சிப்கலி


குட்டிகளை சாகக் கொடுத்து
அழுது கொண்டிருந்த
தாய்ப்பூனைக்கு ஆறுதல்
தந்து விட்டுப் படியேறி
வந்தாள்
மோகினிக்குட்டி

எதிர்வீட்டு வைணவன்
என்றுமில்லாதபடி
வாசல் சுவரில்
பல்லி போல் ஒட்டிக்கொண்டிருந்தான்
அவளைக் கண்டதும்
சிப்கலீ என்று கத்தினான்

மோகினியின் யோசனை
பலவாறு சிதறியது

குடியிருப்போர் கூட்டம் ஒன்றில்
ஹிந்தியில் பேசாதீர்
ஆங்கிலமும் தமிழும் மட்டுமே
தெரியுமென்றவன் –
இதுவரை அவளிடம் ஒரு வார்த்தை
பேசியிராதவன் – அவன் ஒரு
இப்போது
சிப்கலி என்கிறானே?
ஏனிந்தக் கூச்சல்?
தரையைப் பார்த்தாள்

ஒரு பல்லி
அசைவை நிறுத்திப்
படுத்திருந்தது

பல்லியென்றால் அவளுக்கு
நடுக்கம்

அதை மிதித்து விடக்
கூடாதென அபயக் குரல்
எழுப்பியிருக்கிறான்
நாலு பூனைக்குட்டிகளை
டெட்டால் ஊற்றிக் கொன்றவன்

மோகினிக்கு பாம்பு கூட பயமில்லை
பல்லியென்றால்
அலறி ஓடி ஊரையே கூட்டி விடுவாள்

எதிர்வீட்டுக்காரனுக்கு பதிலொன்றும்
சொல்லாமல் போடா சுன்னி என
முணுமுணுத்து வந்து விட்டாள்

மறுநாள், கீழே போய்
திரும்பி வந்து கதவைத்
திறந்தவளின் மீது பாய்ந்து
ஓடியது பல்லி
தூசு தட்டுவது போல்
அதைத் தட்டி விட்டுவிட்டு
உள்ளே நடந்தாள்