அன்புள்ள லிங்குசாமி…

அன்புள்ள லிங்குசாமி…

நீங்கள் இயக்கிய அஞ்சானைப் பார்த்த லட்சக் கணக்கான துரதிர்ஷ்டசாலிகளில் அடியேனும் ஒருவன்.  என் பெயர் சாரு நிவேதிதா. ஒருமுறை  ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்களும் நானும் அருகருகே அமர்ந்திருக்கிறோம்.  மற்றபடி உங்களிடம் என்னைப் பற்றிச் சொல்ல ஒரே ஒரு விஷயம் உண்டு.  நான் மற்ற எழுத்தாளர்களைப் போல் பொழுதுபோக்கு சினிமாக்களின் எதிரி அல்ல.  எனக்கு கஜினி, ரன், கில்லி போன்ற படங்கள் ரொம்பப் பிடிக்கும்.  ஏன், துப்பாக்கியைக் கூட ரசித்தே பார்த்தேன்.   ரன் படத்தை இயக்கியவர் என்ற முறையில்தான் அஞ்சானையும் ஆர்வத்துடன் பார்த்தேன்.  மேலும், சூர்யா எனக்குப் பிடித்தமான ஒரு நடிகர்.  காக்க காக்க, வாரணம் ஆயிரம், பிதாமகன் போன்ற படங்களில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன்.  அவருக்காகவும் அஞ்சான் பார்க்க ஆசைப்பட்டேன்.

தமிழர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அஞ்சான் போன்ற ஒரு மரண மொக்கையைப் பார்த்ததில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் நான் இதை விடவும் மரண மொக்கைகளைப் பார்த்திருக்கிறேன்.  பாலாவின் அவன் இவன், சரத்குமார் நடித்த நாடோடி மன்னன், பிரகாஷ் நடித்த தயாரித்த வெள்ளித்திரை… இன்னும் பல.    அதனால் அஞ்சானை நீங்கள் ஒரு மரண மொக்கையாக எடுத்தது பற்றி எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.  சூர்யாவை ஒரு மும்பை தாதாவாகக் காண்பித்திருக்கிறீர்கள்.  ஆனால் அவரோ அந்தக் குறுந்தாடியில் ஒரு  சாக்லெட் பேபி போல் தோற்றமளிக்கிறார்.  இன்னொரு தாதா… சூர்யாவின் நண்பன்…  அவர் அமுல்பேபி போல் தோற்றமளிக்கிறார்.  இவர்களெல்லாம் தாதா என்று நம்ப தமிழர்கள் என்ன அவ்வளவு கேணையர்களா?

கதை, திரைக்கதை எதுவுமே இல்லாத பயத்தின் காரணமாக பெண் கறியை நம்பி பல ஆபாச நடனங்களை வைத்திருக்கிறீர்கள். நல்லது.   உங்கள் குழந்தைகளை இந்தப் படங்களைப் பார்க்க அனுமதிப்பீர்களா?  என் கதைகளில் செக்ஸ் உண்டு.  ஆனால் அவை குழந்தைகள் படிப்பதற்கல்ல.  ஆனால் உங்கள் படங்களை எல்லோரும் வயது வித்தியாசம் இல்லாமல் பார்க்கிறார்கள்.  மேலும், கோவில்களில் உள்ள காமரசம் சொட்டும் சிற்பங்களுக்கும் போர்னோ படங்களுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.  எனவே, உன் கதையில் வராததா என்று என்னைப் பார்த்துக் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.  என்னுடைய ஐரோப்பிய நண்பர்கள் தமிழ்ப் படங்களைப் பார்த்தால் அதில் வரும் நடனக் காட்சிகள் நீலப் படங்களை விட மோசமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.  அஞ்சானில் அப்படிப்பட்ட நடனங்கள்தான் இருக்கின்றன…

(தொடரும்…)