”ஹா ஹா ஹா ஹா … பின்நவீனத்துவப் பேமானி… ஜெயமோகன் உங்களுக்கு வைத்திருக்கும் பெயர்” என்ற பெயரில் எனக்கு ஒரு மொட்டைக் கடுதாசி வந்தது. அது பற்றிய என் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்…
http://www.jeyamohan.in/?p=
முன்பெல்லாம் மொட்டைக் கடுதாசி எழுதி பிடிக்காதவர்களைத் ஆபாசமாகத் திட்டுவது போல் இப்போதெல்லாம் கண்ட பெயர்களிலும் மின்னஞ்சலில் ஆபாசக் கடிதம், வசைக் கடிதம் எழுதுகிறார்கள். தினந்தோறும் என்னைத் திட்டி, என் மனைவியைத் திட்டி ஆபாசக் கடிதம் வருகிறது. நான் அவற்றையெல்லாம் படிக்காமல் குப்பையில் போட்டு விடுகிறேன். முதல் வாக்கியத்திலேயே தெரிந்து விடுவதால். இந்தக் கும்பலில் ஜெயமோகனின் வாசகர்கள் என்று சொல்லிக் கொண்டு பலரும் ஆபாசக் கடிதம் எழுதுகிறார்கள். ஜெயமோகனும் என்னைப் போலவே எழுத்தே உயிர் மூச்சென வாழ்பவர். அவர் எழுதும் ஏராளமான எழுத்தைப் படித்தாலே அது தெரியும். எழுத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டால்தான் தமிழ்நாட்டில் ஒருவன் எழுத்தாளனாக வாழ முடியும். ஜெயமோகன், எஸ்.ரா. எல்லோரும் அப்படியே. அப்படி வாழும் ஒருவர் எழுத்தையே உயிர் மூச்சென வாழும் என்னைப் போய் பேமானி என்றெல்லாம் திட்டுவாரா? ஜெயமோகன் என் நண்பர் என்று நான் கருதுகிறேன். அவரும் அப்படியே நினைப்பார் என்றும் நினைக்கிறேன். அப்படியிருக்கும் போது அவர் யாரையோ நினைத்து எழுதியதை என்னைப் பற்றி எழுதியதாக நினைத்து குதூகலித்திருக்கிறது ஒரு குரங்கு. இப்படிப்பட்ட மூடமந்திகள் ஜெயமோகனின் எழுத்திலிருந்து கற்றுக் கொள்வது இதைத்தானா? 40 வருடம் எழுத்து அனுபவம் கொண்ட என்னை ஏதோ ஒரு பெயர் தெரியாத வாசகக் குரங்கு ஜெயமோகனிடமிருந்து வார்த்தையைக் கடன் வாங்கி பேமானி என்று திட்டுகிறது. வழக்கமான வசைக் கடிதம் என்றால் குப்பையில் போட்டிருப்பேன். ஆனால் அந்த மடமந்தி ஜெ.வின் கட்டுரையையும் கூடவே அனுப்பியிருப்பதால் அப்படிப் போட முடியவில்லை. ஜெ.யின் கட்டுரையைப் படித்தேன். அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் (பின்நவீனத்துவ பேமானி என்ற திட்டைத் தவிர) நான் வழிமொழிகிறேன். அதெல்லாம் என் கருத்தும் தான். நானும் இதே ரீதியில் தான் பல ஆண்டுகளாக எழுதி வருகிறேன். மார்ச்சில் சைரன் பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையை இங்கே திரும்பத் தருகிறேன். படித்துப் பாருங்கள். என்றைக்கும் நான் தமிழர்களின் குடியை ஆதரித்து எழுதியவன் அல்லன். நல்ல மதுவைத் தாருங்கள் என்பதே என் கோரிக்கை. இங்கே டாஸ்மாக்கில் தரப்படும் மது, மதுவே அல்ல; அது விஷம். குடிக்கும் மனிதர்களை அந்த மது கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். நான் வாரம் ஒருமுறை அருந்துவது இந்த விஷ மது அல்ல; ஃப்ரான்ஸிலிருந்து ஜீரகத்திலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை மது. பெயர் அனிஸ். அல்லது ரெமி மார்ட்டின் என்ற ஷாம்பெய்ன். இதையெல்லாம் குடி என்று சொன்னால் அது மடமை. நூறு ஆண்டுகள் வரை தினமும் குடித்து (ஸ்காட்ச் விஸ்கி) வாழ்ந்த குஷ்வந்த் சிங்கையும் இங்கே டாஸ்மாக் வாசலில் போதையில் விழுந்து கிடக்கும் மது அடிமையையும் ஒன்றாகப் பார்க்காதீர்கள்.
எனக்கு மொட்டைக் கடுதாசி எழுதியிருக்கும் மந்தியின் வசைக் கடிதத்தை இறைவனின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். இறைவன் அந்த மந்திக்கான ஆசீர்வாதத்தை வழங்குவார்.
இன்னொரு விஷயம். மது அடிமைகளை நான் என் அருகிலேயே சேர்ப்பதில்லை என்று சமீபத்தில் முடிவு செய்திருக்கிறேன். காரணம், கோவிந்தன். அவருக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர் குவாட்டர் கோவிந்தன். மிகவும் நல்லவர். ஆனால் மது அடிமை என்பதால் எல்லோருடைய கிண்டலுக்கும் ஆளாவார். காலையில் ஆறு மணிக்குப் பார்த்தாலும் நிறை போதையில் தள்ளாடுவார். எப்போ போட்டிங்க என்று கேட்டால் அசட்டுச் சிரிப்புடன் நாலு மணிக்கு பாஸ் என்பார். 24 மணி நேரமும் குடிதான். கால்சட்டைப் பாக்கெட்டிலேயே எப்போதும் குவாட்டர் பாட்டில் ரம் வைத்திருப்பார். அதை எடுத்து அப்படியே குடித்துக் கொண்டிருப்பார். பெயர் தான் குவாட்டர் கோவிந்தனே தவிர ஒரு நாளில் இவ்வாறாக ஒன்றரை ஃபுல் ரம்மைக் காலி செய்து விடுவார். கிளாஸ் எல்லாம் தேவைப்படாது. அப்படியே ஒரு இழுப்பு இழுத்து விட்டு, வாயில் தண்ணீரை ஊற்றிக் கொள்வார். நாள் முழுதும் குடி என்பதால் படிப்பதற்கெல்லாம் நேரமே கிடையாது.
என் ஈரோடு நண்பர்களான ரமேஷ், ஸ்ரீதர் இருவருக்கும் கோவிந்தன் நெருங்கிய நண்பர். அந்த வகையில்தான் நான் ஈரோடு செல்லும் போது கோவிந்தனை அடிக்கடி சந்தித்திருக்கிறேன். இனிமேல் கோவிந்தனை எப்போதுமே சந்திப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். காரணம் இதுதான்:
இப்படிக் குடித்தால் சீக்கிரம் மரணம்தான் என்றெல்லாம் நண்பர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். டி-அடிக்ஷன் மையத்திலும் சேர்த்து விட்டிருக்கிறார்கள். மூன்று மாதம் குடி இல்லை. சமீபத்தில் மீண்டும் அவர் பாக்கெட்டில் குவாட்டர். ஜெயமோகனின் ஈரோடு வாசகர்கள் அந்தியூரில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டியிருக்கிறார்கள். நல்ல வனப்பகுதி. இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்ற இடம். அந்த நண்பர்கள் எனக்கும் வேண்டியவர்கள்தான். ஈரோடு செல்லும் போது அவர்களை சந்திப்பது வழக்கம். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் தாமோதர் சந்த்ரு, மோகனரங்கன். அந்தக் குறிப்பிட்ட கெஸ்ட் ஹவுஸைப் பார்க்க என் நண்பர்கள் ரமேஷும் ஸ்ரீதரும் சென்ற போது நம் கோவிந்தனும் கூடவே சென்றிருக்கிறார். பாக்கெட்டில் பாட்டில். கெஸ்ட் ஹவுஸ் மாடியில் நின்று கொண்டிருந்த போது படிக்கட்டில் தவறி விழுந்து நெற்றி பிளந்து விட்டது. நாலு இஞ்சுக்குக் கோடு. ரத்தம். ரமேஷுக்கும் ஸ்ரீதருக்கும் மற்ற நண்பர்களுக்கும் எப்படி இருந்திருக்கும்? மேற்கொண்டு நடந்ததை விளக்க வேண்டியதில்லை. நீங்களே யூகித்துக் கொள்ளலாம். நல்ல நேரம். பிழைத்துக் கொண்டார்.
சின்ன பிள்ளை இல்லை. நாற்பது வயதில் இந்த ரகளை. கோவிந்தனின் வீட்டில் உள்ளவர்களுக்கு ரமேஷும் ஸ்ரீதரும் என்ன பதில் சொல்லியிருப்பார்கள்? எப்படி சமாளித்திருப்பார்கள்? ஜெயமோகன் நடத்தும் வாசகர் சந்திப்புகளில் மதுவுக்கு அனுமதி இல்லை என்பதை மிகக் கறாராக ராணுவ ஒழுங்குடன் கடைப்பிடிப்பதாக சில நண்பர்கள் என்னிடம் புகாராகச் சொல்வதுண்டு. அதுதான் சரி என்பதே எப்போதும் என் பதில். மதுவை அருந்தத் தெரியாதவன் மது அருந்தக் கூடாது. என் வாசகர் வட்ட சந்திப்புகளில் மதுவுக்குத் தடை இல்லை. காரணம், வட்டத்தில் பாதி இளைஞர்கள் மதுப் பழக்கம் இல்லாதவர்கள். அதனால் தடை போட முகாந்திரமே இல்லை. மற்றபடி மதுவுடன் வருபவர்கள் – கொஞ்சம் இசகு பிசகாக நடந்து கொண்டாலும் – அந்தக் கணமே வெளியேற்றப்படுவார்கள். எனவே என்னுடைய வாசகர் சந்திப்புகளிலும் மிகக் கடுமையான நடைமுறை விதிகள் உண்டு.
சமீபத்தில் அப்படி ஒரு சந்திப்பில் சுந்தரம் என்ற நண்பர் நான்கு மணி நேரம் எங்கள் யாரையும் பேச விடாமல் அவரே பேசிக் கொண்டிருந்தார். அவர் ஜெயமோகனின் தீவிர விசிறி என்று சொல்லிக் கொண்டார். ஆனால் நேரில் பார்த்துப் பழகியதில்லையாம். நான், ராஜேஷ், அராத்து, கோபால், ஸ்ரீதர், சுந்தரம் மற்றும் அவருடைய உதவியாளர் ஒருவர். நான் சுந்தரத்தை மட்டுமே அழைத்திருந்தேன். அவரோ உதவியையும் அழைத்து வந்திருந்தார். அதுவே மிகப் பெரிய, மன்னிக்க முடியாத விதி மீறல். ஏனென்றால், எனக்குப் பரிச்சயமில்லாத உங்கள் உதவியாளர்கள் யாரையும் சந்திக்கும் வழக்கம் எனக்கு இல்லை. அப்படிச் சந்தித்தால் பிரச்சினை வந்து விடுகிறது. உதாரணமாக, சுந்தரம் நான்கு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாரா? ராஜேஷ் அவரிடம், “கொஞ்சம் சுருக்கமாப் பேசுங்கள்” என்றார். அதாவது, சுந்தரம் நான்கு மணி நேரம் பேசிய போது நான், அராத்து, ராஜேஷ், ஸ்ரீதர், கோபால் ஐவரும் எங்கள் வாயையும் இன்னொன்றையும் மூடிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. ஏனென்றால், ராஜேஷ் எனக்கும் கொஞ்சம் பேச வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்ட போது, “உங்களுக்கு டெகோரமே தெரியல. நான் இங்கே கெஸ்டா வந்துருக்கேன். எனக்கு இங்கே பேச அனுமதி இல்லேன்னா இப்பவே ஃப்ளைட் பிடிச்சு சென்னை போய்டுவேன்… நான் born rich… ஒரு நாளைல மூணு தடவை ஃப்ளைட்ல போய்ருக்கேன்” என்றார். (இந்தக் கதை பெங்களூரில் நடந்து கொண்டிருந்தது.)
உடனே ராஜேஷ் அவரிடம் டெகேரம்னா உங்களுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா என்று கேட்டதும், நான் ராஜேஷைப் பார்த்து அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்றேன். ராஜேஷும் மன்னிப்புக் கேட்டு விட்டுத் தூங்கப் போய் விட்டார். இரவு அப்போது பனிரண்டு மணி. அவரும் வேறு என்ன செய்வார்? சுந்தரம் எட்டு மணியிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஸ்ரீதருக்குப் பேச வாய்ப்பு இல்லை. ஸ்ரீதர் என்னைப் பார்ப்பதற்காகவே ஈரோட்டிலிருந்து பெங்களூர் வந்திருந்தார். ஆனால் அவரால் வாயையே திறக்க முடியவில்லை. கோபால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு சமைக்கப் போய் விட்டார்.
இதெல்லாம் அராஜகம் இல்லையா? இதனால்தான் நாங்கள் புதியவர்கள் யாரையும் சந்திப்பில் சேர்ப்பதில்லை. சரி, அன்பர் சுந்தரம் நான்கு மணி நேரம் என்ன பேசினார் தெரியுமா? டேய் அராத்து, (அன்றுதான் அவர் முதல் முதலாக அராத்துவைச் சந்திக்கிறார். அராத்துவை விட ஒன்றிரண்டு வயது இளையவராக இருக்கும்) நீ என்னடா எழுதுறே? வெறும் போர்னோ? அதெல்லாம்தான் இணையத்துல வந்து கொட்டுதேடா… அப்புறம் என்ன மயித்துக்குடா நீ எழுதுறே? நீ சாருவோட நிழல். அவ்வளவுதான் டா நீ… எங்கப் பக்கம் வாடா…
(சுந்தரம், ஒரு நிமிடம் என்று சொல்லி குறுக்கே புகுந்தேன். நான் பேசும் போது நாட்டியக் கலைஞர்களைப் போல் கைகளையும் விரல்களையும் காற்றில் அளைவேன். அது என் வழக்கம். அப்படி நான் ஒரு நிமிடம் என்று சொல்லி ஆள் காட்டி விரலைக் காண்பித்த போது, சுந்தரத்தின் உதவியாளர் என் ஆள் காட்டி விரலை அப்படியே அமுக்கி என் கைகளை மடித்து என் தொடையில் வைத்தார். இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். என் கையையும் விரலையும் பற்றிப் பிடித்து என் மடியில் வைத்து விட்டு, அண்ணனை அப்படியெல்லாம் கை நீட்டிப் பேசக் கூடாது என்று எனக்கு புத்திமதி சொன்னார் சுந்தரத்தின் உதவியாளர். இதனால்தான் உதவியாளர், எடுபிடி, அண்ணன் தம்பி, மச்சினன் என்று யாரையும் அழைத்துக் கொண்டு வந்து என்னைப் பார்த்துக் கழுத்தை அறுக்காதீர்கள் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன். சுந்தரம் இந்தக் காட்சியைப் பார்க்கவில்லை. அவர் பாட்டுக்கு அந்தத் தெருவே கேட்கும் படி டேய் நாயே நீ ஒரு போர்னோ ரைட்டர்டா, எங்கப் பக்கம் வாடா, உன்னை ஒரு ஆளா மாத்திக் காமிக்கிறேன் என்று கத்திக் கொண்டிருந்தார். நான் மறுபடியும் குறுக்கே புகுந்து, உங்கள் பக்கம் என்றால் எந்தப் பக்கம் சுந்தரம்? என்று கேட்டேன். அதுதான் ஜெயமோகன் பக்கம் சாரு” என்றார் சுந்தரம்.)
சொல்லி விட்டு லெக்சரைத் தொடர்ந்தார் சுந்தரம். என்னடா அராத்து எழுதுறே… வெறும் போர்னோ… இத்யாதி… இத்யாதி…
நள்ளிரவு ஒரு மணி அளவில், ”எல்லோரும் ஒரு நிமிஷம் அமைதியாக இருங்கள்… நான் கொஞ்சம் பேச வேண்டும்…” என்றேன் மிக அமைதியாக.
சொன்னதும் சுந்தரம் பேச்சை நிறுத்தி விட்டார். என் தொனி அப்படி இருந்தது போலும். மிகவும் சாந்தமாகவே சொன்னேன். “சுந்தரம்… இதுதான், இந்தக் கணம்தான் நான் உங்களைப் பார்ப்பது கடைசியாக இருக்க வேண்டும். இனிமேல் என் வாழ்நாள் பூராவும் நான் உங்களைப் பார்க்கக் கூடாது.” அவரும் அவருடைய உதவியாளரும் அந்தக் கணமே அந்த நள்ளிரவில் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்கள். (கிளம்பும் போது தவறாமால் அவர்கள் வாங்கிக் கொண்டு வந்த கோக் பாட்டில்களையும் எடுத்துக் கொண்டார் உதவியாளர்.)
நாம் நம்மை நல்லவர்கள் என்றே நினைத்துக் கொள்கிறோம். மற்றவர்களும் அப்படியே நம்புகிறார்கள். ஆனால் ஒரு சந்திப்பில் உள்ள அத்தனை பேரையும் ஒரு நிமிடம் கூடப் பேச விடாமல் நாமே நான்கு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தால் அது அராஜகம் இல்லையா?
(இன்னும் சொல்ல இருக்கிறது…)
பின்வரும் கட்டுரை மார்ச் மாதத்தில் நியூஸ் சைரனில் வெளிவந்தது:
சவூதி அரேபியா போன்ற ஒருசில நாடுகளைத் தவிர உலகின் எல்லா நாடுகளிலும் மது விற்கப்படுகிறது. மது அருந்தும் பழக்கம் அதிகம் உள்ள ஐரோப்பிய நாடுகள், சீனா, தாய்லாந்து போன்ற கிழக்காசிய நாடுகள் ஆகியவற்றில் மதுவினால் யாரும் இறந்ததாக செய்தி இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் குடியினால் குடும்பங்கள் சிதைகின்றன. மனிதர்கள் நோய்வாய்ப்பட்டு இளம் வயதிலேயே சாகிறார்கள். இதன் காரணமாக மதுவை ஒழிக்க வேண்டும் என்று சில அமைப்புகளும் தனிநபர்களும் போராடுகிறார்கள். இப்படிப் போராடுபவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கத் தவறுகிறார்கள். மது அருந்தும் மற்ற நாடுகளில் தமிழ்நாட்டில் காணப்படும் பிரச்சினைகள் ஏன் இல்லை? நாடுகளை விடுங்கள்… நம் அண்டை மாநிலமான கர்னாடகத்தில் குடி ஏன் அவர்கள் குடியைக் கெடுப்பதில்லை? குடித்து விட்டு யாரும் அங்கே தெரு ஓரங்களில் படுத்துக் கிடப்பதில்லையே, ஏன்? இது பற்றி நான் பல கள ஆய்வுகளைச் செய்தேன். பலரிடமும் பேசினேன். அதன் சுருக்கம்தான் இந்தக் கட்டுரை.
டாஸ்மாக் என்று பொதுவாக அறியப்படும் வியாபார நிறுவனமான தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பொரேஷன் தமிழ்நாட்டின் மொத்த மதுபான விற்பனையை தன் அதிகாரத்தில் வைத்திருக்கிறது. அதாவது, அரசாங்கத்துக்கு மட்டுமே மக்களுக்கு மது விற்பனை செய்யும் உரிமை உண்டு. எனக்கு நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக பிடித்த அரசியல்வாதி ஜெயலலிதா. ஆனால் மோடிக்கு இல்லாத ஒரு பிரச்சினை ஜெயலலிதாவுக்கு உண்டு. அது கருணாநிதி. மோடிக்கு கருணாநிதியைப் போன்ற எதிரி கிடையாது. எனவே, வாக்கு வங்கியை மனதில் கொண்டு கருணாநிதி என்னவெல்லாம் செய்தாரோ அதையே ஜெயலலிதாவும் செய்ய வேண்டிய கட்டாயம் இங்கே உருவாகிறது. முக்கியமாக, இலவசங்கள் மற்றும் டாஸ்மாக். இந்த இரண்டையும் ஜெயலலிதா அரசினால் நிறுத்த முடியவில்லை. நிறுத்தினால் கருணாநிதிக்கு வசதியாகப் போய் விடும் என்று நினைக்கிறார் ஜெ. டாஸ்மாக்கிலிருந்து சென்ற ஆண்டு அரசுக்கு வருமானம் 21,680 கோடி. இதுதான் இலவசங்களுக்கான நிதி ஆதாரம். ஜெ. ஆட்சிக்கு வந்தவுடனேயே இலவசங்களை நிறுத்தி விட்டு, மது விற்பனையைத் தனியாரிடம் கொடுத்திருக்க வேண்டும். அப்போதும் அரசுக்கு வருமானம் குறைந்திருக்காது. எப்படியென்றால், பாரோடு சேர்ந்த உணவு விடுதிகள் மூலம் வரி வசூலித்திருக்கலாம். கர்னாடகாவில் இப்படித்தான் செய்கிறார்கள்.
மது விற்பனையை அரசாங்கமே தன் தனி உரிமையாக வைத்திருப்பதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒரு மக்கள் நல அரசு என்றால், கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டைத்தான் அரசாங்கம் வைத்திருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் அது இரண்டும் தான் தனியாரிடம் உள்ளது. எல்கேஜியில் சேர்ப்பதற்கே இங்கே லட்சக் கணக்கில் வாங்கும் பள்ளிகள் ஏராளம். மருத்துவம் பற்றிப் பேசவே வேண்டியதில்லை. அவ்வளவு வெளிப்படையான கொள்ளை. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையான கல்வி, மருத்துவம் இரண்டையும் தனியாரிடம் தாரை வார்த்து விட்டு, ”நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” என்று அரசாங்கமே விளம்பரப் படுத்தும் மது விற்பனையை மட்டும் அரசு வைத்திருப்பது தார்மீக ரீதியாகவே தவறு அல்லவா?
இரண்டாவது, உலகம் முழுவதுமே ”ஃப்ரீ மார்க்கெட்” என்ற கருத்து நடைமுறைக்கு வந்து விட்டது. அதாவது, ஒரு குடிமகன் எதை விரும்புகிறானோ அதை வாங்கும் உரிமை அவனுக்கு இருக்க வேண்டும். தமிழர்களாகிய நமக்கு மற்ற எல்லா விஷயத்திலும் இந்த உரிமை இருக்கிறது. காரிலிருந்து கணினி வரை எதை வாங்க வேண்டும் என்றாலும் உலகின் ஆகச் சிறந்த பிராண்டை ஒருவர் வாங்க முடியும். ஆனால் எனக்குப் பிடித்த மதுபானத்தை மட்டும் திருட்டுத்தனமாகத்தான் வாங்கிக் குடிக்க முடியும் என்றால் என்ன நியாயம்? மது அருந்தும் ஒருவர் என்ன குடிக்க வேண்டும் என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்க முடியும் என்றால் அது சர்வாதிகாரம் இல்லையா? ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி நடக்கலாமா?
தமிழ்நாட்டில் மட்டும் மது ஆரோக்கியத்துக்கும் குடும்பத்துக்கும் கேடாக இருக்கிறது என்றால் அது டாஸ்மாக் என்ற சர்வாதிகார விநியோக முறையினால்தான் என்பது என் கள ஆய்வின் முடிவு. ஏனென்றால், ஓல்ட் மாங்க் என்ற மதுவை நான் டாஸ்மாக்கில் குடித்தால் மறுநாள் என் உடம்பின் பல பாகங்களில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. ஆனால் இதே மதுவை பாண்டிச்சேரியிலோ பெங்களூரிலோ குடித்தால் அந்த வலி ஏற்படுவதில்லை. இதை நான் வேறு பலர் மூலமும் சோதித்துப் பார்த்தேன். இதே முடிவுதான். இந்தக் காரணத்தினால்தான் நம் ஊரில் தெருமுனையில் குடிகாரர்கள் விழுந்து கிடக்கிறார்கள். இந்த வித்தியாசம் உள்நாட்டு மதுவில் மட்டும் அல்ல. செல்வந்தர்கள் அருந்தும் ஸ்காட்ச் விஸ்கியிலும் இதுதான் நிலை. ஐரோப்பாவில் கிடைக்கும் ஸ்காட்சுக்கும் தாய்லாந்தில் கிடைக்கும் ஸ்காட்சுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது.
மனிதர்கள் விலங்குகளைப் போல் நடத்தப்படும் இடம் ஒன்று உண்டு என்றால் அது டாஸ்மாக் தான். சென்ற நூற்றாண்டில் வெளிநாடுகளில் பெருவியாதிக்காரர்களை ஊருக்கு வெளியே கொண்டு போய் தள்ளி விடுவார்கள். அவர்களின் வாழ்விடங்கள் இப்போதைய டாஸ்மாக் போலவேதான் இருக்கும். என் கள ஆய்வுக்காக டாஸ்மாக் சென்று அமர்ந்திருந்தேன். பின்னால் இருந்தவர் அங்கேயே ஒரு ஓரத்தில் நின்று சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். பார்த்தால், இத்தனை பேர் வரக் கூடிய இடத்தில் கழிப்பறை வசதி கூட இல்லை. தண்ணீர் கூட காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். உட்கார்ந்து சாப்பிட நாற்காலி இல்லை. நின்றே தான் குடிக்க வேண்டும். 20 ரூபாய் கொடுத்து காப்பி குடிக்கச் சென்றால் ஓட்டலில் ராஜ மரியாதை கொடுக்கிறார்கள். பத்து தண்ணீர் டம்ளர் குடித்தாலும் காசு கேட்பதில்லை. படு சுத்தமான கழிப்பறை. மின்விசிறி. ஆனால் 200 ரூபாய் கொடுத்து குடிப்பவர்களை அரசாங்கம் மிருகங்களைப் போல் நடத்துகிறது. அந்த டாஸ்மாக் சூழலே ஒருவருக்கு ஏதோ ஒரு கொலைபாதகச் செயலை செய்கிறோம் என்ற குற்ற உணர்வை உருவாக்கி விடுகிறது. அதனாலேயே அந்த மட்டமான சரக்கை நிதானம் இல்லாமல் அவசர அவசரமாகக் குடித்து விட்டு டாஸ்மாக் வாசலிலேயே விழுந்து விடுகிறார் அந்த மனிதர்.
ஆனால் பெங்களூரில் பார்-கம்-ரெஸ்டாரண்டுகளில் பார்த்தேன். குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். குளிரூட்டப்பட்ட இடம். பணிவான பணியாளர்கள். குழந்தைகளும் அவர் மனைவியும் பழச்சாறு அருந்த கணவர் பீர் குடிக்கிறார். அதே உணவகத்தில் நாலைந்து இளைஞர்கள் அமர்ந்து ஒயின் அருந்திக் கொண்டிருந்தார்கள். (நம் ஊரில் ஒயின் ஷாப் என்று பெயர் தானே தவிர ஒயின் என்ற பேச்சுக்கே இடமில்லை.) எந்த சத்தமும் இரைச்சலும் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த இடம். இப்படி மது அருந்தும் இடத்தை நாகரீகமாக வைத்திருந்தால்தானே அங்கே வருபவர்களும் நாகரீகமாக இருப்பார்கள்?
இது தொடர்பாக இன்னொரு முக்கியமான பிரச்னை, மதுபானக் கடைகளை வைத்துக் கொண்டிருக்கும் அரசு ஏன் கள்ளுக்கு மட்டும் தடை போட்டிருக்கிறது? கள் என்பது பூமித் தாய் கொடுக்கும் பாலைப் போன்றது. பானையில் சுண்ணாம்பைத் தடவினால் பதனீர்; சுண்ணாம்பு தடவவில்லை என்றால் கள். பூமியிலிருந்து இயற்கையாகக் கிடைக்கும் கள்ளின் மீதான தடையை இந்த அரசு உடனடியாக நீக்கினால் பல்லாயிரம் குடும்பங்கள் நலம் அடையும். ஏனென்றால், மட்டமான மதுவை விட கள் கேடு அல்ல. குடிப்பவருக்கு செலவும் கம்மி. ஆனால் திமுகவோ, அதிமுகவோ எந்த அரசாக இருந்தாலும் டாஸ்மாக்குக்கான மது விநியோகத்தை சில தனியார் நிறுவனங்கள்தான் தம் கையில் வைத்திருக்கின்றன; அவர்கள்தான் தங்களின் சுயநலத்துக்காக கள் தடை செய்யப்பட காரணமாக இருக்கிறார்கள் என்று புலனாய்வுப் பத்திரிகைகளில் செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இது உண்மையானால் மக்கள் நலனுக்கு விரோதமான முடிவு ஒரு சிலரின் கைகளில் இருப்பது தடுக்கப்பட வேண்டும். இயற்கையான கள்ளுக்கு இருக்கும் தடை நீக்கப்பட வேண்டும். கேரளாவில் கள்ளுக் கடைகள் நட்சத்திர விடுதிகளைப் போல் நடத்தப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.
Comments are closed.