தூத்துக்குடி கொத்தனாரு…

தூத்துக்குடி கொத்தனாரு பாடல் கேட்டேன். இசைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை பாடல் வரிகளுக்குக் கொடுக்கவில்லை. பொதுவாகவே சினிமா பாடல் வரிகள் காலியான இடங்களை வார்த்தைகளால் நிரப்பும் வேலையாகத்தான் இருக்கின்றன என்பதால் இதில் எதுவும் ஆச்சரியம் இல்லை. ஆனால் தூத்துக்குடி கொத்தனாரு பாடல் இசையால் பிரபலம் ஆகவில்லை. அதன் பாடல் வரிகளால் பிரபலம் ஆகியிருக்கிறது. அநேகமாக பெண்ணின் ஜனன உறுப்புக்கான லோக்கல் வார்த்தையைப் போட்டு எழுதப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பாடலுக்கு பாடல் வரிகள் சரியாக இருக்க வேண்டாமா?

பாடியவருக்கு வேறு தமிழ் ஒரு வார்த்தை தெரியாது போல் இருக்கிறது. குதி குதி என்று பாடியிருக்கிறார். நெடில் போட வேண்டும் என்று கூட அவருக்குத் தமிழ் சொல்லித் தர அங்கே யாரும் இல்லையா? இதற்கு இசை அமைத்தவருக்கும் தமிழ் தெரியாதா? அப்புறம் ஏண்டா பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படி ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறீர்கள்?

இன்னொரு விஷயம். சினிமாவில் தணிக்கை செய்ய தணிக்கைக் குழு இருக்கிறது? ஆனால் கணினி உலகில் தணிக்கையெல்லாம் கிடையாதா? கவனியுங்கள். நான் தணிக்கைக்கு ஆதரவாளன் இல்லை. சினிமாவில் இருக்கிறது, இங்கே இல்லையே என்ற சந்தேகத்தால் கேட்டேன். அப்படியெல்லாம் ஒன்றும் இப்படி ஒரு கெட்ட பாட்டால் சமுதாயம் சீரழிந்து விடாது. அது ஏற்கனவே சீர்திருத்தவே இயலாதபடி சீரழிந்துதான் கிடக்கிறது.

பாடலுக்கு இசையும் குரலும் அட்டகாசம். ஆனால் பாடல் வரிகள் படு மொக்கை. முதல் வரியில் கொத்தனார் என்றும் அடுத்த வரியில் குத்தினாரு என்றும் வருகிறது. கொஞ்சம் கூட அறிவே இல்லை பாருங்கள். குத்தினாரு என்றால் கொத்தனாரு என்றுதானேடா வர வேண்டும், மட்டி முண்டங்களா?