டி.எம். கிருஷ்ணாவும் கருத்துச் சுதந்திரமும்

டி.எம். கிருஷ்ணா பற்றிய என் கட்டுரையை நானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அனுப்பினேன். அவர்கள் என் நண்பர்கள். அவ்வப்போது அதில் எழுதவும் சொல்லியிருந்தார்கள். ஆனால் கட்டுரையில் என் வாதத்துக்கான வலு இல்லை என்று பிரசுரம் மறுக்கப்பட்டு விட்டது. மற்ற ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும் அக்கட்டுரையைப் பிரசுரிக்காது. அவர்கள் அனைவருமே ஹிந்துத்துவாவைத் தீவிரமாக எதிர்ப்ப்பவர்கள். டி.எம். கிருஷ்ணாவை ஆதரித்து எழுதினால்தான் பிழைக்க முடியும். ஒரே ஒரு பத்திரிகையில் என் கட்டுரையை ஆரவாரமாகப் பிரசுரிப்பார்கள். ஆனால் அது ஹிந்துத்துவா பத்திரிகை. அதில் வெளியானால் ஆங்கில எழுத்துலகில் என் இடம் நிரந்தரமாக மூடப்பட்டு விடும். கிட்டத்தட்ட தற்கொலை. கிருஷ்ணா என்ற ஒருவருக்காக என் எழுத்து வாழ்க்கை முடக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் கட்டுரையை என் தளத்திலேயே வெளியிட முன்வந்தேன்.

நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதை என் எழுத்தை அறிந்தவர்கள் அறிவார்கள். மதங்களின் மீது எனக்குத் தனிப்பட்ட கோபமும் விமர்சனமும் உண்டு. மதங்களின் பேரால்தான் பூமியில் லட்சக்கணக்கான மனிதர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனாலும் மதங்களில் இருக்கும் நல்ல விஷயங்களில் நான் எப்போதுமே ஈடுபட்டு வந்திருக்கிறேன். உதாரணமாக, ஹிந்து மதம் தத்துவத்தில் கவனம் செலுத்துகிறது. இஸ்லாம் மனித வர்க்கத்துக்கு நெருக்கமாக இருக்கிறது. இப்படி நிறைய சொல்லலாம். இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்புகள் பற்றி ஔரங்ஸேப் நாவல் ஆயிரம் பக்கங்களில் பேசுகிறது. ஆனால் அதனால் எந்தப் பலனும் இல்லை. நீங்கள் ஹிந்து மதத்தைத் திட்ட வேண்டும். விமர்சனம் மட்டும் போதாது. திட்ட வேண்டும். அப்போதுதான் நீங்கள் இந்திய மற்றும் சர்வதேச புத்திஜீவிகளால் கொண்டாடப்படுவீர்கள். அதைத்தான் டி.எம். கிருஷ்ணாவும், பெருமாள் முருகனும், அருந்ததி ராயும் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இந்த விவகாரத்தில் நான் கிருஷ்ணாவை எதிர்த்து எழுதுவதால் தமிழ்ப் பெரியாரியவாதிகள் என் மீது அவதூறு செய்கிறார்கள். இன்றைக்குப் பெரியார் பெயரைச் சொன்னால்தான் பிழைக்க முடியும். பெரியார் பெயரைச் சொல்லி பிழைக்கும் டி.எம். கிருஷ்ணாவுக்கு பெரியார் கடவுள் மறுப்பைத் தவிர வேறு என்னவெல்லாம் சொன்னார் என்று தெரியுமா?

பெரியாரின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, தேசாபிமானம், பாஷாபிமானம், குலாபிமானம் கூடாது என்பது. இந்த மூன்றைப் பற்றியும் கிருஷ்ணா பாடுவாரா? பெரியாரியவாதிகள்தான் இன்று திராவிட இனத்தின் பெருமை பாராட்டுபவர்களாகவும் மிகத் தீவிரமான மொழிப் பற்று கூட அல்ல, மொழி வெறி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆக, கிருஷ்ணா தமிழ்ப் பற்று கூடாது என்று பாடுவாரா? அது பெரியாரின் கொள்கை ஆயிற்றே?

பெரியாரின் மற்றொரு முக்கியமான சிந்தனை, கற்பு, குடும்பம் என்பதெல்லாம் பெண்களை அடிமைப்படுத்துவதற்காக ஆணாதிக்கவாதிகளால் கட்டமைக்கப்பட்ட விலங்குகள் என்பது. அந்த விலங்குகளை உடைத்தெறியுங்கள் என்று பெண்களிடம் அவர் பிரச்சாரம் செய்துகொண்டே இருந்தார். கிருஷ்ணா உண்மையான பெரியாரியவாதியாக இருந்தால் பெண் கற்பு என்பது காட்டுமிராண்டித்தனம் என்று பாட வேண்டும். ஆனால் பாட மாட்டார். கிருஷ்ணாவும் சரி, மற்ற அரைகுறை பெரியாரியவாதிகளும் சரி, பெரியாரிடம் மிகச் சுலபமாக எடுத்துக் கொள்ளக் கூடிய கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும்தான் பேசுவார்கள். ஏனென்றால், அது ஒன்றுதான் பிரச்சினை இல்லாதது. கடவுளும் பிராமணர்கள் மாதிரிதான். என்ன சொன்னாலும், எவ்வளவு இழிவு படுத்தினாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சண்டைக்கு வராமல், தானுண்டு தன் வேலையுண்டு என தம் பிள்ளைகளைப் படிக்க வைத்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும் பிராமணர்கள் மாதிரிதான் கடவுளும்… எதையுமே கண்டுகொள்ள மாட்டார். அதனால் கடவுளைத் திட்டத் திட்ட திட்டுபவர்களுக்கு லாபம்தான். நாம் என்ன மற்ற மதத்தின் கடவுளையா திட்டுகிறோம்? அப்போதுதானே நம் தலை நம் உடலில் இருப்பது பற்றிக் கவலைப்பட வேண்டும்? ராமரையும் பிள்ளையாரையும்தானே திட்டுகிறோம்? யாருக்கு அஞ்ச வேண்டும்?

கிருஷ்ணாவின் லுங்கி பற்றியே இன்னும் எழுத இருக்கிறது. அம்பேத்கரின் கோட் சூட் பற்றி நமக்குத் தெரியும். இது பற்றி அம்பேத்கரிடம் கேட்டார்கள். காந்தி இப்படி லங்கோடு கட்டிக்கொண்டு எளிமையாக இருக்கும்போது நீங்கள் மட்டும் கோட்டு சூட்டு டை என்று ஆடம்பரமாக இருக்கிறீர்கள், நட்சத்திர ஓட்டல்களில் தங்குகிறீர்களே என்று. அதற்கு அம்பேத்கர் சொன்னார், ”காந்தி மேட்டுக்குடியிலிருந்து வந்தவர். அவர் இப்போது லங்கோடு போட்டுக் கொள்ளலாம். நானோ பள்ளிக்கூடம் போகும்போதே லங்கோடுதான் போட்டுக்கொள்ள முடிந்தது. இப்போதும் என் மக்கள் லங்கோடைத் தாண்டி மேலே வர முடியவில்லை. இன்னமும் லங்கோட்டுடன் தான் வாழ்கிறார்கள். நான் தான் அவர்களுக்கு என் வாழ்வின் மூலம் நம்பிக்கையை அளிக்கிறேன்; படிப்பு நம்மை விடுதலை செய்யும் என்று. நானும் காந்தி மாதிரி லங்கோடு அணிந்தால் நாலாயிரம் ஆண்டுகளாய் லங்கோட்டுடன் வாழ்ந்து வரும் நம் மக்களுக்கு நம்பிக்கையின் வெளிச்சமே கிட்டாது.”

லுங்கிக்கும் இதே பின்னணிதான். அய்யங்கார் குடும்பத்தில் பிறந்து, ஒரு சர்வதேசப் பள்ளியில் படித்து, இசை கற்றுக்கொண்டு, ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு, மேட்டுக்குடியில் வாழும் கிருஷ்ணா லுங்கியுடன் கச்சேரி செய்வது ஒரு ஃபேஷன். ஒரு gimmick. ஆனால் ஆங்கிலம் தெரியாமல், படிப்பு இல்லாமல், வாழ்க்கை பூராவும் லுங்கி கட்டிக் கொண்டு திரியும் விளிம்புநிலை மனிதன் இனிமேல் வீட்டில் இருக்கும்போது கூட பட்டு வேஷ்டி அணியும் நிலை வர வேண்டும். நான் அம்பேத்கரைப் படித்ததுமே லுங்கியைக் கழற்றி வீசி விட்டேன். எப்போதும் பட்டு வேஷ்டிதான். வீட்டிலும் பட்டு வேஷ்டியே. ஏனென்றால், நான் இருபத்தைந்து வயது வரை சிம்னி விளக்கில் படித்தவன். இருபது வயது வரை காலில் செருப்பு அணிந்திராதவன். சேரியில் பிறந்து வளர்ந்தவன். எழுபது வயதில்தான் எனக்கு ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறி எழுத வருகிறது. இதுவரை எனக்குத் தெரிந்த ஒரே மொழி தமிழ்தான். அதிகாரமே இல்லாத ஒரு மொழி.

எனவே, கிருஷ்ணா லுங்கி அணிந்து கச்சேரி செய்வதன் மூலம் பஞ்சைப் பராரிகளின் மீது தன் மேட்டுக்குடி வன்முறையை ஏவுகிறார் என்றே அர்த்தமாகிறது. பஞ்சைப் பராரிகளின் லுங்கியைக் கட்டிக் கொண்டு அவர்களைப் பரிகசிக்கிறார். அவர்களின் வறுமையைத் தன்னுடைய மேட்டுக்குடி ஃபேஷனாகப் பயன்படுத்துகிறார்.

மட்டுமல்லாமல் பிராமண சமூகம் கொடுத்த அத்தனை சௌகரியங்களையும் அனுபவித்துக்கொண்டு வாழும் ஒருவர் எப்படி விளிம்புநிலை மனிதர்களின் கலாச்சாரத்தைக் கையில் எடுக்க முடியும்? உதாரணமாகப் பாருங்கள். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது விழா போன்ற ஒன்று இந்தியாவிலேயே இல்லை. ஆனால் அது பற்றி ஆங்கிலப் பத்திரிகைகள் கண்டு கொள்வதே இல்லை. பி.ஆர். மூலமாக நாமாகச் செய்தி கொடுத்தால்தான் ரெண்டு வரி போடுவார்கள். மற்றபடி அந்த முக்கியமான விழா பற்றி எந்தச் செய்தியும் வருவதில்லை. ஜெயமோகன் மட்டுமல்ல, தேவிபாரதியின் நொய்யல் என்ற நாவல் தமிழில் நிகழ்ந்த ஒரு சாதனை. ஆனால் அது பற்றி எந்தச் செய்தியும் இல்லை. தேவிபாரதியை தமிழர்கள் அறிய மாட்டார்கள். அவ்வளவு ஏன், அசோகமித்திரனை ஒத்த ஒரு எழுத்தாளர் இந்தியாவிலேயே இல்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த எழுத்தாளர்களுமே அசோகமித்திரன் செய்த சாதனைகளுக்குக் கீழே இருப்பவர்கள்தான். ஆனால் அசோகமித்திரன் மரணத்துக்கு இருபத்தைந்து பேர் வந்தார்கள். அசோகமித்திரனை தமிழ்நாட்டுக்கு வெளியே எந்த இலக்கியவாதிக்கும் தெரியாது. ஆனால் கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி இந்தியா முழுவதும் பிரபலமானவர். யார் காரணம்? தமிழ்நாட்டின் ஆங்கிலப் பத்திரிகைகள்தானே அசோகமித்திரனை இருட்டடிப்பு செய்தன?

ஒரு தேர்ந்த சமூகத்தில் அதன் சமூகப் புரட்சி அம்மொழியின் தத்துவவாதிகளிடமிருந்தும் எழுத்தாளர்களிடமிருந்தும் கவிகளிடமிருந்தும் வர வேண்டும். உலகம் பூராவும் அப்படித்தான் நடந்தது. தமிழ்நாட்டில் மட்டும்தான் அது சினிமாக்காரர்கள் மூலமாகவும் இப்போது சங்கீதக் கலைஞர்கள் மூலமாகவும் நடக்கிறது. எப்படி இருக்கும்? எம்ஜியாரின் அண்ணாயிசம் மாதிரியும், கிருஷ்ணாவின் அரைவேக்காட்டுக் கட்டுரைகள் மாதிரியும்தான் இருக்கும். உதாரணம் சொல்ல வேண்டுமானால், நான் போய் சங்கீதக் கச்சேரி செய்வது மாதிரிதான் கிருஷ்ணா கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறார். நான் கச்சேரி பண்ணினால் கல்லால் அடிப்பார்கள். கிருஷ்ணா கட்டுரை எழுதினால் மக்ஸேஸே விருது கொடுக்கிறார்கள். ஒரு பண்பாட்டின் அடையாளம், ஒரு மொழியின் அடையாளம் அதன் எழுத்தாளன் என்றார் மகா பெரியவர். அந்த அடையாளத்தையும் சினிமாக்காரர்களும், சங்கீதக் கலைஞர்களும் பிடுங்கிக் கொண்டால் என்னய்யா நியாயம்?

கூடிய விரைவில் கிருஷ்ணாவுக்கு நோபல் அமைதிப் பரிசோ நோபல் இலக்கியப் பரிசோ கிடைக்கும். அப்படிக் கிடைத்தால் எழுத்தாளர்களின் பிரேதங்களின் மீது நடந்து சென்றுதான் அந்த விருதை கிருஷ்ணா வாங்க வேண்டும். அப்போதும் அசோகமித்திரனின் ஆவி என்னிடம் “ரவி (என்னை அப்படித்தான் அசோகமித்திரன் அழைப்பார்), நீ ரொம்ப சத்தம் போடறே? அது எழுத்தாளனுக்கு அழகல்ல” என்றுதான் கண்டிக்கும்.