ஹா ஹா ஹா ஹா… (2)

ஒரு எழுத்தாளனைச் சந்திக்க ஐந்து பேர் போகிறார்கள்.  அராத்து, கோபால், ராஜேஷ், ஸ்ரீதர்.  நீங்கள் உங்கள் உதவியாளரை என் அனுமதி இல்லாமல் அழைத்து வருகிறீர்கள்.  போகட்டும்.  இந்தச் சந்திப்பில் யார் பேச வேண்டும்?  என் வாசகர் சந்திப்புகளில் நான் மட்டுமே உரை ஆற்றுவது இல்லை.  ஒவ்வொரு சந்திப்பையும் அந்தந்த விவாதப் பொருளே நிர்ணயம் செய்கிறது.  குற்றாலம் சந்திப்பில் என்னுடைய இரண்டு erudite நண்பர்கள் ரஜினிகாந்துக்கும் அஜீத்துக்கும் ரசிகர்களாக இருப்பதில் தப்பே இல்லை என்று ஒரு மணி நேரம் பேசினார்கள்.  அதாவது, சிறு வயதில் ஒருவர் அப்படி நடிகர்களின் ரசிகனாக இருந்திருக்கலாம்.   வளர்ந்த பிறகு, சர்வதேச இலக்கியத்தையும் சர்வதேச சினிமாவையும் பார்த்த பிறகும் ரஜினி ரசிகன், அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொள்வது நம்மையே நாம் அவமானப்படுத்திக் கொள்வதைப் போன்ற விஷயம்.  அந்த நண்பர்கள் ஒரு மணி நேரம் பேசினார்கள்.  நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்.  பிறகு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் அவர்களுக்கு நான் பதில் சொல்ல ஆரம்பித்தேன்.  இரண்டு மணி நேரம் பேசியிருப்பேன்.  பேசிய நண்பர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை.  தூங்கி விட்டார்கள்.  சுற்றிலும் பார்த்தேன்.  எல்லோரும் தூங்கி விட்டார்கள்.  அருணாசலமும் இன்னும் ஓரிருவரும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  இப்படித்தான் போகுமே தவிர ஒரு நபர் பேச்சு, born rich பேச்சுக்கெல்லாம் எங்கள் வட்டத்தில் இடமே இல்லை.

அராத்து பேச முடியவில்லை.  ராஜேஷ் வாயையே திறக்க முடியவில்லை.  என்னைப் பார்ப்பதற்காகவே  ஈரோட்டிலிருந்து பெங்களூர் வந்திருந்த ஸ்ரீதர் பேச முடியவில்லை.  நடந்து கொண்டிருக்கும் அராஜகத்தைப் பார்த்து கோபால் சமையல்கட்டுக்கே ஓடி விட்டார்.  இரண்டு மணி நேரம் அவர் சமையல்கட்டில் தன்னை ஒளித்துக் கொண்டதாக மறுநாள் சொன்னார்.

இப்படி ஒரு சந்திப்பில் யாரையுமே எதுவுமே பேச விடாமல் நீங்கள் மட்டுமே நான்கு மணி நேரம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் எழுத்தாளராக இருந்து என்ன பயன்?  நீங்கள் புத்தகங்களிலிருந்து எதைக் கற்றீர்கள்?  மட்டுமல்ல; அந்த அன்பர் செய்த எந்தக் காரியமுமே எங்கள் யாருக்கும் உகந்ததாக இல்லை.  மாலை ஒயின் வாங்கி வரலாம் என்று நாங்கள் கிளம்பிய நேரத்தில் சுந்தரம் உறங்கிக் கொண்டிருந்தார்.  ஆனால் உறங்கச் செல்லும் முன் தன் உதவியை அழைத்து எங்களைக் காண்பித்து, பணமும் கொடுத்து ஏதோ சொன்னார்.  சரி, ஒயினுக்குக் காசு தருகிறார் போல என்று நினைத்துக் கொண்டேன்.  போனோம்.  6000 ரூ. ஆயிற்று.  அதாவது, எங்களில் மூன்று பேருக்கு 3000 ரூ.  (ஸ்ரீதர் மது அருந்த மாட்டார்.) சுந்தரத்துக்கும் உதவிக்கும் 3000 ரூ.  கேஷியரிடம் நானும் ராஜேஷும் அராத்துவும் கையைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தோம்.  எங்கள் மூவருக்கும் மட்டும் 3000 ரூ என்றால் நாங்கள் கொடுத்து விடுவோம்.  அந்த இரண்டு பேருக்கு?  உதவியும் கை கட்டிக் கொண்டு பதுமையைப் போல் நின்றார்.  அராத்து உடனே களத்தில் இறங்கி, உங்களிடம் எவ்வளவுங்க இருக்கு என்றார்.  உதவி 2000 ரூபாயைக் கொடுத்தார்.  நான் 2000 கொடுத்தேன்.  அராத்து 2000 கொடுத்தார்.  அதாவது, born rich சுந்தரத்தின் உதவியாளர் குடிக்க ஒரு பிச்சைக்காரனாகிய நான் பணம் கொடுக்க வேண்டும்.

இந்த உதவியாளர் கொடுத்த டார்ச்சர் கொஞ்ச நஞ்சம் அல்ல.  எங்களில் ஒருவர் சிகரட் புகைப்பவர்.  ஆனால் துபாயிலிருந்து வரவழைத்த 555 சிகரெட் தான் புகைப்பார்.  அதுதான் மிகவும் மென்மையாக இருக்கும்.  அந்த சிகரெட்டை அவருடைய அனுமதி எதுவும் இல்லாமல் உதவியாளர் பாட்டுக்குத் தன் இஷ்டத்துக்கு எடுத்துக் குடித்துக் கொண்டே இருந்தார்.  எப்படி இருக்கிறது கதை?  உடனே இதைப் பார்த்துக் கொண்டே இருந்த நண்பர் தன் சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒளித்து வைத்தார்.  இப்படி இன்னொருவர் சிகரெட்டை எடுத்துக் குடிப்பவர்களுக்கு எங்கள் வட்டத்தில் இடமே இல்லை.  ஆனால் இப்படிப் பொதுவாக இருக்கும் ஒருவர் தானே பத்து பாக்கெட் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.  அல்லது, வேறு பண ரீதியாக உதவி செய்ய வேண்டும்.  அப்படிச் செய்தால் எடுத்துக் குடிக்கலாம்.  அடிப்படை விஷயம் என்னவென்றால், அடுத்தவனைச் சுரண்டாமல் கொண்டாடு.  ஏன், நீ புகைப்பவன் என்றால் பத்து பாக்கெட் 555 வாங்கி வர வேண்டியதுதானே?  சரி, 555 இந்தியாவில் கிடைக்காது.  அப்படியானால் வேறு செலவை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே?  அன்றைய தினம் அராத்து எங்களுக்காக நாங்கள் வருவதற்கு முன்பே பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்திருந்தார்.  எங்கள் எல்லோருக்கும் போர்வை, தலையணை, பாய், கீழே போட்டுக் கொள்ள பஞ்சு மெத்தை என்று.  ஒரு இடத்தில் ஒரு பாக்கெட் இருந்தது.  பிரித்துப் பார்த்தால் 20 சோப்புக் கட்டிகள்.  குளிப்பதற்காக.  அன்பு என்ற வார்த்தை அராத்துவுக்குப் பிடிக்காது.  ஆனால் மற்றவர்களின் சௌகரியத்தை அவர் அளவுக்குப் பார்த்துக் கொள்பவர்கள் அரிது.  எங்களுக்காக அன்று பத்து வகைப் பழங்களும் ஸலாத் செய்வதற்காக அரை டஜன் காய்கறிகளும் வேறு வாங்கி வைத்திருந்தார் அராத்து.  அதையெல்லாம் நானும் அராத்துவும் தான் அரிந்து வைத்தோம்.  தொம்மை உதவி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தது.  அப்போது அங்கே தூங்கி எழுந்து வந்த சுந்தரம் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? ”கறுப்பு ஆலிவ் வாங்கி வைக்கலியா?”  இந்தக் கேள்விக்குத் தன் மனதுக்குள் சொல்லிக் கொண்ட பதிலை அராத்து மறுநாள் என்னிடம் சொன்னார்.

அதோடு விடவில்லை சுந்தரம்.  அடுத்த கேள்வியைப் போட்டார்.  ”அராத்து ஒன்னு பண்ணுங்க…  அன்னாசி, சீஸ், செர்ரி மூன்றையும் வாங்கி வந்தீங்கன்னா ஒரு குச்சில குத்திக் குத்தி சாப்பிடலாம்.  அது உடம்புக்கு நல்லது.  அதுவும் சீஸ் ரொம்ப ரொம்ப நல்லது…”

அப்புறம் அவருடைய லெக்சர் சீஸின் நன்மைகள் பற்றி அரை மணி நேரம் நீண்டது.  முடித்த பிறகு மீண்டும் அராத்துவை ஞாபகப்படுத்தினார், அட்லீஸ்ட் அன்னாசி மற்றும் சீஸுக்கு.  அராத்து ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்.  நான் முன்னமே தேடிப் பார்த்துட்டேன்…  இங்கே எங்கியுமே அன்னாசி கிடைக்கலிங்க.

கையை வீசிக் கொண்டு தன் உதவியாளரையும் அழைத்துக் கொண்டு வந்த ஒரு ஆள் இரண்டு மூன்று தினங்களாக இந்தச் சந்திப்புக்காக உழைத்த அராத்துவைப் பார்த்து இத்தனை பந்தா வேண்டுகோள்களை வைக்கிறார்.   இவர்களெல்லாம் தங்களை நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மறுநாள் ஒரு நண்பர் என்னைச் சந்திக்க வருவதாகக் கேட்டார்.  வாருங்கள் என்றேன்.  ”வருபவர் அதிகம் பேசக் கூடியவர்; பரவாயில்லையா?” என்று எச்சரித்தார் ராஜேஷ்.  ”சுந்தரம் போன்ற ஆட்களால் நான் நிறையவே கற்றுக் கொண்டு விட்டேன்.  இனிமேல் எப்பேர்ப்பட்ட ஆளையும் சமாளிப்பேன்.  வரட்டும்” என்றேன்.

Toit என்ற இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.    பிரஸாத் என்ற அந்த நண்பரும் மாலை வந்து சேர்ந்தார்.  என் எழுத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டவராகத் தெரிந்தார்.  ஆனால் பேசிக் கொண்டே இருந்தார்.   நான் அப்போது சொன்னேன்.  ”நான் 50 ஆண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இவ்வளவு படிப்பையும் ஒருவர் படித்து முடிக்க மூன்று ஆயுள் கூடப் போதாது.  அப்படிப்பட்ட என்னிடமிருந்து கற்றுக் கொள்ளாமல் நீங்கள் பேசுவதை என்னைக் கேட்கச் செய்கிறீர்களே அது எந்தவிதத்தில் நியாயம்? பேசாமல் கொஞ்சம் அமைதியை ரசியுங்கள்.  அமைதி ஒரு இசை.  அந்த இசையில் மூழ்குங்கள்…”

பதிலுக்கு பிரஸாத், “You are right, charu” என்றார்.  “But you are wrong” என்றேன்.  அவருக்குப் புரியவில்லை.  உதாரணமாக, ”இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பாதே” என்று சொன்னால், உடனேயே ஓகே என்று வரும் பாருங்கள்.  ஆஹா…  அது போன்ற தவறையே நீங்கள் செய்கிறீர்கள் என்றேன்.  உங்கள் பேச்சுப் பழக்கம்தான் இங்கேயும் பிரச்சினையாக இருக்கிறது.  நீங்கள் சொல்வது சரி என்று கூட நீங்கள் சொல்லியிருக்கக் கூடாது என்றேன்.  பிரஸாத் உடனேயே புரிந்து கொண்டார்.   அதற்கு மேல் அவர் பேச்சு லெக்சராக இல்லாமல் எங்களோடு விவாதத்தில் கலந்து கொள்ளும் விதத்தில் இருந்தது.  மேலும், நாங்கள் கிளம்பும் வேளையில் பில் 6000 ரூ ஆகியிருந்தது.  அதையும் பிரஸாதே கொடுத்தார்.  அந்த சமிக்ஞை எனக்குப் பிடித்திருந்தது.

மலேஷியாவிலிருந்து ஒரு அன்பர்… பெண் எழுத்தாளர்கள் பற்றி ஜெயமோகன் எழுதிய போது பிரச்சினை ஆன சமயத்தில் ஜெயமோகனை ஆதரித்து எழுதிய ஒரு கட்டுரையில்   அனாவசியமாக என் பெயரை இழுத்து, உலக இலக்கியத்தைத் தன் சுண்டு விரலில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாரு நிவேதிதா சு. வெங்கடேசனைக் கூட படித்ததில்லை; என்னிடம் நேர்ப்பேச்சில் சொன்னார் என்று எழுதியிருக்கிறார்.   இப்படித்தான் போகிற போக்கில் என்னைத் தூற்றி விட்டுப் போகிறார்கள்.  நான் எப்போது உலக இலக்கியத்தை என் கையில் வைத்திருப்பதாகச் சொன்னேன்?  என்ன முட்டாள்தனம் இது?  இவ்வளவு முட்டாள்தனமாக ஒருவன் நினைக்க முடியுமா?  உலக இலக்கியம் என்பது ஒரு சமுத்திரம்.  சமுத்திரத்தை எந்த மடையனாவது தன் கையில் வைத்திருக்கிறேன் என்று சொல்வானா?  இந்த ஆளை நேரில் சந்தித்தால் செருப்பை எடுத்துக் காண்பிக்கலாம் என்று இருக்கிறேன்.

தொடரும்…

Comments are closed.