தாய்ப்பூனையின் கதறல்
ஆக்ரோஷமாய் அலையுறுகிறது
இழந்த குட்டிகளின் நிழல்
என்னை இருளில் துரத்துகிறது.
மறதியின் மந்திரத்தைத் தேடி
அலைகிறேன்
வைனின் மயக்கத்தில்
வலியை மறக்கலாம் எனப்
பார்த்தால் எனக்கு முன்னே
வெறும் காலிக் குப்பிகள்
கைகளில் கனவைத் தவிர வேறில்லை
இரு குப்பிகளில் மிச்சமிருந்த
சொற்பத் துளிகளை
கோப்பையில் ஊற்றினேன்
அரைக் கிண்ணமே தேறியது.
அப்போதே சொன்னான் கொக்கரக்கோ
பத்துப் பதினைந்து போத்தல்
வாங்கி வை என்று.
இந்த விஷயத்தில் நானொரு
சராசரி இந்தியன்
’இன்று குடிப்போமா?” என்பான் அவன்.
நண்பன் மறுப்பான்,
“என்னை விட்டுவிடு.”
ஆனால், இரவின் எட்டாம் மணியில்,
போத்தல் திறந்தவுடன்,
’எனக்கும் கொஞ்சம்,” என்பான்
அதே நண்பன்
அன்றைய இரவு
நண்பனுக்குக்
குடியே இல்லாமல் போகும்
அப்படித்தான் ஆகிப் போனேன்
நானும்
ராஜாவை அழைத்தேன்—
பதிலில்லை
ப்ரவீனை அழைத்தேன்—
ஒரு நாள் முன்னே சொல்ல வேண்டும் என்றான்
ஸ்ரீராமை அழைத்தேன்
மதுவின் மணமறியாதவன்
கடையில் மது வாங்கியதில்லை
என்றான்
ஒரு குப்பி வைன் இருந்தால்,
தாய்ப்பூனையின் துக்கம்
மறக்கலாம்
அப்போது கொக்கரக்கோ கேட்டான்
’அதுசரி, கல்லறையில் உறங்கும் பிரேதம் என்றாயே?’
’உண்மை என்னை விட்டகன்று
வெகுகாலமாயிற்று,
அறியாயோ நீ?’
என்றேன்.