மாண்டலின் ஸ்ரீனிவாஸ் – அஞ்சலி

அன்புள்ள சாரு,
இன்று காலை கர்னாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தேன். அந்த வீடே மிகவும் அமைதியாக இருந்தது. மக்கள் வந்து கொண்டே இருந்தனர். ஆனால் சிறிதும் குழப்பம், கூச்சல் ஒன்றுமே இல்லை.
இதனைப் பார்க்கும்போது பாலுமகேந்திராவின் சாவு தான் நினைவுக்கு வந்தது. ஒரு நாள் முழுவதும் ஒரு இடத்தில் கூச்சல், குழப்பம் நிலவ முடியும் என்று அன்று தான் பார்த்தேன். இத்தனைக்கும் பாலு மிகவும் அமைதியான, அன்பான மனிதர். மாண்டலின் ஸ்ரீனிவாசும் அப்படியே. இருவருமே தத்தம் கலைகளில் ஜீனியஸ். இருவருமே மேற்கில் உருவான ஒரு கருவியை நம் ஊரில் உன்னதமான கலைப் பொருளாக மாற்றியவர்கள். இருவருக்குமே 40 வருடம் அனுபவம். ஆனால் பாலுவின் சாவில் மோசமான இரைச்சல். ஸ்ரீனிவாசின் சாவில் அமைதி. ஒரு தியானம் செய்யும் கூடம் போல இருந்தது. It was so solemn.
இதற்குக் காரணம் புரியவில்லை. இருவரின் துறை தான் இந்த வேற்றுமைக்குக் காரணமா? அல்லது அவர்களுடன் வாழ்ந்த மக்களா? அவர்களது மாணவர்களா? புரியவில்லை. பாலுவின் சாவு வீடு, ஒரு பரபரப்பான கடற்கரையில் திடீரென்று கரை ஒதுங்கிய ஒரு திமிங்கலத்தைப் பார்ப்பதற்குக் கூடிய கூட்டம் போலவே இருந்தது.
நீங்கள் ஐரோப்பியர்கள் பற்றி எழுதுவதை ஆச்சரியத்துடன் படித்திருக்கிறேன். சென்ற மாதம் ஒரு நாள் பாரிஸ் நகரத்திற்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கு இரவில் மெத்ரோவில் சென்று கொண்டிருந்தபோது ஒரு நிறுத்தத்தில் ஒரு நபர் சில கனமான இசைக்கருவிகளுடன் ஏறினார். 2 நிமிடங்களில் அவை எல்லாவற்றையும் அடுக்கி வைத்து அற்புதமாக வாசிக்கத் தொடங்கினார். அருகில் இருந்தோரிடம் விசாரித்தேன். அந்த ஆள் பிச்சைக்காரன் என்றும் அது Accordion கருவி என்றும் சொன்னார்கள். அந்த நபர் பல நிறுத்தங்களைத் தாண்டி அற்புதமாக, கொண்டாட்டமாக வாசித்துக் கொண்டே இருந்தார். யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஒரே ஒரு பெண்மணி மட்டும் அவர் முன்னால் இருந்த கிண்ணத்தில் ஒரு நாணயத்தைப் போட்டார். அப்போது மணி இரவு 11:30 இருக்கும். பின்னர் அந்த நபர் இறங்கும் முன் அனைவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே “Merci… Merci… Merci beaucoup” என்று சொல்லிக் கொண்டே இறங்கினார். வேகமாக தனது கருவிகளைத் தள்ளிக் கொண்டு அடுத்த மெத்ரோவில் ஏறினார். அவரது டீ-சர்ட் வியர்வையில் நனைந்து போய் இருந்தது. அவரும் மிகவும் வறுமையில் இருக்கும் ஆள் தான். ஆனால் அவரிடம் இருந்த அன்பும், பண்பும், இங்கு வாழ்நாள் முழுவதும் அதனை போதித்த ஒரு ஆசானின் மாணவர்களிடம் இல்லாமல் போனதேன்?
பாலுவின் இறுதிச் சடங்கை நினைத்தால் வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது. Definitely Balu deserved a better end.
அன்புடன்,
மஹேஷ் ராகவன்

Comments are closed.