கொண்டாட்டம்

நான் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை என்றாலும் டிசம்பர் 18-ஆம் தேதியை நண்பர்களுடன் வெளியூரில் கொண்டாடுவது வழக்கம்.  அது என் பிறந்த நாள்.  இந்த முறை ஸ்ரீலங்கா அல்லது லங்காவி செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன்.  ஆனால் அவந்திகா ஈடுபட்டு வரும் Eck என்ற ஆன்மீக அமைப்பின் ஆண்டு விழா டிசம்பரில் ஹைதராபாதில் நடக்க உள்ளது.  அவந்திகா அதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால் டிசம்பர் மாதம் மட்டும் வெளியூர் செல்லாதே என்று என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.  கடந்த 20 ஆண்டுகளாக நினைத்த நேரத்தில் நினைத்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன்.  எந்தத் தடையும் இருந்ததில்லை.  நாளை காலை ஆறு மணிக்குக் கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டு ஒரு வாரம் வெளியூரில் இருந்து விட்டு வருவேன்.  இப்போது அவள் முதல் முதலாக என்னிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதால் டிசம்பரில் என் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன்.  பப்பு, ஸோரோ இல்லாவிட்டால் நானும் சுதந்திரமாகக் கிளம்பி விடுவேன்.  அவை இரண்டும் கைக்குழந்தைகள் மாதிரி.  கவனித்துக் கொள்ள வேண்டும்.  முதல் முதலாக சுதந்திரம் தடைப் பட்டது போல் உணர்கிறேன்.  ஜனவரியிலும் வெளியூர் போக முடியாது.  முதல் வாரம் எக்ஸைல் வெளியீட்டு விழா.  அடுத்த வாரம் புத்தகக் கண்காட்சி.  (ஆனால் புத்தகக் கண்காட்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றுகிறது.  கையெழுத்துப் போட 5000 ரூ. கட்டணம் என்று சொல்லி விட்ட பிறகு நான் அங்கே போய் என்ன பயன்?  ம்ஹும்…  ஜெகா போன்ற நண்பர்களைச் சந்திக்கலாம்.  அவர்கள் புத்தகக் கண்காட்சிக்காகவே வெளிநாட்டிலிருந்து இங்கே வருகிறார்கள்.)   ஆக, ஜனவரி கடைசி வாரத்தில் தான் இஸ்தம்பூல் போக வேண்டும்.  இஸ்தம்பூல் போக என்னுடன் யாரும் வருகிறீர்களா?  வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து இஸ்தம்பூல் வந்து விடலாம்.  தனியாகச் சுற்றுவது கொஞ்சம் அலுப்பூட்டு விஷயம்தான்.

ஒயினும் ரெமி மார்ட்டினும் அருந்துவதை நிறுத்தி விட்டேன்.  அதற்கும் இதயத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று மருத்துவர் சொன்னாலும் இதயத்தில் பிரச்சினையை வைத்துக் கொண்டு மது அருந்துவது எனக்கு unethical-ஆகத் தோன்றுகிறது.  மதுவை நிறுத்தி விட்டதால் சில நஷ்டங்கள் எனக்கு உண்டு.  உதாரணமாக, ராஸ லீலா கதைகளை மது அருந்தியபடியே தான் கேட்டேன்.  இல்லாவிட்டால் அது 300 பக்கம்தான் வந்திருக்கும்.  ஒரு மலேஷிய போலீஸிடம் ஒரு இரவு முழுவதும் போலீஸ் கதைகள் கேட்டேன்.   ஒரு பாரில்தான் அந்த சம்பாஷணை நடந்தது.  மது அருந்தாமல் அந்தக் கதைகளைக் கேட்டிருக்க முடியாது.  நான் அருந்தவில்லை; நீங்கள் அருந்துங்கள் என்றால் அவருக்குக் கொஞ்ச நேரத்திலேயே சலிப்பாகி இருக்கும்.

ஆனாலும் நஷ்டத்தை விட எனக்கு லாபமே அதிகம் என்று தோன்றுகிறது.  கதை சொல்பவர்களை நான் பகலில் ரெஸ்டாரண்டுகளில் சந்திக்க ஆரம்பித்து விட்டேன்.  இதில் ஒரு sadist pleasure வேறு கிடைப்பது செம ஜாலியாக இருக்கிறது.  உதாரணமாக, மலேஷியா சுல்தான் என்னை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்பு கொண்டார்.  ஸாராவில் சந்திக்கலாமா என்றார்.  வழக்கமாக அங்கே தான் நாங்கள் சந்திப்பது வழக்கம்.  மாலை ஏழு மணிக்குச் சந்தித்தால் நள்ளிரவு இரண்டு மணி வரை போகும் பேச்சு.  ஸாரா சென்னையில் உள்ள ஸ்பானிஷ் பப்.  விதவிதமான காக்டெய்ல் கிடைக்கும்.

நான் இப்போது இரவில் பழம் மட்டுமே சாப்பிடுகிறேன்.  மகாமுத்ராவில் சந்திக்கலாம் என்றேன்.  (ஈஷா உணவு விடுதி) மிரண்டு போனார்.  கடைசியில் வந்தார்.  கூடவே ஒரு இயக்குனரும் ஒரு நடிகரும் வந்தார்கள்.  மகாமுத்ராவிலேயே அமர்ந்து மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  அவர்களுக்குப் பத்திய உணவு.  எனக்குப் பழங்கள்.  செம குஷியாக இருந்தது.  பச்சையான sadism.

இதில் ஏராளமான அனுகூலங்களைப் பார்க்கிறேன்.  தாய்லாந்து போனால் தினமும் தண்ணி.  தினமும்.  வெளிநாடு போவது தண்ணி அடிப்பதற்கா என்று உள்ளுக்குள் பலமுறை கேட்டுக் கொண்டதுண்டு.  இனிமேல் அந்த நேரமெல்லாம் மிச்சமாயிற்றே?  கொண்டாட்டங்களை படிப்பு, இசை, சினிமா என்று மாற்றிப் போட்டு விட்டேன்.  பெரும் அதகளமாக இருக்கிறது.  நான் எதற்குமே அடிமையானது இல்லை.  அதிலும் மது எனக்குத் துச்சம்.  அவந்திகா கூட ஒயின் சாப்பிடு; நீ ராப்பகலாக எழுதுவதால் உன் மன ஓய்வுக்கு அது தேவைப்படும் என்றாள்.  மறுத்து விட்டேன்.  ஒயின் குடித்தால் நான் மது அருந்துபவன் என்று ஆகி விடும்.  நண்பர்களின் வற்புறுத்தலையோ விருந்துகளையோ மறுக்க முடியாது.  தொடுவதே இல்லை என்றால் விட்டு விடுவார்கள்.

இசையை விட ஒரு போதை இருக்கிறதா என்ன?

எனவே டிசம்பர் 18 அன்று சென்னையிலேயே ஒரு நல்ல இடத்தில் நண்பர்களை சந்திக்கலாம் என்று இருக்கிறேன்.  இடத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.  இந்த வார இறுதியில் கோவை வருகிறேன்.  ஜனவரி 5 எக்ஸைல் வெளியீட்டு விழாவுக்கான ஆய்வுக் கூட்டம்.  கலந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

charu.nivedita.india@gmail.com