ஒரு சந்தோஷமான கடிதம்…

அன்புள்ள சாருவுக்கு,

அன்புள்ள சாரு,
தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மூன்று  தினங்களுக்குப் பின்பே அறிந்தேன். நிஜமாக பெங்களூரிலிருந்து சென்னை வந்து பார்க்கவே தீர்மானித்திருந்தேன். அடுத்த நாள்  என் மகன் உடல் நலமின்றி ICUவில் சேர்க்கப்பட்டிருந்தான். ஒரு வாரம் கழித்தே discharge செய்யப்பட்டான். இருப்பினும் நிறைய நண்பர்கள் உங்களை நன்கு கவனித்துக்கொண்டதை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன். தாங்கள் நலமாக வீடு வந்து சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
தங்களது அந்திமழை கேள்வி பதிலில் தாங்கள் “Atlas shrugged” பற்றி பதில் அளித்திருந்தது கண்டேன். Ayn Rand குறித்து உங்களிடம் கேட்க வெகு நாட்களாய் நினைத்திருந்தேன். உங்கள் நண்பர் ராகவன் உங்களது கேள்விகள் Francisco D’Anconia வின் பேச்சைப்போல இருந்ததாக சொன்னதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு Atlas shrugged-இன் protagonist John Galt உங்களைப் போல என்று சமயங்களில் தோன்றும். அக்கதையில் John Galt அமெரிக்காவின் அன்றைய சிறந்த மூளைகளை சராசரிகளிடமிருந்தும் போலிகளிடமிருந்தும் பிரித்து ஒரு தனி ஊரை உருவாக்குவான். நீங்களும் உங்கள் எழுத்துகள் மூலமாக அதையே செய்கிறீர்கள். உங்கள் எழுத்தை படித்தவன் எவனும் mediocre and pulp எழுத்துகளை வெறுக்க .ஆரம்பித்து விடுவான். அதன் பிறகு படிக்கும் எந்த புத்தகத்திலும் அந்த வீரியத்தை எதிபார்ப்பான். சிறுமையைக் களைய முற்படுவான். புத்தகம் மட்டுமின்றி இசை மற்றும் சினிமாவிலும் நல்ல படைப்பை மட்டுமே நாடும் அவனது மனம். (உங்கள் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்த பின்னர்  நான் TV பார்ப்பதையே நிறுத்தினேன்.)
நீங்கள் நீடூழி வாழ அரங்கனை பிரார்த்திக்கிறேன்!
ராமசாமி
அன்புள்ள ராமசாமி,
தங்களின் அன்பான கடிதத்துக்கு நன்றி.  ஜனவரி 5-ஆம் தேதி அன்று தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் நடைபெற இருக்கும் எக்ஸைல் (1&2) வெளியீட்டு விழாவுக்கு அவசியம் வந்து விடுங்கள்.
அட்லஸ் ஷ்ரக்ட் பற்றி இவ்வளவு கேள்விப் படுவதால் அதைப் படிக்கத்தான் வேண்டும் என்று நினைக்கிறேன்… பார்ப்போம்.  இளம் பிராயத்தில் இர்விங் வாலஸ் போன்றவர்களைப் படித்திருக்கிறேன்.  இப்போது கனமான விஷயங்களைப் படிக்கவே மனம் அவாவுறுகிறது.
சாரு

Comments are closed.