ஹா ஹா ஹா ஹா… (3)

மலேஷியாவிலிருந்து ஒரு அன்பர்… பெண் எழுத்தாளர்கள் பற்றி ஜெயமோகன் எழுதிய போது பிரச்சினை ஆன சமயத்தில் ஜெயமோகனை ஆதரித்து எழுதிய ஒரு கட்டுரையில்   அனாவசியமாக என் பெயரை இழுத்து, உலக இலக்கியத்தைத் தன் சுண்டு விரலில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாரு நிவேதிதா சு. வேணுகோபாலைக் கூட படித்ததில்லை; என்னிடம் நேர்ப்பேச்சில் சொன்னார் என்று எழுதியிருக்கிறார்.   இப்படித்தான் போகிற போக்கில் என்னைத் தூற்றி விட்டுப் போகிறார்கள்.  நான் எப்போது உலக இலக்கியத்தை என் கையில் வைத்திருப்பதாகச் சொன்னேன்?  என்ன முட்டாள்தனம் இது?  இவ்வளவு முட்டாள்தனமாக ஒருவன் நினைக்க முடியுமா?  உலக இலக்கியம் என்பது ஒரு சமுத்திரம்.  சமுத்திரத்தை எந்த மடையனாவது தன் கையில் வைத்திருக்கிறேன் என்று சொல்வானா?  இந்த ஆளை நேரில் சந்தித்தால் செருப்பை எடுத்துக் காண்பிக்கலாம் என்று இருக்கிறேன்.

சு. வேணுகோபால் யார் என்று எனக்கு ஒரு மாதம் முன்பு வரை தெரியாது.  தெரிய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.  ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்த ஒரு பைத்தியக்காரத்தனமான செய்தி பற்றி ஜெயமோகனுக்கு அவர் வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.  அதைப் பகடி செய்து எழுதியிருந்தார் ஜெ.  அப்போதே நினைத்தேன், இந்தப் பகடி எல்லாம் தமிழர்களுக்குப் புரியாதே என்று.  அதேபோல் நிகழ்ந்தது.  அந்தப் பகடியைப் புரிந்து கொள்ளாமல் ஜெயமோகனே அப்படிச் சொன்னது போல் நினைத்து அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு கூட்டத்தில் பேசி கைதட்டல் வாங்கியிருக்கிறார் வேணுகோபால்.  அதையும் ஜெ.யின் blog-இல் தான் படித்தேன்.   இப்படி ஒரு பகடியைக் கூடப் புரிந்து கொள்ளாத அறிவுக் கொழுந்தை நான் படித்ததில்லை என்று மலேஷியா சென்றிருந்த போது சொன்னேனாம்.  அதைக் கேட்டு, நினைவில் வைத்துச் சொல்கிறார் மலேஷியத் தம்பி.  துளிக்கூட சம்பந்தமே இல்லாமல் என் பெயரை இழுத்திருக்கிறார் அவர்.  என்ன விஷயம் என்றால், ஜெயமோகனை ஆதரித்து எழுதப்பட்ட கட்டுரையில் போகிற போக்கில் என் மண்டையில் ரெண்டு தட்டு தட்டினால் ஜெயமோகன் சந்தோஷப்படுவார் என்று நினைத்திருக்கிறது இந்த மட்டி.  ஜெயமோகன் ஒன்றும் அவ்வளவு பலகீனமானவர் அல்ல.  அப்படியெல்லாம் நீ அவரை குஷிப்படுத்தி விட முடியாது.

அது ஏன் எழுதத் தொடங்கி விட்டால் அந்த எழுத்து ஒருவரை இந்த அளவுக்கு வக்கிரமானவனாகவும் அயோக்கியனாகவும் மாற்றி விடுகிறது என்று எனக்குப் புரியவே இல்லை.  ஈரோடு நண்பர்கள் ஸ்ரீதரையும் ரமேஷையும் நான் தான் வாசகர் வட்டத்துக்கு அறிமுகம் செய்தேன்.  எந்தப் பிரச்சினையும் இல்லை.  ஏனென்றால், அவர்கள் வாசகர்கள் மட்டுமே; எழுத்தாளர்கள் இல்லை.  ஆனால் சுந்தரம் எழுத்தாளர்.  அதனால்தான் பிரச்சினை.  நான் நினைக்கிறேன்.  எழுதத் தொடங்கி ரெண்டு பேர் பாராட்டியதும் தலையில் கொம்பு முளைத்து விடுகிறது.  எல்லோரையும் முட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.  தமிழில்தான் இப்படி நடக்கிறது.

தேவையில்லாமல் என் பெயரை இழுத்து என் மீது அவதூறு செய்திருக்கும் அந்த மலேஷிய எழுத்தாளரைப் போன்ற நன்றி கெட்ட மிருகத்தை நான் பார்த்ததே இல்லை.  அவருடைய இணைய இதழ் பற்றி சாரு ஆன்லைனில் விளம்பரம் கொடுக்கச் சொன்னார்.  பல மாதங்கள் அந்தக் காரியத்தை இலவசமாகச் செய்தேன்.  அவர் பயன் அடைந்தார்.  பிறகு அதில் அவர் என்னை ஒரு பத்தி எழுதச் சொன்னார்.  எழுதினேன்.  காசு கொடுத்தாரா ஓசியா என்று நினைவு இல்லை.  இப்படியெல்லாம் என்னிடமிருந்து உதவி வாங்கி விட்டு, நன்றி தெரிவித்து விட்டு, இப்போது ஜெயமோகனை சந்தோஷப்படுத்தலாம் என்று நினைத்து போகிற போக்கில் என் மீது அவதூறு வீசுகிறார்.  நான் எங்கே ஐயா உலக இலக்கியத்தைக் கை விரலில் வைத்திருப்பதாகச் சொன்னேன்?  இப்படிச் சம்பந்தமில்லாமல் என் பெயரை இழுத்து அவதூறு செய்து என்னை மன உளைச்சல் கொடுத்ததற்கு உனக்கு என்ன தண்டனை தெரியுமா?  என்னுடைய நேர்ப்பேச்சைத் திருகி அதை மேற்கோள் காண்பித்திருக்கிறாய்.  உன்னைப் போன்ற ஒரு மனித மிருகத்தை நேரில் சந்தித்ததற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்; அவமானம் அடைகிறேன்.  வேணுகோபாலை நான் எதற்குப் படிக்க வேண்டும்?  அவர் என்ன தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத பெயரா?  ஆஃப்டர் ஆல், ஒரு பகடியைக் கூட பகடியெனப் புரிந்து கொள்ளத் தெரியாதவர்களையெல்லாம் நான் படிப்பது எனக்கே அவமானம் இல்லையா?  இப்படி என்னை இகழும் இந்த மலேஷியப் பொடியனுக்கு முப்பது வயது இருக்கும்.  ஆனால் நான் நாற்பது வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இந்தத் தம்பி என் எழுத்து முழுவதையும் படிப்பதாக இருந்தால்  அதற்கு அவருக்கு ஒரு ஆயுள் போதாது.  இப்படிப்பட்டவர் என்னை இகழ்கிறார்.  அப்புறமாகக் கேள்விப்பட்டேன், சு. வேணுகோபால் சாகித்ய அகாதமியோ, ஞானபீடமோ ஏதோ வாங்கியிருக்கிறார் என்று.  அதற்கு என்ன?  தமிழில் அகிலனுக்குத்தான் ஞானபீடம் கிடைத்திருக்கிறது.  அதற்காக அகிலனைப் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்பேர்ப்பட்ட மடத்தனம்?  மலேஷிய பப்-களில் நான் ஏகப்பட்ட தமிழ் இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன்.  பார்க்க நம் தமிழ் சினிமா வில்லன்களைப் போல் இருப்பார்கள்.  குண்டாக, கழுத்திலும் கையிலும் எக்கச்சக்கமான தங்கச் சங்கிலிகள் மினுங்க குடித்துக் கொண்டிருப்பார்கள்.  அவர்கள் ஆயுளில் ஒரு புத்தகம் கூடப் படித்திருக்க மாட்டார்கள்.  ஆனால் அவர்களை விட புத்தகம் படிக்கும் நீ கீழானவனாக இருக்கிறாயே?  எனக்கு ஒரே ஒரு கவலைதான் தம்பி…  சம்பந்தமே இல்லாமல் என் மீது அற்பத்தனமான அவதூறை வீசி விட்டுப் போகும் நீ உன்னுடைய குழந்தைகளுக்கு எந்த விதமான மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுப்பாய் என்பதுதான்.  எழுத்தும் வாசிப்பும் உன்னைக் கீழ்மைக் குணங்களின் உறைவிடம் ஆக்கி விட்டது.  அமிர்தம் உனக்கு நஞ்சாகி விட்டது தம்பி.

நான் எப்போதுமே சர்வதேச இலக்கியத்தை உள்ளங்கையில் வைத்திருப்பதாகச் சொன்னதில்லை.  அப்படிச் சொல்பவன் மூடன்.  சர்வதேச இலக்கியம் ஒரு சமுத்திரம்.  எனக்கு சீன, ஜப்பானிய, ஆஃப்ரிக்க இலக்கியம் பற்றி எதுவுமே தெரியாது.  ரஷ்ய இலக்கியத்தில் கூட தஸ்தயேவ்ஸ்கி, செகாவ் போன்ற ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரையும் படித்தது கிடையாது.  இது பற்றி நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.  மற்ற தமிழ் எழுத்தாளர்களைப் போல் எனக்கு ருஷ்ய இலக்கியம் தெரியாமல் போனதற்குக் காரணம், நான் இளம் வயதிலேயே ஃப்ரெஞ்ச், ஆங்கில இலக்கியத்தைக் கற்க ஆரம்பித்து விட்டதுதான்.  மாப்பஸான், விக்தொர் யூகோ, ஜான் ஜெனே,  Louis-Ferdinand Céline போன்றவர்களை என்னுடைய 25 வயதுக்குள்ளேயே படித்து விட்டேன்.  இலக்கிய வெளிவட்டம், படிகள் போன்ற பத்திரிகைகளில் செலின் மற்றும் ஜெனேவின் எழுத்தை ஒப்பிட்டு எழுதியிருக்கிறேன்.  ஆனால் காஃப்காவையும் கம்யுவையும் தவிர வேறு ஐரோப்பிய எழுத்தாளர்கள் யாரையும் தெரியாத தமிழ்ச் சூழலில் நான் எழுதியதெல்லாம் காது கேளாதவனின் காதில் ஊதிய சங்காகவே போய் விட்டது.   இதுவரை என் வாழ்நாளில் செலினின் எழுத்தைப் படித்த இரண்டு பேரை மட்டுமே சந்தித்திருக்கிறேன்.  ஒருவர், 2001-இல் பாரிஸில் சந்தித்த ஒரு பெண்.  ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி.  அவளிடம் செலினுக்கும் ஜெனேவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருந்த போது அவள் மிகவும் ஆச்சரியம் அடைந்தாள். அவள் சொன்ன வார்த்தைகளை இங்கே எழுதினால் அது அதிக பட்ச தற்பெருமை ஆகி விடும்.  வேண்டாம்.  இன்னொருவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்த இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ்.  இவருடைய Walls of Delhi என்ற சிறுகதைத் தொகுப்பும், என்னுடைய ஸீரோ டிகிரியும் தான் Jan Michalski விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பத்து புத்தகங்களில் இடம் பெற்ற இந்திய நூல்கள்.  இந்த இரண்டு பேரைத் தவிர செலினின் எழுத்தைப் படித்த எந்த எழுத்தாளரையும் இதுவரை நான் சந்தித்தது இல்லை.  பல ஃப்ரெஞ்சுப் பேராசிரியர்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்.  ம்ஹும்.  ஒருவருக்குக் கூட செலினின் எழுத்தில் பரிச்சயம் இல்லை.  பலருக்கு அவருடைய பெயரே தெரிந்திருக்கவில்லை.  ஜெனே அவருடைய இடதுசாரிக் கருத்துக்களாலும் ஓரினச் சேர்க்கையாளர் என்ற அந்தஸ்தினாலும் புகழ் அடைந்தவர்.  செலின் அப்படி அல்ல.  செல்வந்தர்.  மருத்துவர்.  ஆனால் வலதுசாரிக் கருத்துக்கள் கொண்டவர்.  அரசியலைப் புறக்கணித்தவர்.  பத்திரிகையாளர்களால் கூட அவரைச் சந்திக்க முடியாது.  நாய்களோடு வாழ்வதையே பெரிதும் விரும்பினார்.  மனிதர்களிடமிருந்து ஒதுங்கி தனிமையில் வாழ்ந்தார்.  ஆனால் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தில் ஜெனேவுக்கு நிகரான இடம் அவருக்கு உண்டு.  ஃப்ரெஞ்ச் மொழியை ஜெனே செழுமைப்படுத்தினார் என்றால் செலின் ஃப்ரெஞ்ச் மொழியில் குப்பையின் மொழியை எழுதினார்.  இதில் ஒரு முரணை நான் கண்டு பிடித்தேன்.  அதைத்தான் அந்த ஸோர்போன் மாணவியிடம் சொன்னேன்.  ஜெனே ஒரு அனாதை.  வேசி மகன்.  அப்பன் பெயர் தெரியாதவன்.  திருடன்.  போக்கிரி.  ஓரினச் சேர்க்கையாளன்.  ஆனால் அவன் எழுதியது மகா உயர்தரமான ஃப்ரெஞ்ச்சாக இருந்தது.  அவனுடைய ஃப்ரெஞ்ச் வைர வைடூரியங்களால் கோர்க்கப்பட்ட அற்புதமான ஆபரணமாக இருந்தது.  அதற்கு எதிராக மேட்டுக்குடியைச் சேர்ந்த செலின் குப்பைத் தொட்டியில் வாழ்பவர்களைப் பற்றி அல்ல – குப்பைத் தொட்டியில் வாழ்பவர்களின் மொழியில் எழுதினான்.  அந்த வகையில் ஜெனேயின் பங்களிப்புக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல செலினின் பங்களிப்பு.  சொல்லப் போனால் அதிகம்.  ஏனென்றால், அலங்கார மொழியை எழுத ஆயிரம் பேர் வருவார்கள்.  குப்பைத் தொட்டி மொழிக்குத்தான் ஆள் கிடையாது.  இதையெல்லாம் நான் தமிழில் எழுதிய போது என் வயது முப்பதுக்குள்.  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.  இப்போது ஒரு முப்பது வயது நிரம்பாத ஒரு பொடியன் என்னிடம் வந்து உலக இலக்கியத்தைக் கை விரலில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாரு நிவேதிதா என்று எழுதுகிறான்.  டேய் தம்பி,  உலக இலக்கியத்துக்கும் ஃப்ரெஞ்ச் இலக்கியத்துக்கும் வித்தியாசம் தெரியாத நீயெல்லாம் என் பெயரை உச்சரிக்கலாமா?  இப்போது சொல்கிறேன் புரிந்து கொள்.  எனக்கு உலக இலக்கியம் தெரியாது.  லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் கொஞ்சம் படித்திருக்கிறேன்.  ஆனால் கடந்த 200 ஆண்டுகளில் எழுதிய எல்லா ஃப்ரெஞ்ச் இலக்கியவாதிகளையும் படித்து விட்டேன்.  ஒரே ஒருவர் தான் விதிவிலக்கு.  காரணம், அவர் எழுதிய நாவல்கள் எதுவும் ஆங்கிலத்திலோ வேறு எந்த மொழியிலோ மொழிபெயர்க்கப்படவில்லை.  காரணம், அவருடைய மொழியில் சிலேடைகள் அதிகம்.  உதாரணமாக, அவருடைய Fils என்ற நாவலை எடுத்துக் கொண்டால், அதன் தலைப்பிலேயே ஒரு சிலேடை இருக்கிறது.  இந்த வார்த்தையில் எல்-ஐ விட்டு விட்டு fees என்று உச்சரித்தால் மகன் என்று பொருள்.  எஸ்-ஐ விட்டு விட்டு fi (l is silent) என்று உச்சரித்தால் நூல் என்று பொருள்.  நூல் என்றால் புத்தகம் அல்ல.  தைக்கும் நூல்.  இப்படி தலைப்பிலேயே இவ்வளவு வித்தை இருந்தால் புத்தகம் முழுவதும் எப்படி இருக்கும்?  Serge Doubrovsky என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் தான் அவர்.  அவரைத்தான் நான் இதுவரை படித்ததில்லை.   ஆனாலும் அவருடைய நாவல்களை ஃப்ரெஞ்சில் வாங்கி வைத்திருக்கிறேன்.  என்னுடைய ஃப்ரெஞ்ச் தோழிகளைப் படித்துக் காண்பிக்கச் சொல்லலாம் என்று பார்த்தால் அவர்களுக்கும் அவருடைய மொழி புரியவில்லையாம்.  சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஸீரோ டிகிரியைப் படித்து விட்டு (டேய் நாயே, துப்ரோவ்ஸ்கிக்குத் தமிழ் தெரியுமா என்று கேட்டு எனக்கு வசை கடிதம் தயாராகிக் கொண்டிருக்கிறது) கடிதம் எழுதியிருந்தார்.  என்னுடைய ஆட்டோஃபிக்‌ஷன் மாதிரியே உங்கள் நாவல் இருக்கிறது என்பது அவர் கடிதத்தின் சாரம்.  அப்போதுதான் எனக்கு ஆட்டோஃபிக்‌ஷன் பற்றித் தெரிந்தது.  ஆக, எனக்கு ஃப்ரெஞ்ச் இலக்கியம் மட்டுமே தெரியும் என்று மார் தட்டிச் சொல்லிக் கொள்ளலாம்.  ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரிந்திருப்பதால், அதன் உப பிரிவான Francophile இலக்கியமும் நன்கு தெரியும்.  அதாவது, ஃப்ரான்ஸின் காலனியாக இருந்த நாடுகளின் இலக்கியம்.  அரபி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அவர்கள் இப்போது ஃப்ரெஞ்சில் எழுதுகிறார்கள்.  அதுவே ஃப்ரான்கோஃபீல் லிட்ரேச்சர்.  தாஹர் பென் ஜெலோன், அஸியா ஜெப்பார், மொஹமத் ஷுக்ரி போன்றோர்.  ஒன்றிரண்டு பேரைத் தவிர இவர்கள் எல்லோரையும் படித்து விட்டேன்.  அந்த வகையில்தான் சொல்கிறேன், இன்றைய சர்வதேச இலக்கியத்தில் சமகால அரபி இலக்கியம்தான் உச்சத்தில் இருக்கிறது.  ஃப்ராங்கொஃபீல் இலக்கியத்திலிருந்து நேரடி (சமகால) அரபி இலக்கியமும் கற்றேன்.  அதில் கிடைத்த பொக்கிஷம் தான் அப்துர் ரஹ்மான் முனிஃப்.  சவூதி அரேபியாவைச் சேர்ந்த இவர் கஸான்ஸாகிஸுக்கு நிகரானவர்.  அரபி இலக்கியத்தின் கார்ஸியா மார்க்கேஸ் என்று சொல்லலாம்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர் பெயரே யாருக்கும் தெரியவில்லை.  ஆக, ஃப்ரெஞ்ச் மற்றும் அரபி இலக்கியம் மட்டுமே நான் அறிந்தது.  ஆனால் இதில் ஒருவர் விடாமல் படித்து விட்டேன்.

சமீபத்தில் ஒரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  ஃப்ராங்கொஃபீல் இலக்கியம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  அதில் ஒரு பெயர் எனக்கு மறந்து விட்டது. ஆனால் அவருடைய நாவல்களைப் படித்திருக்கிறேன்.  Rue de Retour  என்ற அவருடைய நாவல் பெயரைச் சொன்னேன்.  திரும்பி வரும் வழி (வீதி) என்ற தலைப்பை Way of No Return  என்று மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் வந்திருந்ததை நான் படித்திருக்கிறேன்.  ஃப்ரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அதன் தலைப்பைச் சொன்னேன்.  எழுதியவர் பெயரை கூகிளில் தேடலாம் என்று பார்த்தால் என் ஃபோனில் நான் கூகிளை தரவிறக்கம் செய்திருக்கவில்லை.  எழுத்தாளரின் ஃபோனில் கூகிள் இருந்தது.  அதிலும் அவரால் பார்க்க முடியவில்லை.  பிறகு அராத்துவைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  அப்தல் லத்தீஃப் லாபி.  Abdel Latif Laabi.  மொராக்கோவைச் சேர்ந்தவர்.  மாத்யமம் இதழில் இவரைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்.  பிறகுதான் அந்த ஃப்ரெஞ்ச் எழுத்தாளருக்கு லாபியின் பெயர் ஞாபகம் வந்தது.  பாரிஸில் வசித்து, ஃப்ரெஞ்சில் எழுதும் என் நண்பர் லாபியின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தார்.  நான் லாபியைப் படித்து எழுதி பத்தாண்டுகள் ஆகி விட்டன.

தொடரும்…

Comments are closed.