சில ஆண்டுகள் நான் சென்னை மௌண்ட் ரோடிலுள்ள தலைமைத் தபால்துறை அதிகாரி (Chief Postmaster General) அலுவலகத்தில் ஸ்டெனோவாக வேலை செய்தேன். அப்போது என்னோடு சக ஸ்டெனோவாகப் பணிபுரிந்தவர் சீனிவாசன். அக்கால கட்டத்தில் எனக்கு எத்தனையோ உதவிகள் செய்தவர். அந்த உதவியை நான் ஒருபோதும் மறக்க இயலாது. அதற்குப் பிரதியாக நான் நல்ல நிலைக்கு வந்ததும் அவருக்கு எதுவும் செய்யவில்லை. செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர் பெயரையே என் கைத்தொலைபேசியில் block பண்ணி வைத்து விட்டேன். காரணம் பின்னால் வருகிறது.
என் தொலைபேசி நான் வீட்டில் இருக்கும்போது சைலண்ட் மோடில்தான் இருக்கும். நானாகத்தான் பார்த்து தொடர்பு கொள்வேன்.
ருசியான மீன் குழம்பு சாப்பிட்டு கனகாலம் ஆயிற்று. கனகாலம் என்றால் நாலைந்து ஆண்டுகள் என்று பொருள். நானோ வாரம் இரண்டு நாள் மீன் சாப்பிடும் ஆள்.
மீன் மட்டும் அல்ல, நான் ஒரு அசைவ உணவு வெறியன். எந்த அளவுக்கு என்றால்…
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை. பார்க் ஷெரட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பாரில் மதியம் ஒரு மணியிலிருந்து நானும் மணியும் பாலு ஐஏஎஸ்ஸும் மது அருந்தினோம். நாலு மணிக்கு மணி கிளம்பி விட்டார். நானும் பாலுவும் ஐந்து மணி வரை குடித்து விட்டு, வேறொரு மதுக்கூடத்துக்குக் கிளம்பினோம். எப்போதும் அப்படிச் செய்வதில்லை. அன்று தோன்றியது. போனோம்.
காலஞ்சென்ற பார்க் ஷெரட்டனில் தக்ஷிண் என்று ஒரு உணவு விடுதி இருந்தது. அங்கே நள மகாராஜாதான் செஃப்பாக இருந்தார். அதனால் அந்தச் சமையலை அடித்துக் கொள்ள ஏழுலகிலும் ஆள் இல்லை. அன்றைய தினம் மட்டன் குழம்பு வாங்கி ஒரே ஒரு கவளம் சோறு சாப்பிட்டிருந்தேன். கறியும் எலும்புமாக குழம்பு அப்படியே இருந்தது. அதை ஒரு அழகான டப்பாவில் போட்டு பிரமாதமாக பார்சல் பண்ணிக் கொடுத்திருந்தார் திரு நளர்.
பாலுவும் நானும் பார்க் ஷெரட்டனிலிருந்து ஒரு பாருக்குப் போய் விட்டு, அங்கிருந்து இன்னொரு பாருக்குப் போனோம். வீட்டுக்குத் திரும்ப நள்ளிரவு ஆகி விட்டது.
மறுநாள் எழுந்த போது அவந்திகா பாலுவைப் பாராட்டினாள். “பரவாயில்லை, உன் பாலு சமர்த்தாக உனக்குப் பிடித்த மட்டன் குழம்பு பார்சலையும் கையோடு கொண்டு வந்து கொடுத்தார்.” சொல்லி விட்டு, குளிர்பதனப்பெட்டிக்குள் பதமாக அமர்ந்திருந்த மட்டன் குழம்பு பார்சலைக் காண்பித்தாள்.
என்னது, பாலு கொண்டு வந்து கொடுத்தானா? கடும் போதையில் நடக்கக் கூட முடியாமல் காரை பாரிலேயே வைத்து விட்டு ஆட்டோ பிடித்து அல்லவா வந்தான்?
தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன்.
“அண்ணே, பயங்கரம்னே நீங்க… கடும் போதெ உங்களுக்கு… ஒங்க பேரக் கேட்டா கூட சொல்லிருக்க மாட்டிங்க. அப்டி ஒரு போதெ. ஆனா பாருங்க, அந்த போதெலயும் நீங்க எட்த்துணு வந்த மட்டன் பார்சல விடவே இல்ல. அப்டியே நெஞ்சுல வச்சு அணச்சிணே வந்தீங்க. பத்ரமா இருக்குல்ல?”
அப்படி ஒரு அசைவ வெறியன் நான் என்பதற்காக இதைச் சொன்னேன்.
அப்பேர்ப்பட்ட அசைவ வெறியனுக்கு இங்கே சென்னையில் ஒரு நல்ல அசைவ உணவகம் சிக்க மாட்டேன் என்கிறது. ஈரோடு அம்மன் மெஸ் ஈரோட்டில் பெத்த பேர் வாங்கியது. இங்கே சென்னைக்கு வந்து மொக்கையாகி விட்டது. என் வீட்டுக்கு எதிரே மண் வீடு என்று ஒரு அசைவ உணவகம். கன மொக்கை. வீட்டிலிருந்து பத்தடி தூரத்தில் சொர்க்கம் என்று இன்னொரு அசைவ உணவகம். ஒரு மீன் சாப்பாடு 850 ரூ. மொக்கை, மொக்கை. டபுள் மொக்கை. இப்படி எதை எடுத்தாலும் வாயிலே வைக்க முடியவில்லை. விருதுநகர், திண்டுக்கல், மதுரை, செட்டிநாடு என்று ஊர் பெயர் கொண்ட அசைவ உணவகங்களும் மொக்கை பட்டத்துக்குப் போட்டி போடுகின்றன.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் என்று ஒரு நண்பர். இலக்கிய வாசகர். என்னை மட்டுமல்லாமல் எல்லோரையும் படிப்பார். கிழக்கு அண்ணா நகரில் Radzz Kitchen என்று ஒரு அசைவ உணவகம் வைத்திருக்கிறார். அவர் எனக்குப் பிடித்த அய்ட்டத்தை அங்கிருந்து எடுத்துக்கொண்டு வந்து பார்ப்பதாக சொல்லிக்கொண்டே இருந்தார். முந்தா நாள் ஃபோன் பண்ணினார். சரி, புதன்கிழமை வாருங்கள் என்றேன். அதாவது, நேற்று. இன்று வியாழக்கிழமை அல்லவா? நேற்றுதான் தேதி குறித்தோம்.
உங்களுக்குப் பிடித்தது?
எனக்குப் பிடித்தது என்று ஒரு அம்பது வகை உண்டு. ரத்தப் பொரியல், மூளைப் பொரியல், ஈரல் வறுவல், தலைக் குழம்பு… மீன் வகையறாவில் கெண்டை, ஜிலேபி, ரோகு போன்ற ஆற்று மீன்களும்,
வஞ்சிரம், கிழங்கான் இரண்டைத் தவிர மற்ற எல்லா வகை கடல் மீன்களும் பிடிக்கும்.
சரி, ஒன்றே ஒன்றைச் சொல்ல வேண்டுமானால் எதைச் சொல்வீர்கள்?
விரால் மீன்.
சரி, விரால் மீன் குழம்பு. வஞ்சிரம் வறுவல். ஓகேவா?
வேண்டாம் ரவி. விரால் குழம்பு, விரால் வறுவல். போதும். இப்போதெல்லாம் நான் அதிகம் சாப்பிடுவதில்லை. சோறு எடுத்து வர வேண்டாம். நானே செய்து கொள்கிறேன்.
ஏன், சோறும் எடுத்து வந்து விடுகிறேனே?
வேண்டாம் ரவி. சோறு நானே செய்து கொள்கிறேன். குழம்பும் வறுவலும் போதும்.
ம்ஹும். குழம்பும் வறுவலும் போதும். சோறு நானே செய்து கொள்கிறேன்.
சரி, மதியம் இரண்டு மணிக்கு வருகிறேன். இன்னொரு விஷயம், எனக்கு சீனியையும் பார்க்க வேண்டும் என்று இருக்கிறது.
எனக்கு சீனி பெயரைக் கேட்டதும் அடி வயிறு கலங்கியது.
அது பற்றி அப்புறம் பேசிக் கொள்ளலாம். சரியா?
சரி.
இப்போது என் முன் இரண்டு பிரச்சினைகள் எழுந்தன. ஒன்று, ரவிச்சந்திரன் என் வீட்டுக்கு வரும்போது எக்காரணத்தைக் கொண்டும் அவர் சீனி பெயரைக் குறிப்பிடக் கூடாது.
சென்ற மாதம்தான் சீனியின் பெயரால் ஒரு பெரும் சம்பவம் நடந்து முடிந்திருந்தது.
க்ராஸ்வேர்ட் விருதுக்கு என் நாவல் ஒன்று குறும்பட்டியலில் தேர்வாகியிருந்தது. குறும்பட்டியலில் தேர்வாவதே பெரிய விஷயம். பொதுவாக விருதுக்குழு நடுவர்களுக்கு நான் வேண்டாத ஆள். அதையும் தாண்டி தேர்வாகியிருக்கிறது. இனிமேல் வாசகர்கள் அளிக்கும் வாக்கு எண்ணிக்கைதான் விருதுக்கான புத்தகத்தை முடிவு செய்யும். எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. என்னோடு கூட மல்லுக்கு நிற்பவர்களில் ஒருவர் சர்வதேசப் புகழ் பெற்றவர். இன்னொருவர், மலையாளி. எனக்கு எப்படிக் கிடைக்கும்?
மும்பையில் விழா. சீனியும் நானும் சென்றிருந்தோம். விருது யாருக்குக் கிடைக்கும் என்று மனம் பரபரப்பாகத்தான் இருந்தது. இதற்கு முன்னால் அசோகமித்திரன் சென்றிருக்கிறார். ஆனால் விருது கிடைக்கவில்லை. குறும்பட்டியலோடு சரி.
என் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சந்தனாவும் வந்திருந்தாள்.
எதிர்பாராத விதமாக விருது எனக்குக் கிடைத்தது. உற்சாக மிகுதியில் அன்று இரவு வழக்கத்தை விடவும் அதிகமாக வைன் குடித்தேன். மறுநாள் மதியம் சென்னைக்குக் கிளம்பி விட்டோம். சந்தனாவுக்கும் அதே விமானம்தான்.
முதல் நாள் இரவு இரண்டு போத்தல் வைனை தள்ளியிருந்ததால் மறுநாளும் லேசாகக் கிறக்கம் இருந்தது. பரவாயில்லை. என்னுடைய ஐம்பது ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் தமிழ்நாட்டுக்கு வெளியே நான் வாங்கும் முதல் விருது.
பொதுவாக விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குப் போவதற்கு நான் யாரோடும் கூட்டு வைத்துக்கொள்வதில்லை. என் நண்பர் அமரேந்திரன் ஒரு ட்ராவல்ஸ் நிறுவனம் வைத்திருக்கிறார். அவருக்கு முந்தின தினமே ஃபோன் செய்து சொல்லி விட்டால் கார் அனுப்பி விடுவார். ஆனால் விருது வாங்கின குஷியில் அதை மறந்து விட்டேன். சரி, சீனி இருக்கிறார், வோலா அல்லது வூபர் போட்டுப் போய் விடலாம்.
விமானத்திலிருந்து இறங்கியதுமே சந்தனா எங்களுக்கு டாட்டா சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள். அப்போதுதான் நானும் சீனியும் சௌம்யாவைப் பார்த்தோம். சௌம்யா தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்பவர். அவர் தனக்கும் நான் வசிக்கும் அடையாறு காந்தி நகரில்தான் ஜாகை என்றும், என்னை என் வீட்டில் விட்டு விடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் சொன்னார்.
வழியில் கத்திப்பாரா சந்திப்பில் இறங்கிக் கொள்வதாக சொன்னார் சீனி.
அப்போது தன்னுடைய ட்ரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டதாகவும் அது சம்பந்தமாக விமான நிலையத்தில் புகார் கொடுத்திருந்ததாகவும், அது கிடைத்து விட்டதா என்று பார்த்து விட்டு வந்து விடுவதாகவும் சொல்லி விட்டு விமான நிலையத்தின் வேறோரு பகுதிக்குச் சென்றார் சௌம்யா.
வருவதற்கு இருபது நிமிடம் ஆயிற்று. நான் பதற்றமானேன். அவந்திகாவுக்கு மும்பை விமான நிலையத்திலிருந்து போன் பண்ணினதுதான். அதற்குப் பிறகு கைபேசியில் சார்ஜ் போய் விட்டது. இந்த வார்த்தையை என் கைக்கு ஃபோன் வந்ததிலிருந்து சொன்னதே இல்லை. முந்தின தினம் விருது கிடைத்த சந்தோஷத்தில் ஃபோனை சார்ஜ் போட மறந்து போனேன். கையில் சார்ஜரும் இல்லை. சார்ஜர் சமாச்சாரம் எல்லாம் கேபின் லக்கேஜில் போய் விட்டது. பொதுவாக சார்ஜரை அதில் வைக்க முடியாது. ஆனால் அன்றைய தினம் கை லக்கேஜ் வைக்க இடம் இல்லை என்று விமானச் சிப்பந்திகளே என் பெட்டியை வாங்கி கேபின் லக்கேஜில் சேர்த்தார்கள். சார்ஜர் இருக்கிறது என்று சொல்லியும் பரவாயில்லை என்று சொல்லி விட்டார்கள்.
சௌம்யா வந்ததும் சௌம்யாவின் கணவர் காரில் வந்து எங்களை ஏற்றிக்கொண்டார். சீனி கத்திப்பாராவில் இறங்கினார். சௌம்யாவின் கணவர் கிண்டியில் எங்கோ போக வேண்டும். கார் கிண்டி தொழிற்பேட்டையின் உள்ளே நுழைந்து எங்கெங்கோ போய்க்கொண்டிருந்தது. கடைசியில் அவர் இறங்கிக் கொள்ள சௌம்யா காரை ஓட்டினார்.
கடைசியில் காந்தி நகர் வந்த போது மூன்றரை மணி. விமானம் இரண்டு மணிக்கு வந்திருந்தது.
வந்ததும் வராததுமாக பெரும் கலவரத்துக்கு ஏற்பாடு செய்தாள் அவந்திகா.
முதல் கலவரம், ஏன் ஃபோன் செய்யவில்லை? இந்நேரமாக எங்கே போய்த் தொலைந்தாய்? போன் வேலை செய்யவில்லை என்றால் வேறு யார் ஃபோனையாவது வாங்கி தகவலைச் சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே?
இதேபோல் நூறு கேள்விகள். விருது மகிழ்ச்சியெல்லாம் குப்பைக்குப் போய் விட்டது.
விஷயம் என்னவென்றால், நான் அணிந்திருக்கும் தங்க செயின்களால் அவள் பெரிதும் பயந்து போய்க் கிடந்தாள்.
மெதுமெதுவாகத் தகவல் சொன்னாள்.
என்னைத் தொடர்பு கொள்ள முடியாமல் போய் விட்டதால், சந்தனாவுக்கு ஃபோன் செய்திருக்கிறாள். அவந்திகாவின் குரலில் தெரிந்த பதற்றத்தைப் புரிந்து கொண்ட சந்தனா “பயப்பட ஒன்றுமில்லை, லக்கேஜ் வர நாழியாகியிருக்கும்” என்று சொல்லியிருக்கிறாள்.
”அதுக்கில்லம்மா, ஒடம்பு பூரா நகையைப் போட்டுகிட்டுப் போயிருக்காரு, அதான் பயமா இருக்கு.”
“அதெல்லாம் ஒன்னும் கவலைப்படாதீங்க அக்கா, கூட சீனி இருக்கார். பயம் வேண்டாம்.”
“என்னது, அவன் இருக்கானா?”
உடனேயே சந்தனாவுக்குத் தான் செய்த பிழை புரிந்து விட்டது. நான் அவளிடம் ஏற்கனவே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன், ”எந்தக் காரணத்தை முன்னிட்டும் சீனி பெயரை மட்டும் உச்சரித்து விடாதே. உச்சரித்தால் வீட்டில் பூகம்பம்தான்.”
சந்தனா இந்த விஷயங்களில் சூதுவாது தெரியாதவள். நான் சொன்னதை மறந்து விட்டாள். அவந்திகாவின் குரலில் மாற்றம் தெரிந்ததும் புரிந்து விட்டது. ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்து விட்டதே?
பிறகுதான் ஸ்ரீராம் மூலம் தெரிய வந்தது, ஸ்ரீராமையும் இதற்கு முந்தின நாள் ஃபோன் செய்து கடும் குறுக்கு விசாரணை செய்திருக்கிறாள்.
”சாரு யார் கூடப் போயிருக்கிறார்?”
இதையே திருப்பித் திருப்பிப் பலவிதமாகக் கேட்டிருக்கிறாள்.
ஸ்ரீராம் தொழிலில் நேர்த்தியானவர். எப்படிக் கேட்டும் ஒரே பதில்தான்.
”சாரு தனியாகத்தான் போயிருக்கிறார்.”
“அதற்கில்லை செல்லம், ஒடம்பு பூரா நகையைப் போட்டுகிட்டுப் போயிருக்கிறார். அதனால்தான் பயமா இருக்கு. யாராவது அவர் கூடப் போயிருக்காங்கன்னு தெரிஞ்சா கொஞ்சம் பயம் இல்லாம இருப்பேன்.”
ஸ்ரீராம் இதற்கும் மசியவில்லை. ஏனென்றால், நான் நகைகள் அணிந்து தனியாகப் போயிருப்பதை விட சீனியின் பெயர் பெரிய இழப்பை உண்டு பண்ணும்.
கடைசி வரை தான் சொன்னதிலேயே உறுதியாக நின்றிருக்கிறார்.
சந்தனாவிடமிருந்து விஷயம் தெரிந்ததும் அவந்திகா சீனிக்கு ஃபோன் போட்டிருக்கிறாள்.
“ஃபோனை சாரு கிட்ட குடுங்க.”
“சாருவா? அவர் அப்பொவே கார்ல கிளம்பிட்டாரே?”
“ஃபோனை இப்போ சாரு கிட்ட குடுக்கப் போறீங்களா, இல்லியா?”
“அட என்னாங்க நீங்க? சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க? அவர் எப்பவோ காரில் கிளம்பிப் போய்ட்டார். இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவார் பாருங்க.”
“நீங்க எதுக்கு அவர் கூட மும்பை போனீங்க?”
”நான் ஆஃபீஸ் வேலையா மும்பை போனேன். வரும்போது அவரை ஃப்ளைட்டில் சந்தித்தேன்.”
சொல்லி விட்டு ஃபோனை கட் பண்ணி விட்டதாக சீனி அப்புறமாக என்னிடம் சொன்னார்.
“ஏங்க, நான் எங்கே வேணும்னாலும் போவேன். அதைக் கேட்க இவுங்க யாருங்க?” என்று சீனி என்னிடம் கேட்டார்.
“சீனி, அவந்திகாவின் நம்பரை ப்ளாக் பண்ணிடுங்க. பிரச்சினையே இல்லை.”
இன்னும் நிறைய உள்ளது. உங்களுக்கு அலுப்பாக இருக்கும் என்பதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.
ரவிச்சந்திரனுக்கு மெஸேஜ் அனுப்பினேன். வீட்டில் சீனி என்ற பெயரையே எடுக்க வேண்டாம்.
“அப்படி நான் எடுத்ததில்லையே? நிச்சயம் எடுக்க மாட்டேன். கவலை வேண்டாம்.”
முதல் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாகி விட்டது. இப்போது இரண்டாவது பிரச்சினை.
சமீப காலமாக அவந்திகா வாசலில் கோலம் போட ஆரம்பித்திருக்கிறாள். அதை ரவிச்சந்திரன் மிதித்து விடாமல் வர வேண்டும். இதை அவரிடம் எப்படிச் சொல்வது?
கோலம் என்றால் சாதா கோலம் அல்ல. நாங்கள் மைலாப்பூர் அப்பு தெருவில் தனி வீட்டில் இருந்த போது அவர் ஒரு பெரிய தேர்ச் சக்கரம் அளவுக்குக் கோலம் போடுவாள். மாக்கோலம். சுமார் இருபது காகங்கள், பத்துப் பதினைந்து அணில்கள், நூற்றுக்கணக்கான எறும்புகள் என்று கோலம் போட்டு முடிக்கும் வரை சுற்றி வர அமர்ந்து காத்திருக்கும். கோலம் போட்டு முடித்தவுடன் உடனடியாகக் கோலத்தில் அமர்ந்து கோலத்தைத் தின்னும். இங்கே அடுக்குமாடிக் குடியிருப்பு என்பதால் மாக்கோலம் இல்லை. வண்ணக் கோலம்தான். இதோ புகைப்படம்.

இந்தக் கோலத்தின் காரணத்தினாலேயே கடந்த இரண்டு வார காலமாக நான் ஸ்விக்கி மூலமாக எதையுமே வாங்குவதில்லை. ஸ்விக்கிகாரர்கள் ஃபோனைத் தடவிக்கொண்டே வந்து கோலத்தை அழித்து விடுகிறார்கள். அவந்திகா கொலைவெறி ஆகி விடுகிறாள். இதன் பொருட்டு நான் ஸ்விக்கிக்கு முற்பட்ட காலத்தைப் போலவே கடை கடையாக அலைந்து கொண்டிருக்கிறேன். ஒரு ஹேண்ட் வாஷ் தேவையென்றால், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் போட்டால் ஐந்து நிமிடத்தில் வீட்டு வாசலில் பொருளோடு வந்து நிற்பான். ஆனால் கோலத்தை அழித்து விடுவான். இந்தக் கண்றாவிக்காக ஃபோனில் ஓரிரு நொடிகளில் ஆகி விடக் கூடிய காரியத்துக்கு கிலோமீட்டர் கணக்கில் நடந்துகொண்டிருக்கிறேன்.
இப்போது பாடி வாஷ் தீர்ந்து விட்டது. எதிரே உள்ள சூப்பர் மார்க்கெட் பேருக்குத்தான் சூப்பர் மார்க்கெட். போய்ப் பார்த்தால் லைபாயும் ஹமாமும் வைத்திருக்கிறான். அடப்பாவிகளா, ஒரு நூற்றாண்டு ஆகியுமா இன்னமும் லைபாயும் ஹமாமும் ஜீவித்திருக்கின்றன? உயிரே போனாலும் இனி என் வாழ்வில் லைபாயைப் பயன்படுத்தக் கூடாது என்று உறுதி எடுத்திருக்கிறேன். உறுதி எடுத்து ஒரு அம்பது ஆண்டுகள் இருக்கும்.
நாகூர் கொசத்தெருவில் வசித்த போது பதினேழு வயதில் கல்லூரி செல்ல ஆரம்பித்தேன். வீட்டை விட்டு எட்டுக்குக் கிளம்ப வேண்டும். அதுவரை குளத்தில் குளித்துக்கொண்டிருந்தவன் அந்த ஆடம்பரத்துக்கெல்லாம் இனி இடமில்லை என்று வீட்டில் ஒரு குடம் தண்ணீரில் குளிக்க ஆரம்பித்தேன். வீட்டில் குளியலறை கிடையாது. வீடுகளில் குளியலறை என்ற ஒன்று இருக்கும் என்றே அந்த வயதில் எனக்குத் தெரியாது. கொல்லையில் கோமணத்தைக் கட்டிக்கொண்டுதான் குளிக்க வேண்டும். மண் தரை. அடிக்கடி லைபாய் சோப் மண்ணில் விழுந்து விடும். சோப்பு பூராவும் பெரிய பெரிய மண் ஒட்டிக்கொண்டிருக்கும். எடுத்துத் தேய்த்தால் கொரகொரவென்ற மண்ணை எடுத்துத் தேய்ப்பது போல் இருக்கும். சமயங்களில் தோலே கிழிந்து விடும்.
இத்தனை பிரச்சினைக்கு ரவிச்சந்திரனின் வீட்டுக்கே போய் சாப்பிட்டு விடலாம். அண்ணா நகர் கிழக்கு. ஆனால் அதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது.
எனக்கு ஹிந்துக்களின் வீடுகளுக்குப் போய் சாப்பிடப் பிடிக்காது. அவர்கள் விருந்தோம்பல் என்ற பெயரில் சாப்பாட்டைப் பரிமாறுவார்கள். எனக்குப் பரிமாறினால் பிடிக்காது. எனக்கு வேண்டியதை நானேதான் எடுத்துப் போட்டு சாப்பிடுவேன். மற்றவர்கள் பரிமாறினால் அது என் சாப்பாட்டுச் சுதந்திரத்தில் மற்றவர்கள் குறிக்கிடுவது போல் இருக்கும். சொல்லவும் முடியாது. முஸ்லிம்களின் வீடுகளில் சாப்பாடு அவ்வளவையும் மேஜையில் வைத்து விட்டுப் போய் விடுவார்கள். இதுதான் நாகூர் முஸ்லிம்களின் வழக்கம். மற்றவர்களைப் பற்றித் தெரியாது.
பரிமாறுவதில் ஒன்றிரண்டு அல்ல, பல பிரச்சினைகள் உள்ளன. நிறைய குழம்பு ஊற்றி விடுவார்கள். அதற்குத் தனியாக சோறு கேட்டால், சோறு அதிகமாகி விடும். நமக்கு ஒரு அய்ட்டம் பிடிக்காது. முதலில் அதைக் காலி பண்ணலாம் என்று காலி பண்ணினால் அது நமக்கு ரொம்பப் பிடிக்கிறது என்று நினைத்து அதையே வைத்து நம்மைக் காலி பண்ணுவார்கள்.
அதனால் ரவிச்சந்திரன் வீட்டுக்குப் போக முடியாது. ஆனால் வேறு எங்கே போய் சாப்பிடுவது? கையில் சாப்பாடு உள்ளது. சாப்பிட ஓர் இடம் வேண்டும். ம்ஹும். சாத்தியமே இல்லை. துணிந்து ரவிச்சந்திரனையே வரச் சொன்னேன்.
ரவிச்சந்திரன் பாங்கான மனிதர். கோலத்தை அழிக்காமலேயே வந்து அழிக்காமலேயே திரும்பிச் சென்றார்.
அதெல்லாம் இருக்கட்டும். ரவிச்சந்திரன் எனக்கு ஃபோன் செய்து கேட்ட போதுதான் நேற்று சிவராத்திரி என்றே எனக்குத் தெரிந்தது. “நாளை சிவராத்திரி ஆயிற்றே, எடுத்து வரலாமா? எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை” என்றார் ரவிச்சந்திரன். எனக்கும் பிரச்சினை இல்லை என்று சொல்லி விட்டேனே தவிர நேற்று நாள் பிறந்ததும் பயம் வந்து விட்டது. ”சிவராத்திரி அன்னிக்குக்கூட மீனா?” என்று அவந்திகா கேட்டு விட்டால்? ஆனால் அப்படியெல்லாம் கேட்கக் கூடிய ஆள் அல்ல. நல்லவேளை, கேட்கவில்லை.
எனக்கு இன்னொரு பயம் வந்து விட்டது. சிவ பயம். சிவராத்திரி அன்று அசைவம் சாப்பிட்டால் ஏதாவது சிவக்குற்றம் வந்து விட்டால்? ஏற்கனவே நான் பெருமாள் கட்சி.
சீலே தேசம்தான் இந்த பயத்தைப் போக்கியது. சீலே தேசத்தில் எத்தனை பேர் இந்த சிவராத்திரி அன்று அசைவம் சாப்பிட்டிருப்பார்கள்? அவர்களையெல்லாம் சிவன் தண்டிப்பாரா என்ன? சீலே என்பதை உலகம் என்று மாற்றிக் கொள்ளுங்கள்.
இதெல்லாம் கிடக்கட்டும். நேற்று காலை ஒரு கலவரம். சீனியின் பெயரைப் போலவே இன்னொரு பெயருக்கும் வீட்டில் தடை உண்டு. காயத்ரி. அதனால் எனக்குப் பிடித்த காயத்ரி மந்த்ரம் கூட நான் கேட்பதில்லை.
நான் இரண்டு புத்தகங்களுக்குப் பிழை திருத்தம் செய்துகொண்டிருக்கிறேன். ஒரு புத்தகத்தை மென்பிரதியிலேயே பிழை திருத்தம் செய்தேன். அது மிகவும் சிரமமாக இருந்தது. பக்கம் எண், வரி எண், என்ன பிழை, அதை எப்படி மாற்ற வேண்டும் – இதையெல்லாம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைக்க வேண்டும். அலுப்பான வேலை. ப்ரிண்ட் அவ்ட் இருந்தால் பேனாவினால் சுலபமாகக் குறித்து விடலாம்.
காயத்ரியை அழைத்து இரண்டாவது புத்தகத்தை டன்ஸோவில் அனுப்ப முடியுமா என்று கேட்டேன். சரி என்றாள்.
அனுப்புனர் விலாசத்தில் ஸீரோ டிகிரி பதிப்பகம் பெயர்தான் இருக்கும். இது என்ன பர்சனல் விஷயமா?
பிரச்சினை இல்லை.
நேற்று காலை.
டன்ஸோவில் அனுப்ப முடியவில்லை. ரேபிடோவில் அனுப்பியிருக்கிறேன்.
சரி.
ரேபிடோகாரன் ஃபோன் செய்தான். என் தெருவில்தான் இருந்தான். இருந்தாலும் ஒரு பதினைந்து நிமிடம் (கூட்டிச் சொல்லவில்லை, பதினைந்து நிமிடத்துக்கு ஒரு நொடி குறையாது) வழி சொன்னேன். அதெல்லாம் காஃப்கா கதை. காஃப்காவைப் படித்துக் கொள்ளுங்கள்.
வாசலில் அவந்திகாவின் கூச்சல் கேட்டது. “யோவ், என்னய்யா காயத்ரி மேடம் ங்கோயத்ரி மேடம் அனுப்புனாங்கன்னு சொல்றே? யார்யா காயத்ரி மேடம்? மேடமாம் மேடம். யார்ட்ட குடுக்கணும், அதைச் சொல்லு… முதல்லே? வந்துட்டானுங்க காலங்கார்த்தால… பிராணனை எடுக்கிறதுக்கு…”
என்னய்யா இது? யாராவது அனுப்பினவர்களின் பெயரைச் சொல்லி விலாசத்தைத் தேடுவார்களா? அடையாறு காந்தி நகரில் நின்றுகொண்டு காயத்ரி மேடம் அனுப்பின புத்தகம் என்று கூவுகிறான் ஒருத்தன் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்? எனக்கு நடக்கும். எனக்கு நடக்கும்.
இவ்வளவும் எழுதிவிட்டு ரவிச்சந்திரன் எடுத்து வந்த குழம்பும் வறுவலும் எப்படி இருந்தன என்று எழுதவில்லையானால் பாவம் வந்து சேரும். ஒரே வார்த்தை. அற்புதம்.
***
சந்தா/நன்கொடை ஞாபகப்படுத்துகிறேன். வங்கி விவரம் கீழே:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai