கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம்…

அன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த சனிக்கிழமை அன்று (13.9.2014) அன்று மாலை புக்பாய்ண்ட் அரங்கத்தில் திரு.பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய மேற்கத்திய ஓவியங்கள் என்ற புத்தகத்திற்கான அறிமுகக் கூட்டத்துக்கு கிருஷ்ணனின் அழைப்பின் பேரில் வந்திருந்தேன்.  கிருஷ்ணனின் இன்னொரு புத்தக அறிமுகக் கூட்டத்துக்கும் சென்றிருக்கிறேன்.  சக எழுத்தாளர்களால் வெறுக்கப்படும் என்னையும் மதித்து தன் நூல் அறிமுகக் கூட்டங்களுக்கு அழைப்பவர் கிருஷ்ணன் என்பதால் அவர் அழைத்தால் மறுப்பு சொல்லாமல் போய் விடுவது என் வழக்கம்.  நான் சமீப காலமாக வேலைப் பளுவின் காரணமாக செய்தித்தாள் படிப்பதில்லை.  தொலைக்காட்சி எந்த நேரத்திலும் பார்ப்பதில்லை.  என்பதால் கிருஷ்ணன் அழைத்திருக்கா விட்டால் அந்த நூல் அறிமுகக் கூட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்காது.

அந்தக் கூட்டத்தில் நீங்களும் டி.எம். கிருஷ்ணாவும் பேசப் போகிறீர்கள் என்று அழைப்பிதழில் பார்த்து எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்.  ஏனென்றால், நான் உங்கள் இரண்டு பேரிடத்திலும் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவன்.  உங்கள் மீது அதீதமாகவே.

மகாநதி வந்தது 1994 இல்லையா?  அப்போது நான் தனியாளாக ஒரு பிச்சைக்காரனாக அலைந்து கொண்டிருந்தேன்.  மகாநதியைப் பார்க்க கையில் ஒரு பைசா கிடையாது.  ஒரு நண்பர்தான் சென்னையைத் தாண்டி புறநகரில் இருந்த ஒரு பாடாவதி தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்.  படம் வந்து நாலைந்து தினங்கள் ஆகியிருந்தன.  படம் பார்த்த அன்றைய தினமே – இல்லை, இரவே – அந்த நண்பரின் சிறிய அறையில் வைத்து மகாநதிக்கு மதிப்புரை எழுதி ஆழ்வார்ப்பேட்டை வந்து கணையாழி அலுவலகத்தைத் தேடிப் பிடித்து அதன் ஆசிரியர் கஸ்தூரி ரங்கனைச் சந்தித்து கட்டுரையைக் கொடுத்தேன்.  தபாலில் அனுப்புவதற்கெல்லாம் நேரம் இல்லை.  ஏற்கனவே 20 தேதி ஆகி விட்டது.  கணையாழியை அச்சுக்கு அனுப்பியிருப்பார்கள்.  நான் நினைத்தபடியே, ”கணையாழி அச்சுக்குத் தயாராகி விட்டதே?” என்றார் கஸ்தூரி ரங்கன்.  பரவாயில்லை, இந்தக் கட்டுரையைப் படித்து மட்டும் பாருங்கள், போதும் என்றேன்.  படித்தார்.  படித்த உடனேயே, இது உடனே வெளிவந்தாக வேண்டும் என்று சொல்லி விட்டு, அச்சுக்குப் போக இருந்த ஒரு தொடர் கட்டுரையைத் தூக்கி விட்டு என் கட்டுரையை வெளியிட்டார்.

அந்தக் கட்டுரையை நீங்கள் கணையாழியில் வெளிவந்த போதே படித்திருக்கலாம்.  அந்தக் கட்டுரை பிரமாதமாக இருந்தது என்று நீங்கள் சொன்னதாக ஒருமுறை உங்கள் நண்பரும் என் நண்பருமான புவியரசு என்னிடம் சொன்னார்.

இதே போல் மகாநதிக்கு முன்பு வந்த குணாவுக்கும் மதிப்புரை எழுதினேன்.  ஒரு நல்ல நட்பு உருவாக இருந்த சந்தர்ப்பத்தில் 1995-இல் குருதிப் புனல்.  அதைக் கடுமையாக விமர்சித்து எழுதினேன்.  ஆனால் அதற்குப் பிறகு வந்த உங்கள் படங்களையெல்லாம் அநேகமாக நான் சிலாகித்தே எழுதி வந்தேன்.  குறிப்பாக, அன்பே சிவம்.  உங்கள் படங்களில் நான் விமர்சித்து எழுதியது குருதிப் புனல், தசாவதாரம்.  மற்ற எல்லா படங்களையும் பாராட்டியே எழுதினேன், சதி லீலாவதி உட்பட.

தராசில் போட்டால் நான் உங்கள் படங்களைப் பாராட்டி எழுதியது விமர்சித்து எழுதியதை விட மிக மிக மிக அதிகமாக இருக்கும்.  என் அளவுக்கு உங்களைப் பாராட்டி எழுதியவர்கள் தமிழில் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்.  ஏனென்றால் – இது ரொம்ப முக்கியம் – ரொம்ப வருஷங்கள் முந்தியே என் பத்திரிகை உலக நண்பர் உங்களைப் பேட்டி எடுக்க வந்த போது உங்கள் மேஜையை நிரப்பிக் கொண்டு Granta வால்யூம்கள் இருந்ததாகச் சொன்னார்.  தமிழ்நாட்டில் Grantaவை சிரத்தையாகப் படிக்கும் ஒரு சிலருள் நாம் இருவரும் அடக்கம் என்று நினைக்கிறேன்.  என் வயது அப்போது என்ன என்று ஞாபகம் இல்லை.  சாவி ஆசிரியராக இருந்த பத்திரிகை ஒன்றில் உங்களுக்குப் பிடித்த பத்திரிகை பிரக்ஞை என்று சொல்லியிருந்தீர்கள்.  அதை நான் எங்கெங்கோ தேடினேன்.  கடைசியில் தஞ்சாவூர் நகர நூலகத்தில் கிடைத்தது.  அதுதான் என் இலக்கிய உலகப் பிரவேசத்துக்கு வழி காட்டிய பத்திரிகையாக அமைந்தது. இந்த வகையில் உங்களை என்றுமே என்னுடைய நட்பு மாடத்தில் வைத்திருந்தேன். இப்போதும் வைத்திருக்கிறேன்.

கடைசியில் சமீபத்தில் இரண்டு ஆண்டுகளாக பத்திரிகையாளரும் உங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவருமான மதனை அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  என் மீது நல்ல எண்ணமும் நட்பு உணர்வும் கொண்ட விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசிலரில் மதனும் ஒருவர்.  அதேபோல் அவருடைய வாசிப்பு குறித்து எப்போதும் அவர் மீது எனக்கு ஒரு ஆச்சரியமும் அன்பும் உண்டு.  அவர் அளவுக்கு வாசித்த ஒருவரை நான் நேர் வாழ்வில் கண்டதில்லை.  அப்பேர்ப்பட்ட மதனே உங்களைப் பற்றி ஆச்சரியத்துடன் சிலாகிப்பார்.  இவ்வளவு படித்த ஒரு மனிதரை நான் சந்தித்ததே இல்லை என்பது மதன் உங்களைப் பற்றி அடிக்கடி சொல்லும் வார்த்தை.  மதன் ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றி உங்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது – அவரே அந்தப் புத்தகத்தைப் படித்ததில்லையாம் – அந்தப் புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்துக் கொடுத்தீர்கள் என்று சொன்னார்.  அதையும் படித்திருக்கிறீர்கள், அதிலிருந்தும் பல விஷயங்களைச் சொன்னீர்கள் என்றார்.  புத்தகத்தின் பெயர் எனக்கு இப்போது மறந்து விட்டது.

மதன் சொன்னார், எப்போதோ நம் வாழ்வில் மதன் என்பவரைச் சந்திக்கப் போகிறோம், அவரிடம் நாம் மிகவும் படித்த ஆள் என்று காண்பித்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஒருவர் படிக்க முடியாது.  படிப்பின் மீது மிகுந்த passion உள்ள ஒருவர், படிப்பின் மீதி தீராக் காதல் கொண்ட ஒருவர் தான் இப்படிப் படிக்க முடியும்; கமல் அப்படிப்பட்டவர்.

எனக்கும் அதே கருத்துதான்.  இன்னொரு விஷயம், சர்வதேச சினிமா.  அநேகமாக Alejandro Jodorowsky-யின் படங்களைப் பார்த்தவர்கள் தமிழ்நாட்டில் இரண்டு பேர் தான் இருப்பார்கள் என்பது என் யூகம்.  அதில் நீங்கள் ஒருவர்.  ஹொடரோவ்ஸ்கி பற்றி நான் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறேன்.    நான் உங்களை எனக்கு மிக நெருக்கமான சஹ்ருதயர் என்று நினைத்து வந்திருப்பதற்கு முக்கியமான காரணம், படிப்பும் சர்வதேச சினிமாவும் மட்டும் அல்ல.  நூற்றுக்குத் தொண்ணூற்று ஐந்து விஷயங்களில் உங்கள் கருத்தே என் கருத்தும்.  உதாரணமாக, குடும்பம், குழந்தை குட்டி பற்றி உங்கள் கருத்தை ஏற்கக் கூடிய ஒரு நண்பர் உங்கள் நண்பர் குழுவில் உண்டா?  ஆனால் குடும்பம் பற்றி உங்கள் கருத்து எதுவோ அதுவேதான் என் கருத்தும்.  அந்தக் கருத்தின்படி தான் நான் வாழ்ந்தும் வருகிறேன்.  மத்திய வர்க்கத்துக்கு உரிய எந்த சமூக நடைமுறைகளையும் என் வாழ்வில் நான் பின்பற்றுவதில்லை.  உங்களைப் போலவேதான்.

இந்த நூற்றுக்குத் தொண்ணூற்று ஐந்துக்கு இன்னொரு உதாரணம், செக்ஸ் தொழிலை தொழிலாக அங்கீகரிப்பது பற்றியது.  இதிலும் நாம் ஒத்த கருத்து உடையவர்களே.  எதற்குச் சொல்கிறேன் என்றால், இதையெல்லாம் ஊரில் யாருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.  ஆனால், உங்கள் மீது இத்தனை அன்பும் நட்புணர்வும் கொண்ட என்னை பி.ஏ. கிருஷ்ணன் நூல் அறிமுகக் கூட்டத்தில் உங்கள் பி.ஆர்.ஓ. நிகில் முருகன் உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  இந்த உலகின் அத்தனை அன்பும் கண்களில் பொங்க நான் உங்களுக்குக் கை கொடுத்தேன்.  நீங்களோ ஒருக்கணம் ஆளவந்தானாகவே மாறி முகத்தைச் சுளித்தபடி கை நீட்டி விட்டு ஆளவந்தான் மாதிரியே இறுக்கமான பாவனையுடன் தலையை இடது பக்கமும் வலது பக்கமும் ரோபோ மாதிரி திருப்பியபடி சென்று விட்டீர்கள்.  என்ன நடக்கிறது என்று தெரியாமல், உங்கள் பின்னாலிருந்து ஒருவர் சாருவைத் தெரியாதா என்று கேட்க, இன்னொருவர் இரண்டு இண்டர்நேஷனல் ஸ்டார்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாதா என்று குரல் கொடுத்தார்.  யார் என்று எனக்குத் தெரியவில்லை.

நீங்கள் அப்படி நடந்து கொண்டது எனக்கா அவமானம்?  அந்த இடத்தில் நின்று கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்த டி.எம். கிருஷ்ணா, பி.ஏ. கிருஷ்ணன் போன்ற அத்தனை பேருக்குமே இது ஒரு அவமானம்தான்.  நாம் படித்த படிப்பு நமக்கு இப்படிப்பட்ட துவேஷத்தையா கற்பிக்கும்?  உங்களைப் பற்றி பாராட்டி எத்தனை கட்டுரைகள் எழுதியிருப்பேன்?  அதெல்லாம் குப்பை.  ஆனால் குருதிப் புனலையும் தசாவதாரத்தையும் விமர்சித்து எழுதியதை மட்டுமே உங்கள் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருப்பீர்களா கமல்?

அச்சகத்திலிருந்து வந்ததுமே அச்சு வாசனை போவதற்கு முன்பே உங்களுடைய நூலகத்துக்குத் தமிழ் நூல்கள் வந்து விடுகின்றன என்பதால் நான் எழுதிய ராஸ லீலா என்ற நாவலை நீங்கள் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.  அந்த நாவலில் 300-ஆவது பக்கத்தில் இந்தக் காட்சி வருகிறது.

குரஸவா இயக்கிய Ran-இல் இப்படி ஒரு காட்சி:

பேரரசன் Hidetora ஒரு பிச்சைக்காரனாக, பைத்தியக்காரனாக அலைந்து கொண்டிருக்கும் போது புயல் அடிக்கும் ஓர் இரவில் அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறான் ஒரு குருடன்.  முன்னொரு காலத்தில் அரசனாக இருந்தவன் அந்தக் குருடன்.  Tsurumaru என்ற பெயருடைய அந்த அரசனின் கோட்டையையும் குடும்பத்தையும் அழித்து நிர்மூலமாக்கி அவன் கண்களையும் குருடாக்கியது ஹிததோராவின் படைகள்.

”பேரரசனே! உன்னை வெறுக்காமலிருக்க என் சகோதரியிடமிருந்து கற்றுக் கொண்டேன்.   ஒரு பேரரசனுக்குரிய மரியாதையை இந்தப் பாழடைந்த குடிசையில் என்னால் உனக்குக் கொடுக்க முடியவில்லை.  அதிர்ஷ்டவசமாக என் சகோதரி என்னிடம் ஒரு புல்லாங்குழலைக் கொடுத்திருக்கிறாள்.  அதை நான் உனக்காக வாசிக்கிறேன்.  அது ஒன்றுதான் இப்போது நான் உனக்கு அளிக்கக் கூடிய சந்தோஷம்.  என் இதயத்திலிருந்து வரும் அன்பு அது…”

சொல்லி விட்டு தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறான் அந்தக் குருடன்.  கிங் லியரிலும் இல்லாத ஒரு இடம் இது.

குரஸவாவின் Ran-ஐ நாம் எத்தனை முறை பார்த்திருப்போம்?  அதிலிருந்து நாம் எதைக் கற்றுக் கொண்டோம்?  அன்புடன் கை கொடுக்கும் ஒருவனை நாலு பார் பார்க்க அவமதிப்பதையா?  அந்த அளவு வெறுக்கத்தக்கவனா நான்?  நேர்மையாக வாழ்வது அவ்வளவு பெரிய குற்றமா?  நான் உங்களுடைய படத்தை மட்டுமா விமர்சித்தேன்?  எந்திரனை விமர்சிக்கவில்லையா?

நேர்மையாக வாழ்வதால் இன்று நான் ஒரு தீண்டத்தகாதவனைப் போல் நடத்தப்படுகிறேன்.  அந்த அவமரியாதையை நான் எல்லா விழாக்களிலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.  இந்த வருடத்தின் துவக்கத்தில் நியூஸ் சைரன் இதழ் தொடங்கப்பட்ட போது என்னை அழைத்திருந்தார்கள்.  போனேன்.  அங்கே ஒரு முன்னாள் அதிகாரி சிறப்புப் பேச்சாளர்.  அவருடைய சமூக விமர்சனக் கருத்துக்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  அவர் எழுத்தை விடாமல் படிப்பவன் நான் என்ற முறையில் கூட்டம் முடிந்ததும் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கை கொடுத்தேன்.  கையை உதறித் தள்ளி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து போனார்.  இதை என் நண்பரும் பார்த்துக் கொதித்துப் போனார்.  பிறகு ஓட்டலுக்கு வெளியே வந்து காருக்காகக் காத்திருந்த போது தெரியாமல் என் பக்கத்தில் வந்து நின்றவர் என்னைப் பார்த்ததும் தீட்டுப் பட்டது போல் நகர்ந்து போனார்.  இதுதான் நவீன தீண்டாமை.  அவருக்கு என் மீது ஏன் இந்தத் துவேஷம் என்று யோசித்தேன்.  அவரைப் பற்றி நான் ஒரு வார்த்தை கூட எழுதியதில்லை.   அப்புறம் ஏன் இந்தத் துவேஷம்?  நான் ஒரு transgressive writer என்ற காரணம் மட்டுமேதான்.  என்னுடைய காமரூப கதைகள் incest-ஐ அடிப்படையாகக் கொண்டது.  அதனால் அவர் அந்தக் கதை எழுதிய என்னையே ஒரு காமக் கொடூரனாக எண்ணியிருக்கலாம்.  தமிழ்நாட்டைப் போல் கலாச்சார சுரணை உணர்வற்ற, இலக்கிய அறிவு இல்லாத philistine சமூகத்தில் இது சகஜமானதே.

சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணன் ஜப்பானிய எழுத்தாளர் முரகாமி பற்றி எழுதியிருந்த சிறிய கட்டுரையைப் படித்தேன்.  முரகாமி கார்டியன் இதழுக்கு அளித்த நேர்காணல் அது.  நீங்களும் எஸ்.ரா.வைப் போலவே கார்டியனில் படித்திருக்கலாம்.  அந்தக் குறிப்பில் எஸ்.ரா. குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் எனக்கு அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.  ஜப்பானின் ஜனத்தொகை 13 கோடி.  அங்கே சமீபத்தில் வெளியான முரகாமியின் நாவல் இரண்டே வாரத்தில் ஒரு மில்லியன் பிரதி விற்றதாம்.   அடக் கடவுளே!  அதை எழுதி விட்டு எஸ்.ரா. இப்படி ஒரு குண்டைப் போடுகிறார்.  தமிழ்நாட்டில் 5 சதவிகிதம் பேர் கூட புத்தகம் படிப்பார்களா என்பது சந்தேகம் என்கிறார் எஸ்.ரா.  எழுத்தாளர்கள் எவ்வளவு வெள்ளந்தியாக இருக்கிறார்கள் பாருங்கள்!  ஐந்து சதவிகிதம் என்றால் எஸ்.ரா.வின் புத்தகமும் என் புத்தகமும் 40 லட்சம் விற்க வேண்டும்.  காலையிலிருந்து கால்குலேட்டரில் கணக்குப் போட்டுப் போட்டு முளை கலங்கி விட்டது.  எஸ்.ரா. பாட்டுக்கு ஐந்து சதவிகிதம் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.  ஜப்பானிலும் சீனாவிலும் ஒரு நாவல் எழுதினால் மில்லியன் கணக்கில் விற்பனை ஆகிறது.  ஆனால் எட்டு கோடி ஜனத்தொகை உள்ள தமிழ்நாட்டில் எங்களைப் போன்ற ‘பிரபல’ எழுத்தாளர்களின் நூல்களே ஆயிரம் ரெண்டாயிரம் தான் விற்கிறது.  அதாவது லட்சத்தில் ஒரு தமிழர் வாங்குகிறார்.  லட்சத்தில் ஒன்று என்றால் நூற்றுக்கு எத்தனை?  மறுபடியும் கால்குலேட்டரை எடுக்க வேண்டும்.  ரொம்பவும் அவலமான நிலைமை.

விஸ்வரூபத்துக்குப் பிரச்சினை வந்த போது பல ரசிகர்கள் உங்களுக்குத் தங்கள் சொத்துப் பத்திரத்தை அனுப்பினார்கள்.  இங்கே ஆயிரம் பிரதி விற்றால் எழுத்தாளர்கள் எப்படி வாழ்வது?  என் சகாக்கள் சினிமாவுக்கு வசனம் எழுதப் போய் விட்டார்கள்.  இது கொடுமை இல்லையா?  உங்கள் தொழில் சினிமா.  அந்த சினிமாவில் மட்டுமே தானே இருந்து கொண்டிருக்கிறீர்கள்?  அதுதானே உங்கள் சந்தோஷம்?  அதுதானே உங்கள் வாழ்க்கை? ஆனால் எழுத்தாளர்கள் வசனம் எழுதித்தான் தங்கள் வயிற்றைக் கழுவ வேண்டும்.  ஆனால் எனக்கோ அந்த வசதியும் கிடையாது.  நான் தான் ஒவ்வொரு படத்தையும் விமர்சித்து எழுதி எல்லோருடைய ஹிட் லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறேனே?  எனவே என் வாசகர்களிடம் பிச்சை எடுத்துத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  ஏன் இந்த இந்த சொந்தக் கதை சோகக் கதையையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால், இங்கே நேர்மையாக வாழ்ந்தால் இதுதான் கதி.  உங்களைப் போன்ற படித்தவர்களும் வெறுப்பை உமிழ்ந்து விட்டுப் போவீர்கள்.

கடந்த 35 ஆண்டுகளில் 50 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  வாழ்வில் சமரசமே செய்து கொண்டதில்லை.  தப்போ சரியோ மனதில் பட்டதை எழுதுகிறேன்.  விளைவு, outcast.  Untouchable.  நீங்கள் என் கையை உதறி விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போனதிலிருந்து இனிமேல் நான் எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும்  கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.  அக்ரஹாரங்களில் கீழ்சாதிக்காரனான எனக்கு என்ன வேலை?  இந்தக் காலத்தில் transgressive writer தான் தீண்டத்தகாதவன், கீழ்ஜாதிக்காரன் என்பதை அந்த முன்னாள் அதிகாரியும் நீங்களும் எனக்குத் தெரிவித்திருக்கிறீர்கள்.  நான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் முரகாமிக்கு வருகிறேன்.  புத்தகம் வெளியாகி இரண்டே வாரங்களில் ஒரு மில்லியன் பிரதி விற்கும் முரகாமி தன்னைப் பற்றி என்ன சொல்கிறார்? I’m a kind of outcast of the Japanese literary world. I have my own readers … But critics, writers, many of them don’t like me.” Why is that? “I have no idea! I have been writing for 35 years and from the beginning up to now the situation’s almost the same. I’m kind of an ugly duckling. Always the duckling, never the swan.”  

ஒரு மில்லியன் பிரதி விற்கும் புத்தகங்களை எழுதும் முரகாமியின் நிலைமையும் என் நிலைமையும் ஒன்றுதான்.  ஒரு முன்னாள் அதிகாரியிடம் போய் உங்கள் எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லி கை குலுக்கினால் அவர் என் கையை உதறி விட்டுப் போகிறார்.  எனக்குப் பிடித்த, என் சஹ்ருதயர் என்று நான் நம்பும் நடிகரிடம் கை குலுக்கினால் அவர் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு போகிறார்.  எவ்வளவு சரியாகச் சொல்கிறார் பாருங்கள் முரகாமி? இது பற்றி மேலும் எழுதுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்:

”முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதிவரும் அவரை ஜப்பானிய இலக்கிய விமர்சகர்களும் சக எழுத்தாளர்களும் காரணமேயில்லாமல் வெறுக்கிறார்கள் என்பதை வலியோடு சுட்டிக்காட்டுகிறார்.

அவருக்கான வாசகர்கள் எப்போதுமிருக்கிறார்கள். ஆனாலும் இலக்கியச் சூழல் அவரை அந்நியனாகவே நடத்துகிறது. துரத்தப்பட்ட மனிதனாகவே உணரச்செய்கிறது. இதிலும் ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சனின் The Ugly Duckling கதை மேற்கோளாகச் சுட்டிக்காட்டப்படுகிறது

உலகமெங்கும் இலக்கியச்சூழல் ஒன்று போலதான் இருக்கிறது போலும், அது தன் சமகாலத்தின் முக்கியப் படைப்பாளியை ஒரு போதும் அங்கீகரிப்பதுமில்லை, ஏற்றுக் கொள்வதுமில்லை. அவன் தன்னை விலக்கபட்ட மனிதனாகவே உணருகிறான். தனது வலியை எழுத்தின் வழியே கடந்து போகிறான், அவனது ஒரே நம்பிக்கை, அவனுக்கான முகம் தெரியாத வாசகர்கள் எப்போதுமிருக்கிறார்கள், எழுத்தை நேசிக்கிறார்கள் என்பதே.”

புத்தகம் வந்து இரண்டே வாரத்தில் ஒரு மில்லியன் பிரதி விற்கக் கூடிய எழுத்தாளரே இப்படிச் சொல்கிறார் என்றால் புத்தகம் வந்து பத்தாண்டுகள் ஆனாலும் ஆயிரம் விற்கும் என்னைப் போன்ற எழுத்தாளனின் நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். உண்மையில் என்னைப் போன்ற ஒரு transgressive எழுத்தாளனை உங்களைப் போன்ற பிரபலங்கள்தான் ஆதரிக்க வேண்டும்.  அன்பு பாராட்ட வேண்டும்.  ஆனால் தமிழ்நாட்டில் கிடைப்பது கன்னத்தில் அறை.

ஏன் இவ்வளவு வருந்தி வருந்தி எதை எதையோ தொட்டுத் தொட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், லௌகீக வாழ்வுக்காக வாசகர்களிடம் பிச்சையும் எடுத்துக் கொண்டு, உங்களைப் போன்றவர்களின் துவேஷத்தையும் சம்பாதித்துக் கொண்டு வாழும் சூழல் சமயங்களில் மன உளைச்சலைத் தருகிறது.

தன் ராஜ்ஜியத்தை அழித்ததோடு அல்லாமல் தன் கண்களையும் குருடாக்கியவனைப் பார்த்து  அந்த மன்னன் சொல்கிறான், ”உன்னை என்னால் வெறுக்க முடியவில்லை.  உனக்கு இந்தப் புல்லாங்குழலின் இசையைப் பரிசாகத் தருகிறேன்…”  இப்படிப்பட்ட படங்களைப் பார்க்கும் உங்களால் அன்போடு உங்கள் கை குலுக்கும் ஒருவனை எப்படி துவேஷத்தோடு பார்க்க முடிகிறது என்பதையே நான் ஆயிரம் முறை கேட்டுக் கொள்கிறேன். அதனால்தான் இந்தக் கடிதத்தையே நான் எழுதுகிறேன்.  தீண்டத்தகாதவனைத் தொட்டு விட்டது போல் பதறித் தன் கைகளை உதறி விலகிப் போன அந்த முன்னாள் அதிகாரிக்கு நான் கடிதம் எழுதவில்லை.  உங்களுக்குத்தான் கடிதம் எழுதுகிறேன்.  ஏனென்றால், நீங்கள் சர்வதேச இலக்கியத்தையும் சினிமாவையும் கற்றவர்.  அந்த ஒரே காரணம்தான்.

அல்லது, நாம் பார்க்கும் சினிமாவும் படிக்கும் அற்புதமான நூல்களும் நம்முடைய ஆயுதசாலையை விரிவுபடுத்திக் கொண்டு போகிறதா?  ஆனால் என்னுடைய ஆயுத சாலையை நான் பூஞ்சோலையாக மாற்றி விட்டேன் கமல்.   ஒவ்வொரு நாளும் நான் வாசிக்கும் புத்தகமும் பார்க்கும் சினிமாவும் அந்தப் பூஞ்சோலைக்குள் மேலும் மேலும் பூச்செடிகளையும் அற்புத விருட்சங்களையும்தான் சேர்த்து விட்டுப் போகிறது.

மேலும், மை டியர் கமல், எம்.கே.டி.யை விடவா ஒரு சூப்பர் ஸ்டார் வந்து விடப் போகிறார்?  அவர் பெயர் இன்று யாருக்காவது தெரியுமா?  மக்கள் தங்களை சந்தோஷப்படுத்துபவர்களை சீக்கிரம் மறந்து விடுகிறார்கள்.  ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எழுத்தாணி பிடித்தவனை மக்கள் மறப்பதில்லை.  அவன் அந்த மக்களுடைய நினைவிலி மனதில் சென்று தங்கி விடுகிறான்.  அந்த மனம் அந்த நினைவை தலைமுறை தலைமுறையாக தனது சந்ததிகளுக்குக் கடத்திக் கொண்டே இருக்கிறது.

இனிமேல் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.  அதையும் மீறி தவிர்க்க முடியாமல் எங்காவது தங்களைச் சந்தித்தால் மீண்டும் தங்களிடம் வந்து இந்த உலகத்தின் அன்பையெல்லாம் கண்களில் தாங்கி உங்களுக்குக் கை குலுக்குவேன்.  அப்போதும் நீங்கள் முறைத்துக் கொண்டு போனால் இதுபோல் கடிதம் எழுத மாட்டேன்.  அவ்வளவுதான்.  மற்றபடி உங்கள் மீதான என் அன்பும் நட்புணர்வும் போகாது.  ஏனென்றால் அது கூட என் சுயநலம்தான்.  யார் மீதாவது கோபம் கொண்டால் என் ரத்த அழுத்தம் அதிகரித்துப் பின் மண்டையில் வலிக்கிறது.  அதே சமயம் யாரைப் பற்றியாவது அன்பாக எண்ணினால் ரத்த அழுத்தம் சம நிலைக்கு வந்து மனம் லேசாகி நாமே ஒரு பட்சியைப் போல் பறப்பது செல்வதாக உணர்கிறேன்.  வாழ்வையே  உல்லாசமாக்கி  விடுகிறது அன்பு.  அந்த ஒரே சுயநலத்தால்தான் நான் அனைவரின் மீதும் அன்பு செலுத்தத் தலைப்பட்டேன்.

I love you Kamal.

Very affectionately,

சாரு நிவேதிதா.

மைலாப்பூர்

20.9.2014.

பின்குறிப்பு: கமல், மீண்டும் பாருங்கள், நான் உங்களுக்கு இப்படி ஒரு கடிதம்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  உங்களுக்கு இதைப் படித்து என் மீது மேலும் கோபம் வரலாம்.  ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.  மற்ற எழுத்தாளர்களாக இருந்தால் ‘நான் கமலைச் சந்தித்து கை குலுக்கினேன்.  அவரது கைகளிலிருந்து அன்பு பெருக்கெடுத்து ஓடியதை நான் உணர்ந்தேன்’ என்று எழுதுவார்கள்.  ஆனால் நம்முடைய ஆசான் பாரதி அல்லவா?  அவன் நமக்கெல்லாம் அப்படிச் சொல்லித் தரவில்லையே?  அதனால்தான் மீண்டும் இப்படி ஒரு கடிதம் எழுதி விட்டேன்.

 

 

 

 

 

Comments are closed.