அன்புள்ள லிங்குசாமி… (2)

அன்புள்ள லிங்குசாமி,

கடிதத்தின் ஆரம்பத்தில் சொன்னது போல் நீங்கள் மரண மொக்கைப் படங்களை எடுப்பது பற்றி எனக்குக் கவலையே இல்லை.  அது உங்கள் பிரச்சினை; இது போன்ற மரண மொக்கைகளைப் பார்க்க வேண்டியுள்ள துரதிர்ஷ்டசாலிகளான தமிழர்களின் பிரச்சினை.  ஆனால் அஞ்சானைப் பார்த்ததிலிருந்து என் கண் துஞ்சவில்லை.  மன உளைச்சல் தாங்க முடியவில்லை.  ஏனென்றால், நம்முடைய மிகப் பெரிய தேசியப் பொக்கிஷமான, நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய கர்னாடக இசையை நீங்கள் கேவலப்படுத்தி இருக்கிறீர்கள்.  நாயகி – அதுதான் நம் கனவுக் கன்னி சமந்தா – சங்கீதக் கச்சேரி கேட்க இஷ்டப்படுகிறார்.  உடனே அவருடைய காதலன் மும்பை தாதா சூர்யா அவரை ஒரு கச்சேரிக்கு அழைத்துப் போகிறார்.  தாதாவின் நண்பனான பெரிய தாதாவும் உடன் வருகிறான்.  கச்சேரி முடிந்து விடுகிறது.  ஆனாலும் காதல் முறிந்து விடக் கூடாது என்றும், தன்னுடைய இழந்து போன காதலுக்காகவும் அந்த சங்கீத வித்வான் பாடுகிறார்.  பாட்டா அது?  வேண்டும் என்றே, கர்னாடக இசை மேதைகளை அவமானப்படுத்த வேண்டும் என்றே இப்படி ஒரு காட்சியை படத்தில் காமெடிக் காட்சியாக சேர்த்திருக்கிறீர்கள்.  காமெடி நடிகர் செந்திலை கர்னாடக சங்கீதக் கலைஞராகக் காட்டினால் எப்படி இருக்குமோ அதை விடக் காமெடியாக அந்தக் காமெடி நடிகர் நடித்திருக்கிறார்.  அவர் போடுகிற கழுதைக் கூச்சலில் தாதாக்களும் நாயகியும் அரங்கை விட்டு ஓடி வந்து விடுகிறார்கள்.  ஓடி வெளியே வந்ததும் ஒரு திருமண ஊர்வலம்.  படம் நடப்பது மும்பை என்பதால் சேட்டு வீட்டுக் கல்யாணம்.  எல்லோரும் ஊர்வலத்தில் ஏக், தோ, தீன், சார், பாஞ்ச், சே, ஆட், நௌ (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது) என்ற தத்துவப் பாடலைப் பாடுகிறார்கள்.  உடனே தாதாக்களும் நாயகியும் அந்த கோஷ்டியோடு சேர்ந்து, ”இதுதான் இசை” என்று சொல்லி குத்தாட்டம் போடுகிறார்கள்.

நான் பல காலமாக தமிழ்நாடு ஒரு philistine சமூகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  Philistine என்பதன் பொருள் கலாச்சார சுரணை உணர்வற்ற என்று பொருள்.  கலாச்சார சீரழிவு அல்ல; கலாச்சார சுரணை உணர்வு இல்லாத சமூகம்.  அதைத்தான் அந்தக் காட்சியில் நீங்கள் பிரதிபலித்திருக்கிறீர்கள்.  சங்கீத மும்மூர்த்தீகள் என்று அறியப்படும் தியாகைய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் உங்களுக்குக் காமெடி பீஸா?  அவர்களெல்லாம் தெய்வீக புருஷர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?

சியாமா சாஸ்திரிகள் தஞ்சாவூரில் வாழ்ந்தவர்.  காலம் 1762 – 1827.  அவர் உருவாக்கிய கிருதிகளை அவருடைய ஆத்மாவுக்குள்ளே வைத்தது யார் தெரியுமா?  தஞ்சாவூர் மேலவீதியில் இருக்கும் காமாட்சி என்ற தெய்வம்.  பங்காரு காமாட்சி என்று சொல்வார்கள்.  அந்தக் காமாட்சி கோவிலில் காமாட்சிக்குப் பணி புரிந்து கிடந்தவர் தான் சியாமா சாஸ்திரி.  அந்தக் காமட்சி தெய்வத்தின் குழந்தை.   தஞ்சாவூரை விட்டு அவர் அநேகமாக எங்கும் போனதில்லை.  மதுரைக்கும் நாகப்பட்டினத்துக்கும் திருவையாறுக்கும் போயிருக்கிறார்.  அவ்வளவுதான்.  ஆனால் கர்னாடக சங்கீதத்தின் முப்பெரும் மேதைகளில் அவரும் ஒருவர்.  அவருக்கு ஜோதிடம் நன்கு தெரியும்.  அதனால் தன் தர்மபத்தினி காலமான ஏழாம் நாள் தன்னுடைய இறுதி தினம் – ஃபெப்ருவரி 7, 1827 – என்பதை அறிந்து தனக்குத் தெரிந்த ஒரு ஓவியரை அழைத்துத் தன்னை வரையச் செய்திருக்கிறார்.  ஓவியரும் சாஸ்திரிகளின் முகத்தை மட்டும் வரைந்து விட்டு உருவத்தைப் பிறிதொரு சமயம் வரையலாம் என்று போய் விட்டார்.  ஆனால் அன்றைய தினமே சாஸ்திரிகள் காலமாகி விட்டதால் அதன் பிறகு ஓவியர் தன்னுடைய ஞாபகத்திலிருந்தே சாஸ்திரிகளின் ஓவியத்தை வரைந்திருக்கிறார்.  சாஸ்திரிகளின் கொள்ளுப் பேரன் 1950-இல் தனது 95-ஆவது வயதில் காலமானதால் சாஸ்திரிகளின் வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகள் நமக்குத் தெளிவாகக்  கிடைக்கின்றன.  தஞ்சாவூரில் காமாட்சி அம்மனை தினமும் பூஜித்து வந்தவர்.

சாஸ்திரிகள் உருவாக்கிய கீர்த்தனைகள் அனைத்தும் அவருடைய மூளையிலிருந்து வந்ததல்ல; காமாட்சி அம்மனே அவருக்கு அருளியது என்று சொன்னேன்.  என்ன இது மூட நம்பிக்கை என்று கேட்காதீர்கள்.  மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தின் பிதாமகர்களில் ஒருவரான பீத்தோவன் தனது இசைப் படைப்புகளை உருவாக்கிய போது அவருக்கு சுத்தமாகக் காது கேளாது.  முழுச் செவிட்டுத் தன்மையுடன் தான் அவருடைய சாகா வரம் கொண்ட இசைப் படைப்புகளை உருவாக்கினார்.  எப்படி அது சாத்தியம்?  இதற்கு ஏதும் விஞ்ஞான விளக்கம் இருக்கிறதா?  அவருடைய சிம்ஃபனியைக் கேட்டு அரங்கமே கரகோஷம் எழுப்பும்.  அவருக்கோ அந்தச் சத்தமே காதில் விழாது.

(தொடரும்…)

Comments are closed.