அப்படியானால் நாங்கள் நடத்துவது எழவு விழாவா?

இன்று காலையில் ஜெயமோகன் ப்ளாகில் ஜடாயு என்பவர் ஸ்வராஜ்யா பத்திரிகையில் எழுதியிருந்ததை எடுத்துப் போட்டிருப்பதைப் படித்ததும் என் சாவுக்கு தமிழ் இலக்கிய உலகில் நிலவும் பொய்யும் பித்தலாட்டமும்தான் காரணம் என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கி விடலாம் என்று நினைத்தேன்.  ஆனாலும் மரணத்தையும் தற்கொலை உணர்வையும் மன உளைச்சலையும் சந்தோஷத்தையும் மற்ற எல்லா எழவையும் கூட எழுத்தின் மூலமாக மட்டுமே நான் கடந்து கொண்டிருப்பதால் அந்தத் தற்கொலை முடிவை ரத்து செய்து விட்டு இந்த எழவுக் குறிப்பை எழுதுகிறேன்.  ஜடாயு ஸ்வராஜ்யா இதழில் எழுதிய ஒரு பித்தலாட்டமான கட்டுரையைப் படித்த போது அதை நான் பெரிதாக நினைக்கவில்லை.  ஆனால் என் இளைய சகோதரன் என்று நான் நினைக்கும் ஜெயமோகன் அதை எடுத்துத் தன் ப்ளாகில் போட்டிருந்த போது அதை என்னால் உதாசீனப்படுத்த முடியவில்லை.  ஜடாயு என்பவர் எழுதிய அந்தக் குறிப்பு இது:

The book release event, graced by  Tamil literary legends like Ashokamitran and Nanjil Naadan and celebrities Kamal Hassan and Ilayaraja and a large number of enthusiastic readers was unprecedented, in a way.  Unusual in the sense that serious Tamil literature and its authors have never been celebrated in such grand popular events in Tamil Nadu in the past. Given the general cultural climate of Tamil Nadu, dominated by petty prejudices, ideological hate mongering of Dravidian and leftist camps, recognitions for the mediocre and insults to the truly deserving and  ‘mass’ Tamil cinema,  it is heartening to see such a buzz around this great literary phenomenon.

மேற்கண்ட குறிப்பில் ஜடாயு unprecedented என்ற வார்த்தையைப் போடுகிறார்.  அதாவது, இதுவரை நடக்காதது.  முன்னுதாரணம் இல்லாதது.  அப்படியானால் என் புத்தக வெளியீட்டு விழாவை  2000 பேர் அமரக் கூடிய மிகப் பிரம்மாண்டமான காமராஜ் அரங்கில் நடத்தினார்களே என் வாசகர் வட்டத்தினர், அது இலக்கிய விழா இல்லையா?  எழவு விழாவா?  ஒருமுறை அல்ல; இரண்டு முறை நடத்தியிருக்கிறோம்.  இப்போது ஜனவரியில் மூன்றாவது முறையாக நடத்த இருக்கிறோம்.

காமராஜ் அரங்கில் ஒரு முறை உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட என் நூல்களின் வெளியீடு நடந்தது.  ஒருமுறை கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட எக்ஸைல். விஷயம் என்னவென்றால், காமராஜ் அரங்கில் இரண்டு முறை விழா நடத்தினாலும் அது பற்றிய செய்தி தினமலர் தவிர வேறு எந்தப் பத்திரிகையிலும் வரல்லை.  வழக்கமாக நடப்பது போலவே முழுமையான இருட்டடிப்பே நடந்தது.   இப்போது ஜடாயு செய்திருப்பது முழுமையான annihilation.   அதனால்தான் இந்த annihilation-க்கு எதிராக நாமே தற்கொலை செய்து கொண்டால் என்ன என்று தோன்றுகிறது.  ஏனய்யா, 2000 பேர் அமரக் கூடிய ஒரு மகா பிரம்மாண்டமான அரங்கத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவை எனக்கு முன் எந்த எழுத்தாளராவது நினைத்துப் பார்த்திருக்கிறார்களா?  பார்க்கத்தான் முடியுமா?

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான விழாக்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் நடத்துவார்கள்.  அது அமைப்பு சார்ந்த விஷயம்.  லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நெரூதா போன்றவர்களின் கவிதை வாசிப்புக்கு நகர மையத்தில் 3000 பேர் கூடுவது வழக்கம்.  அதுவும் கட்சி சம்பந்தப்பட்டதுதான்.  ஆனால் எந்த அமைப்பும் சாராத ஒரு தனி எழுத்தாளனுக்கு காமராஜ் அரங்கில் இரண்டு முறை புத்தக வெளியீடு நடத்துவது உலக சாதனை.  உலகில் எங்கேயும் இப்படி நடந்ததில்லை.  எஸ்.ரா. ரஜினியை அழைத்துத்தான் காமராஜ் அரங்கில் விழா நடத்தினார்.  இப்போது வெண்முரசு விழாவும் கமல்ஹாசனை அழைத்துத்தான் நடத்தப்படுகிறது.  ஆனால் நான் இந்திரா பார்த்தசாரதியை அழைத்து நடத்தினேன்.  இ.பா. காமராஜ் அரங்கில் தனக்கு முன்னே இருந்த பிரம்மாண்டமான வாசகர் திரளைப் பார்த்து பிரமித்துப் போய் “இப்படி ஒரு இலக்கிய விழாவில் என் ஆயுளில் கலந்து கொண்டதில்லை” என்றார்.  காமராஜ் அரங்கம் எவ்வளவு பெரியது என்று எல்லோருக்கும் தெரியும்.  இந்த ஆண்டும் கூட  4000 பேர் அமரக் கூடிய பலகலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் தான் புத்தக வெளியீட்டை  நடத்தலாம் என்று இருந்தோம்.  ஆனால் கட்டணம் 5 லட்சம் என்பதால் நடத்த முடியவில்லை.   மீண்டும் மூன்றாவது முறையாக காமராஜ் அரங்கில் நடத்துகிறோம்.

யாரும் யாரையும் புகழட்டும்.  ஆனால் அடுத்தவனை annihilate செய்யக் கூடாது இல்லையா?  அ.மி. எழுதினார், ஜெ. மாதிரி படித்த ஆள், சிந்திக்கக் கூடிய ஆள் தமிழில் யாருமே இல்லை என்று.  வயதானவர் என்று கூட பார்க்காமல் சாவுற காலத்துல சங்கரா சங்கரான்னு சொல்லாம என்னய்யா உளறுகிறாய் என்று எழுதினேன்.  என்ன தப்பு?  ஜெ. தான் ஒரே ஆள் என்றால் நான் எல்லாம் என்ன தூக்கு மாட்டிக் கொண்டு சாவதா?  பலருக்கும் ஆதர்சமாக இருந்த அந்த மூத்த எழுத்தாளர் இப்படித்தான் செத்துப் போயிருப்பாரோ என்று இப்போது சந்தேகப்படுகிறேன்.    பாராட்டுங்கள்.  ஏன் அடுத்த எழுத்தாளனைக் கொன்று விட்டு அவனுடைய எலும்பை எடுத்து ஜெயமோகன் கழுத்தில் மாலையாகப் போடுகிறீர்கள்?  ஜெ…  இது கொஞ்சமும் நன்றாக இல்லை.
நான் ஒரு transgressive எழுத்தாளனாக இருப்பதால் எனக்கு சமூகத்தில் கிடைத்து வரும் அவமரியாதை பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இப்போது என் பதிப்பாளரான பத்ரியே பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
”விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட ஆர்வலர்களின் உழைப்பு பிரமிக்கவைத்தது. இவ்வளவு சிறப்புடன் தமிழில் வேறு எந்த எழுத்தாளருக்கும் அவருடைய வாசகர்கள் விழா நடத்த முடியுமா என்பது சந்தேகமே.”
முதல் வாசகம் பிரச்சினை இல்லை.  இரண்டாம் வாசகத்தை நானும் என் வாசகர்களும் கடந்த பத்து ஆண்டுகளாக பொய் என்று நிரூபித்திருக்கிறோம்.  காமராஜ் அரங்கம் நிரம்பி வழிய விழா நடத்துவது நினைத்துப் பார்க்கக் கூடியதே அல்ல…   அதனால்தான் சொல்கிறேன்.  என்னுடைய பதிப்பாளருக்கே கூட நான் காமராஜ் அரங்கில் நடத்துவது இலக்கிய விழாவாகத் தெரியவில்லை, எழவு விழாவாகத் தெரிகிறதோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.   ஏனென்றால், காமராஜ் அரங்கில் நடந்த இரண்டாவது புத்தக வெளியீட்டு விழா பத்ரி சம்பந்தப்பட்டது.  எக்ஸைலை வெளியிட்டவரே அவர்தான்.  ஆக, அதெல்லாம் மனதில் பதியவில்லை.  ஏனென்றால், நாங்கள் இலக்கியவாதிகள் அல்ல; குடிகாரர்கள்.  நாங்கள் நடத்துவது இலக்கிய விழா அல்ல; எழவு விழா!  இப்படித்தான் என் பதிப்பாளரின் மனதிலேயே கூட பதிந்திருக்கிறதோ என்று இப்போது நான் சந்தேகப்படுகிறேன்…
நான் யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  யாரையும் என் எழுத்து புண்படுத்தக் கூடாது என்று நான் உறுதி மொழி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனாலும் சில உண்மைகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது.  அதற்காக உங்கள் அனைவரிடமும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்…
இது மட்டும் அல்ல;  கடந்த பத்து ஆண்டுகளாக என் புத்தக வெளியீட்டு விழாக்கள் மிகப் பிரம்மாண்டமான அளவில் தான் நடந்து வருகின்றன.  ஃபில்ம் சேம்பரில் நடந்த ஒரு விழாவில் 500 பேர் திரும்பிச் சென்றார்கள்.  100 பேர் நின்று கொண்டிருந்தார்கள்.  அதை மனதில் வைத்துத்தான் காமராஜ் அரங்கில் வெளியீட்டு விழாக்களை நடத்த முடிவு செய்தேன்.  இது மட்டும் அல்ல; உயிர்மையின் புத்தக வெளியீட்டு விழாக்கள் கடந்த பல ஆண்டுகளாகவே பிரம்மாண்டமான கூட்டத்தையே வரவழைத்துக் கொண்டிருக்கின்றன.  அவர்களுக்கு இப்போது நான் ஆகாதவன் என்றாலும் இதை நான் சொல்லித் தான் ஆக வேண்டும்.
எனவே ஜெயமோகன் ரசிகர்களே, நீங்கள் ஜெ.வைக் கொண்டாடுங்கள்.  தப்பு இல்லை.  என்னையும் சக எழுத்தாளர்களையும் கொலை செய்து அவர்களின் எலும்பு மாலையை எடுத்து உங்கள் எழுத்தாளருக்கு அணிந்து மகிழாதீர்கள்.  அது அவர் கூறும் அறத்துக்குப் புறம்பான செயல்.
ரத்த அழுத்தம் 180 என்ற நிலையில் எழுதுவதால்எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்…
சாரு

Comments are closed.