அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஒரு பிரபலமான இலக்கியப் பத்திரிகை ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது. கதையோ, கவிதையோ, நாவலிலிருந்து ஒரு பகுதியோ எதுவாகவும் இருக்கலாம். ஆனால் இதற்கு முன் வெளிவந்ததாக இருக்கக் கூடாது.
உல்லாசம் நாவலிலிருந்து ஒரு அத்தியாயத்தை அனுப்பலாம் என எண்ணினேன். அது உயிர்மையில் வெளிவந்த போது அதைப் படித்த போது அடிவயிறு கலங்கியது என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அதை அனுப்ப முடியாது என்றாள் ஸ்ரீ. காரணம், போட்டி விதிகளில் ஒன்று, போட்டிக்கு அனுப்பப்படும் கதை இதற்கு முன்பு எங்கும் பிரசுரிக்கப்பட்டிருக்கக் கூடாது. ”தமிழில்தானே வந்தது, ஆங்கிலத்தில் வரவில்லையே?” என்றேன். ”அது சரி, ஆனால் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உங்கள் நலம் விரும்பிகள் யாராவது எழுதிப் போடுவார்களே?” என்றாள்.
அதுவும் சரிதான். முதல் பரிசு என்று அறிவித்த்து முடித்த பிறகுகூட பரிசைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். அதுவும் அமெரிக்கர்கள். அதனால் உல்லாசம் நாவலிலிருந்து வேறு ஒரு பகுதியை அனுப்பலாம் என்று முடிவு செய்தோம்.
இந்த விவகாரத்திலிருந்து நான் அறிந்து கொண்ட பாடம் என்னவென்றால், ஆங்கிலத்தில் எழுதப் புகுந்து விட்டு பிறகு அதே கதையைத் தமிழிலும் பிரசுரித்து விடக் கூடாது. இது பல சமயங்களில் இடைஞ்சல்களை ஏற்படுத்துகிறது. சென்ற மாதம்கூட ஒரு நண்பர் கதை கேட்டார். அன்புடன் மறுத்து விட்டேன். தமிழில் பிரசுரிப்பதும் இலவசம். அவர்களே தங்கள் கைக்காசைப் போட்டுத்தான் நடத்துகிறார்கள். அதனால் எழுதுவதும் இலவசம். ராயல்டியோ பீத்துணி துடைக்கும் காகிதம் வாங்குவதற்குத்தான் சரியாக இருக்கும். என்னுடைய 75 நூல்கள் விற்பனைக்கு இருந்து வருகின்றன. எனக்குக் கிடைத்த ராயல்டி தொகை 1,35,000 ரூ. இது வருடாந்தர ராயல்டி. எனவே பன்னிரண்டால் வகுத்தால், என் மாத ஊதியம் சுமார் 11000 ரூ. தெருவில் இஸ்திரி போடும் தொழிலாளியின் மாதச் சம்பளமே 25000 ரூ.
ஆங்கிலத்தில் ஒரு கதை வெளியானால் 500 டாலர் தருகிறார்கள். எனவே இனிமேல் நட்புக்காகவெல்லாம் கதைகளைத் தமிழில் பிரசுரிக்கக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். நண்பர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. தமிழில் என் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகள் விற்றால் நான் மொழிபெயர்ப்புப் பக்கமே போக மாட்டேன். ஆங்கிலத்திலும் எழுத மாட்டேன். இங்கே நூறு இருநூறு பிரதிகள் மட்டுமே விற்பனை ஆவதால்தான் இந்த முடிவு.
தருண் தேஜ்பாலின் ஆல்கெமி ஆஃப் டிஸைர் ஒரு அற்புதமான காதல் கதை. அதன் மொழி ஆங்கிலத்தில் ஒரு பெரும் பாய்ச்சல். இப்போது என்னுடைய உல்லாசம் நாவலில் கதையிலும், மொழியிலும் ஆல்கெமி ஆஃப் டிஸைர் நாவலைத் தாண்ட வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இதுவரை எழுதியதைப் படித்துப் பார்த்த, நான் மிகவும் மதிக்கும் ஆங்கில நாவலாசிரியர் உல்லாசத்தின் மொழியை வெகுவாக சிலாகித்தார். நாவலில் இரண்டு வித மொழிகளை உபயோகித்திருக்கிறேன். ரிஷியின் மொழி வெகு எளிமை. சஞ்ஜனா உருவகங்களாலேயே சிந்திப்பவள். எனவே சஞ்ஜனாவின் நாட்குறிப்புகள் முழுவதும் உருவகங்களாலேயே நிரம்பிச் செல்லும். படித்துப் பார்த்த அந்த ஆங்கில நாவலாசிரியர், இந்த அளவு ஆங்கிலம் எழுத முடிந்த நீங்கள் ஏன் இத்தனைக் காலம் தமிழில் எழுதிக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்டார். நானா எழுதுகிறேன், மேலேயிருந்து வருகிறது என்று லா.ச.ரா. பாணியில் பதில் சொன்னேன்.
இந்த நாவலின் உருவாக்கத்தில் நான் ஸ்ரீக்கு மிகப் பெரிதாக நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அடுத்த ஜென்மாவில்தான் திருப்பிக் கொடுக்க முடியும்.
நாவலை முடிப்பதற்காக அடுத்த வாரம் பெங்களூர் செல்கிறேன். பொதுவாக பெங்களூர் சென்றால் சென்ற அடுத்த கணமே காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல் வைனில் விழுந்து விடுவேன். ஆனால் இந்த முறை என் மடிக்கணினியை எடுத்துச் செல்கிறேன். வைனுக்கு விடுமுறை. முழுமூச்சாக உல்லாசம்தான். தப்பர்த்தம் செய்யாதீர். உல்லாசம் நாவல். வைன் இல்லாத பெங்களூர் புதிய அனுபவம். முதல் முதலாக வைனை விட எழுத்து போதை தருவதாக இருக்கிறது.
இத்தனை நெருக்கடிக்கு இடையிலும் இந்த ஆண்டு வெளிவர இருக்கும் என்னுடைய இருபத்தைந்து நூல்களில் முதல் இரண்டு நூல்களுக்குப் பிழை திருத்தம் செய்து முடித்தேன். ஒன்று, வால்ட்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்? இரண்டாவது, இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும். இது சிறுகதைத் தொகுதி. வால்ட்டேர் கட்டுரைத் தொகுதி. வால்ட்டேரை ஃப்ரெஞ்சில் வோல்த்தேர் என்றே உச்சரிப்பர். தமிழில் வால்டேர் என்று எழுதுவது வழக்கம். ஆனால் பலரும் Voldare என்று உச்சரிப்பதைக் கண்டதால் வால்ட்டேர் என்று எழுதியிருக்கிறேன். இந்த இருபத்தைந்து நூல்களையும் தொகுத்தவர் டாக்டர் ஸ்ரீராம். ஒவ்வொரு நூலைத் தொகுப்பதும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிரமமான காரியம். தொகுப்பு என்பது சாதாரண காரியம் அல்ல. முதலில், கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட பொருளைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். இலக்கியம், தத்துவம், சினிமா, அன்றாட வாழ்க்கை, நகைச்சுவை, விவாதம், கேள்வி-பதில் என்று சுமார் இரண்டு டஜன் விவகாரங்களில் புகுந்து புகுந்து எழுதியிருப்பேன். எல்லாமே வரைமுறை இல்லாமல் இறைந்து கிடக்கும். ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுக்க வேண்டும். ராப்பகலாக உழைத்தால் ஒரு புத்தகத்தைத் தொகுக்க பதினைந்து நாள் ஆகும்.
மருத்துவமனைக்கும் சென்று கொண்டு ஸ்ரீராம் இந்தப் பணியைச் செய்து கொடுத்தார். அவருக்கும் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவருக்குமே அடுத்த ஜென்மம் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.