாக எழுதினார்.  இத்தனைக்கும் அப்போது அவருக்கும் எனக்கும் இலக்கியத்தில் பெரும் வெட்டுக்குத்து நடந்து கொண்டிருந்த காலகட்டம்.

சென்ற ஆண்டு பெங்களூரில் ஜெயமோகனின் உரை காலை ஆறு மணிக்கு நிகழ்ந்தது.  ஐநூறு பேர் வந்திருந்தார்கள்.  பெங்களூரில் குளிர்காலத்தில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு இருநூறு ரூபாய் கட்டணம். 

இதற்கெல்லாம் யார் விதை போட்டது?

என்.எஃப்.டி.யில் என் நாவல் பெட்டியோவை ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய்க்கு இரண்டு பேரும், பதினைந்தாயிரம் ரூபாய்க்கு நாற்பது பேரும் வாங்கினார்கள். 

இனிமேல் எழுத்தாளர்களை இந்த சமூகம் கவனித்துக் கொள்ளாவிட்டாலும் வாசகர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

இத்தனையும் ஏன் எழுதினேன் என்றால், நேற்று என் தோழி நித்யா ஒரு விஷயம் சொன்னாள்.  அவள் ஒரு விலங்கு ஆர்வலர்.  அவளுடைய அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த ஒரு தாய்ப் பூனையை காவலாளி கம்பால் அடித்து பூனையில் காலை ஒடித்து விட்டான்.  விட்டால் பூனை செத்து விடும்.  நித்யா அந்தப் பூனையை எடுத்துச் சென்று மருத்துவம் பார்த்து வெளியூரிலிருந்து சென்னை வந்து இங்கே உள்ள ஒரு ஷெல்டரில் விட்டாள்.  எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் செலவு.  ஷெல்டருக்கே இருபத்தைந்தாயிரம் கொடுக்க வேண்டும்.  மாதம் எழுபது ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ள குடும்பம்.  கணவனின் சம்பளம்.  நித்யா கல்லூரியில் படிக்கிறாள்.  இனிமேல்தான் வேலைக்குப் போக வேண்டும்.  சொந்த வீடும் கிடையாது. 

நித்யா என்று இல்லை, எந்தப் பெண்ணிடம் பேசவும் எனக்கு அச்சமாகவும் பீதியாகவும் உள்ளது.  பத்து நிமிடம் பேசினால் பத்து நிமிடமும் பூனை பற்றித்தான் பேசுகிறார்கள்.

நித்யா அந்தத் தாய்ப்பூனையைக் காப்பாற்றியது மிகப் பெரிய செயல்.  நானாக இருந்தாலும் அதையேதான் செய்திருப்பேன்.  ஆனால் அதற்குப் பிறகு ஒன்று சொன்னாள்.  அதைக் கேட்ட பிறகுதான் இத்தனை நீளமான கதையை எழுத ஆரம்பித்தேன்.

நித்யா என் வாசகர் வட்டத்தின் முக்கியமான ஆள்.  என் எழுத்தைக் கரைத்துக் குடித்தவள்.  அவள் சொன்னாள்.  ”பூனை ஷெல்டர்களுக்கு இனிமேல் மாதாமாதம் நன்கொடை கொடுக்கப் போகிறேன்.”

அடப் பாவி என்று நினைத்துக்கொண்டேன்.  வேலை இல்லை.  மாதச் சம்பளம் கைக்கும் வாய்க்குமாகப் போகிறது.  ஒரு பெருநகரத்தில் வீட்டு வாடகை வேறு பெரும் தொகை கொடுக்க வேண்டும். 

நான் அவளிடம் என்னவெல்லாம் சொல்ல நினைத்தேனோ அதையெல்லாம்தான் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நான் ஒரு தனி மனிதன் இல்லை.  நான் எழுதுவது தமிழ் தெரிந்த ஆயிரம் பேருக்கு இல்லை.  நான் ஒட்டு மொத்த மானுட குலத்துக்காக எழுதுகிறேன்.  என்னிடம் செயல்படுவது தமிழ் மனம் இல்லை.  நான் எழுதுவது தமிழில் எழுதப்பட்ட ஃப்ரெஞ்ச் நாவல்கள். 

ஜெனேயின் திருடனின் நாட்குறிப்பு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?  நான் இருபத்தைந்து வயதில் அதைப் படித்தேன்.

ஜெனேவுக்கு அப்போது இருபது வயது.  பாரிஸில் உள்ள Barrio Chino (சைனா டவுன் என்பார்கள் ஆங்கிலத்தில்) (13th arrondissement) என்ற பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களோடு நடைபாதையில் வசிக்கிறார் ஜெனே. பிச்சை எடுப்பதுதான் தொழில்.  அப்போது ஒருநாள் ஜெனே போலீஸால் கைது செய்யப்படுகிறார்.  லாக்கப்பில் தள்ளும்போது ஜெனேயின் பாக்கெட்டில் ஒரு வஸ்து கிடைக்கிறது.  வாஸலின்.  அந்த வாஸலின் ட்யூபை வைத்துக்கொண்டு ஒவ்வொரு போலீஸும் அவரை அவமானப்படுத்துகிறார்கள். 

எதற்கு வாஸலின்?  குதப்புணர்ச்சி செய்யும்போது ஆண்குறி இசைவாகச் செயல்படுவதற்கு உதவுவதற்காக. 

இப்படிப்பட்ட நாவல்களைப் படித்து விட்டுத் தமிழ் இலக்கிய உலகில் நுழைந்த நான் ”கால்பந்து மைதானத்தில் கெட்ட வார்த்தை எழுதியிருந்தது” என்று எழுதும் சுந்தர ராமசாமியின் எழுத்தால் எந்த அளவு கலவரம் அடைந்திருப்பேன்?

ஆரம்பத்திலிருந்தே நான் இந்தத் தமிழ் எழுத்தாளர்களின் middle class ethosஇடமிருந்து விலகி வந்து விட்டேன். 

இன்னொரு சம்பவமும் சொல்கிறேன்.  லாஸ் ஏஞ்ஜலஸ் நகரின் புத்தகக் கடைக்குப் போகிறார் லிண்டா கிங்.  அங்கே ஒரு புத்தகத்தை எடுத்தால் கவிதையின் முதல் வரியே God tongues out your asshole என்று இருக்கிறது.  சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி.  ”யார் இவர்?  ஹோமோசெக்‌ஷுவலா?” என்று கடைக்காரரைக் கேட்கிறார் லிண்டா.  ”இதோ அவரே இங்கே வந்திருக்கிறார், கேட்டு விடலாம்” என்கிறார் கடைக்காரர்.   அப்போது ப்யூகோவ்ஸ்கிக்கு ஐம்பது வயது.  ப்யூக்கின் நண்பன் நீலி அப்போது அவர்கள் அருகே வருகிறான்.  பள்ளி அல்லது கல்லூரி மாணவனாக இருக்க வேண்டும்.  டீன் ஏஜ் பையன்.  ”ப்யூகோவ்ஸ்கி ஹோமோசெக்‌ஷுவலா என்று இந்த லேடி தெரிந்து கொள்ள விரும்புகிறார்” என்று நீலியிடம் சொல்கிறார் கடைக்காரர்.

அப்போது நீலி லிண்டாவிடம் சொல்கிறான்.  “He doesn’t suck my dick.”

வாசகர் வட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு வரை நான் ஒன் மேன் ஆர்மியாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.  இப்போதும் ஒன்மேன் ஆர்மிதான்.  ஆனால் துணையாக இருபது பேர் நிற்கிறார்கள். 

மொழிபெயர்ப்புக்காக மட்டுமே நான் கடந்த ஆண்டுகளில் இருபது லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன்.  இன்னமும் செய்து கொண்டிருக்கிறேன்.  எழுபது வயது ஆகியும், இன்னமும் என் எழுத்து இந்தியாவை விட்டு வெளியே செல்ல முடியாமல் இருக்கிறது.  அதற்கு எனக்கு யு.கே.விலும் அமெரிக்காவிலும் இலக்கிய ஏஜெண்டுகள் தேவை.  யு.கே.விலும் அமெரிக்காவிலும் என் நூல்கள் பதிப்பிக்கப்பட வேண்டும்.  அப்போதுதான் புக்கர் போன்ற விருதுகளுக்கே நான் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.  இப்போதைக்கு போட்டியில் கலந்து கொள்ளவே தகுதி இல்லை.  பெட்டியோவுக்கும், அன்பு நாவலுக்கும் மொழிபெயர்ப்புக்காக ஆறு லட்சம் ரூபாய் உடனடியாகத் தேவை.  எங்கே போவது என்று தெரியவில்லை.  இப்போதெல்லாம் நான் பணம் கேட்டு எழுதுவதில்லை.  எழுதினால் எனக்கு நெருக்கமான நண்பர்கள்தான் அனுப்புகிறார்கள்.  அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையிலேயே எழுதி விடலாம். 

மற்றபடி பத்துப் பதினைந்து நண்பர்கள் மாதம் நூறு ரூபாய் அனுப்புகிறார்கள்.  அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆட்டோ டிரைவர்கள்.  வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை.  ஆனந்தி மாதம் ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள அலோபதி மாத்திரைகள் அனுப்புகிறாள்.  ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க உதவும் மாத்திரைகள்.  மன ஊனமுற்ற, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு அவள் செவிலித்தாயாக இருப்பவள்.  மாத ஊதியம் இருபத்தைந்தாயிரம்.  வேண்டாம் அம்மா என்றேன்.  இல்லை, என் குருவுக்குச் செய்கிறேன், தடுக்காதீர்கள் என்றாள்.  மறுபடியும் வேண்டாம் அம்மா என்றேன்.  மாலையில் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுக்கிறேன், அதில் கொஞ்சம் பணம் வருகிறது என்றாள்.  விட்டுவிட்டேன். 

நித்யா, பூனைகளுக்கு தானம் செய்ய மனிதர்கள் இருக்கிறார்கள்.  எழுத்தாளர்களை கவனிக்க இங்கே நாதியே இல்லை.  அதிலும் நான் ஒரு இயக்கமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.  அதற்கு உன்னுடைய நேரம் தேவை.  மற்ற எதெல்லாம் கொடுக்கக் கிடைக்கிறதோ அத்தனையும் தேவை.   

இன்னமும் சொல்ல இருக்கிறது.  பூனைகளைக் காப்பாற்றுவதை விட எனக்கு உதவி செய்வது ஏன் முக்கியம்?

பூனையை காவலாளி ஏன் காலை அடித்து முடமாக்கினான்?

அந்தத் தாய்ப்பூனை ஒவ்வொரு வீடாகச் சென்று சாப்பிடக் கேட்டிருக்கிறது.  ஒரு பயலும் தரவில்லை.  பசியில் கதறிக்கொண்டே இருந்திருக்கிறது.  நித்யா வெளியே போயிருக்கிறாள்.  சத்தம் தாங்க முடியாமல் காவலாளி பூனையைக் கொல்வதற்காக அடித்திருக்கிறான்.  அது காலில் பட்டு கால் போய் விட்டது.  உயிர் பிழைத்துக்கொண்டது.

காவலாளியை விடுங்கள்.  என் பிரச்சினையெல்லாம் DINKs பற்றித்தான்.  எல்லா இளைஞர்களும் இன்று Double Income No Kids என்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.  அது அவர்கள் விருப்பம்.  ஆனால் நோய்க்கூறான விஷயம் என்னவென்றால், இப்படிப்பட்ட இளைஞர்கள் பாரதி சொன்ன வெட்டி மனிதர்களாக, பூமிக்குப் பாரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்குப் பணத்தைத் தவிர வேறு எதுவுமே முக்கியம் இல்லை.  நாற்பது வயதில் மனநோயாளிகளாக ஆகி விடுகிறார்கள்.  இன்னும் கொஞ்ச காலத்தில் இப்போது தெருவுக்கு நான்கு மருந்துக் கடைகள் இருப்பது போல நான்கு சைக்கியாட்ரிஸ்டுகள் இருப்பார்கள்.  ஒட்டு மொத்த சமூகமே மனநோய்க்கூடமாக மாறிக்கொண்டிருப்பதை எதிர்த்துத்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  அதுதான் என் போர்.  அதுதான் என் போராட்டம்.  அதற்குத்தான் கை கொடுங்கள் என்று உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். 

நித்யா, சமூக நோய் தீர்ந்து ஒரு நல்ல சமூகம் உருவாக வேண்டுமானால் என் எழுத்து பலரையும் போய்ச் சேர வேண்டும்.  அப்போது எல்லோரும் பல்லுயிர் ஓம்புவார்கள்.  புற்றுநோயை நான் அடியோடு நீக்க விரும்புகிறேன்.  தற்போதைக்கு நீ களிம்பு வாங்கப் பண உதவி செய்யப் போகிறேன் என்று சொல்லாதே.   

பணம் அனுப்ப விரும்பினால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai