எக்ஸைல் வெளியீட்டு விழாவுக்கு யாரை அழைப்பது என்று குழப்பமாக இருந்தது. நடிகர்களில் படிக்கக் கூடியவர் ஒரே ஒருவர். அவர் என்னை எதிரியாக நினைப்பவர். நடிகை பற்றிய பேச்சே இல்லை. யாருக்கும் தமிழே தெரியாது. பிரபலங்களை அழைக்கலாம் என்றால் என் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடுகிறார்கள். இருக்கும் இரண்டொருவரையும் என் ஒவ்வொரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியிலும் அழைத்தாகி விட்டது. அவர்களையே திரும்பத் திரும்ப அழைக்க முடியாது. வாலியும் போய் விட்டார்.
தருண் தேஜ்பாலை அழைக்கலாம் என்றார் அராத்து. தருணுடன் தொடர்பு விட்டுப் போய் ஆறு மாதம் ஆகிறது. அவன் ஃபோன் நம்பரை மாற்றி விட்டான். நானும் ஃபோன் நம்பரை மாற்றி விட்டேன். அவன் மகள் டியாவைத் தொடர்பு கொண்டால் அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது. (அப்புறம் தான் தெரிந்தது அதே எண் தான் மாற்றவில்லை என்பது. நான் தான் தவறாக அழைத்திருக்கிறேன்.) கடைசியில் டியாவுக்கு மின்னஞ்சல் போட்டு இன்று தருணைப் பிடித்து விட்டேன். அவனும் பல முறை என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறான். சந்தோஷமாக வருகிறேன் என்று சொல்லி விட்டான். ஜனவரி 5 மாலை தருண் தேஜ்பால் எக்ஸைல் 1&2 நாவலை வெளியிடுகிறான். பெற்றுக் கொள்பவர் ஒரு பிரபலமான வட இந்திய நடிகை. அவர் ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்தவர். என் ரசிகை. ஐரோப்பிய இலக்கியத்தில் மூழ்கித் திளைத்தவர். உங்களுக்கெல்லாம் மிகவும் தெரிந்தவர். முக்கியமாக அவர் ஒரு புத்திஜீவி. dare devil நடிகை. பானு ரேகா ரேஞ்சில் நினைத்து விடாதீர்கள். என் வாசகர்களின் வயது முப்பதுக்குள்தான் இருப்பதை கவனித்திருக்கிறேன். நடிகையின் வயது 30. விரைவில் பெயரைச் சொல்கிறேன்.