அன்னையர் தினம்

(மீள் கட்டுரை)
மே 13, 2018


இன்று அன்னையர் தினம் என்று பேப்பரில் கண்டிருந்தது. முகநூலிலும் அன்னையர் தினத்துக்காகப் பலர் கண்ணீர் உகுத்திருந்தனர். இதற்கு மேல் நான் எழுதப் போகும் விஷயத்தை ஜீரணிக்கக் கொஞ்சம் மன வலு தேவை. என் மீது நம்பிக்கையும் தேவை. என்ன நம்பிக்கை என்றால், நான் பெண்களையும் ஆண்களையும் சமமாக பாவிப்பவன். இதுதான் மிகவும் முக்கியம். நான் பெண்களை மதிப்பவன் என்று சொல்லி, பெண்களுக்கு அதிக சலுகை கொடுத்துக் கொண்டு, ஆனால் மனதளவில் படு மோசமான ஆணாதிக்கவாதிகளாக இருக்கும் பலரை நான் கண்டிருக்கிறேன். ஒரு படு முற்போக்கான ரெபல் எழுத்தாளர் தன் தோழி வேறு ஆணுடன் பேசுவதைக் கண்டிப்பது வழக்கம். இன்னொரு எழுத்தாளர் – பெண்களை தெய்வமாக ஆராதிப்பவர் – எந்தப் பெண்ணைக் கண்டாலும் நைஸாக, நைச்சியமாக, ‘வர்றியா?’ என்று கேட்பார். இதெல்லாம் பெண்கள் என்னிடம் சொன்னது. இப்படிப்பட்ட போலிகள் இடையே நான் ஆணையும் பெண்ணையும் சமமாகவே பாவிக்கிறேன்; குறைந்த பட்சம் அதற்கு முயற்சிக்கிறேன்.

மேலும், நான் என்னில் ஒரு பாதி ஆண்; மறுபாதி பெண் என்று எண்ணித்தான் வாழ்கிறேன். எந்தப் பெண்ணையும் வேலை வாங்கி எனக்குப் பழக்கமே இல்லை. எல்லாம் 25 வயது வரை தான். அந்த அனுபவத்தினால்தான் இப்படி இருக்கிறேன். இந்த தேசத்தில் ஆண்களில் அதிகம் பேர் கிரிமினல்களாகவும், சோம்பேறிகளாகவும், உருப்படாதவர்களாகவும், அடுத்தவர் மீது சவாரி செய்யும் exploiters-ஆகவும், ஈவு இரக்கமற்றவர்களாகவும், கொடும் நெஞ்சக்காரர்களாகவும், உதவாக்கரைகளாகவும், ரேப்பிஸ்டுகளாகவும், பெண்களை அடிமைகள் என நினைப்பவர்களாகவும் ஆவதற்கு இந்த தேசத்தின் அன்னையரே ஒருவகையில் காரணம்.

பிறந்ததிலிருந்தே அன்னையர் குழந்தைகளை ஊட்டி வளர்க்கிறார்கள். ஐரோப்பாவிலும் முக்கியமாக அமெரிக்காவிலும் பள்ளிக்குச் செல்லும் இந்தியக் குழந்தைகளைக் கையாள்வது அங்கே உள்ள ஆசிரியர்களுக்குப் பெரும் தலைவலியாக உள்ளது. காரணம், இந்தியக் குழந்தைகளுக்குத் தானாக சாப்பிடத் தெரியாது. அம்மா ஊட்டி விட்டு சாப்பிட்டுத்தான் பழக்கம். மற்ற குழந்தைகள் தானாகச் சாப்பிடுவதை இதுகள் பார்த்துக் கொண்டு இருக்கும். இப்படியே வளரும் இந்தியக் குழந்தைகள் வளர்ந்த பிறகு எப்படி இருக்கும்? சௌபாவின் மகனைப் போல் தான் இருக்கும். குடித்து விட்டு காரை சாலையில் படுத்துக் கிடப்போர் மீது மோதும். அப்பாவைக் கொல்ல வரும். எல்லாம் நடக்கும். இன்று காலை பார்த்து நான் பதறிய சம்பவம் ஒன்று. ஒரு 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஏழெட்டு வயது தடிமாட்டைத் தோளிலும் இடுப்பிலுமாகத் தூக்கிக் கொண்டு போனார். கிட்டத்தில் போய் பார்த்தேன். தடிமாட்டுக்குக் கை கால் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும் எனக்கு சந்தேகம். பின்னாலேயே போனேன், எத்தனை தூரம் தான் இந்தப் பெண் இந்தத் தடிமாட்டைத் தூக்கிக் கொண்டு போகிறார் என்று பார்த்து விடுவோம் என்று. இரண்டு தெருக்களைத் தாண்டி இறக்கி விட்டு, முடியலடா அம்மாவால என்று பெருமூச்சுடன் சொல்ல, தடிமாடோ தூக்கிக்கோ என்று அலறுகிறது. அழாதடா தங்கம், இதோ வீடு வந்துடுச்சு, நட என்று சொல்லியும் தடிமாடு அலறலை நிறுத்தவில்லை. பிறகு அந்தப் பெண் அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனதை ஆத்திரமும் ஆச்சரியமுமாகப் பார்த்தேன். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் எப்படி உருப்படும்? நடக்கத் தெரியாது, சாப்பிடத் தெரியாது, அம்மாவுக்குத் தலைவலி என்றால் கடைக்குப் போய் ஒரு சாரிடான் மாத்திரை வாங்கிக் கொடுக்கத் தெரியாது (அடப் போம்மா, நானே டென்ஷன்ல இருக்கேன், நீ வேற உயிரை வாங்குறே!), இப்படியே வளர்ந்து மனைவியோடு சம்போகம் செய்வதற்கு condom கூட அம்மா தான் வாங்கிக் கொடுக்க வேண்டும். இப்படியே அம்மா என்ற வேலைக்காரியால் வளர்க்கப்படும் தடிமாடுகள் வளர்ந்த பிறகு தனக்கு வரும் பெண்ணையும் வேலைக்காரியாகவே பார்க்கிறது. இவ்விதமாகவே வளர்க்கப்படும் பெண் தடிமாடும் தனக்கு வரும் ஆடவனைத் தன் வேலைக்காரனாகப் பார்க்கிறது. அதுவாவது தொலையட்டும்; குடும்பம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? இந்தத் தடிமாடுகள் இதே மனோபாவத்தில் அந்நியரையும் நடத்தும் போது ஒட்டு மொத்த சமூகமும் மெண்டல் அசைலமாக மாறுகிறது. நம் இந்தியச் சமூகத்தைப் போல.

என்னை எடுத்துக் கொள்வோம். வீட்டுக்குத் தலைச்சன் பிள்ளை. கேட்க வேண்டுமா? பாசமான பாசம். விளைவு? 25 வயதில் எந்த வேலையையும் செய்து கொள்ளத் துப்பில்லாதவனாக இருந்தேன். வெந்நீர் போட்டுக் கொள்ளக் கூடத் தெரியாது. அதை விடக் கொடுமை, சைக்கிள் விடத் தெரியாமல் போய் விட்டது. பொத்திப் பொத்தியே வளர்த்ததால் வந்த வினை.

மேலும், கிராமங்களில் சாதி ஆதிக்கம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கும் இந்த அம்மாக்கள் பெரிதும் காரணம். திருமணத்தின் போது அம்மா வைத்ததுதான் சட்டம் இன்னமும். சுப்ரமணியபுரம் படத்தில் வெட்டுக்குத்து எப்படி ஆரம்பிக்கிறது? நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர் என்று உசுப்பேத்தி உசுப்பேத்திதானே? இப்படிப் பல விஷயங்களை அவதானிக்க வேண்டியிருக்கிறது.

ஆகவே, இந்திய அம்மாக்கள் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல; பாசம் என்ற பெயரில் கோடிக் கணக்கான சமூக விரோதிகளையும், உதவாக்கரைகளையும் உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். எனவே அன்னையரைப் போற்றுவதற்கு பதிலாக அவர்களை நல்ல குடிமகன்களை உருவாக்கச் சொல்லிப் பயிற்றுவிப்போம்.

***

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai

***