அன்புள்ள சாரு,
வணக்கம். எக்ஸைல் 2 வெளியீடு குறித்தும், தங்களது உடல் நலமடைந்து வருவது குறித்தும் மகிழ்ச்சியாக உள்ளது. எக்ஸைல் 2 புத்தகம் வெளியிடும் நாள் பற்றித் தாங்கள் பதிவிட்டதில் இருந்து கொண்டாட்ட மனநிலையில் தான் இருக்கிறேன். எப்பொழுதும் எக்ஸைல் 2 புத்தகத்தின் நினைப்பாகவே உள்ளது. எந்த அளவிற்கு அதன் தாக்கம் இருக்கிறது என்றால், நேற்று வகுப்பில் ஜனவரி மாதத்தில் ஒற்றுமை உணர்வின் அடிப்படையில் கொண்டாட இருக்கும் நிகழ்ச்சி எது என்ற ஆசிரியரின் கேள்விக்கு எக்ஸைல் 2 எனக் கத்தி விட்டேன். அது ஏதோ வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சந்திப்பாம். சொல்லவே கூடாத கெட்ட வார்த்தை எதையோ சொல்லிவிட்டது போல் பார்த்தார்கள். உண்மையில் நான் எதைப் பற்றிச் சொன்னேன் என்று கூட அவர்களுக்குத் தெரியாது. எக்ஸைல் 2 விழாவிற்கு பணம் எடுத்து வைத்திருந்த பொழுது, இதற்கெல்லாமா பணம் தருவாய் எனக் கேட்டவர்கள் தான் அவர்கள். எப்படி இருந்தாலும் நான் சொன்ன பதில் கூட சரி தானே. சாரு வாசகர்கள் என்ற ஒற்றுமை உணர்வினால் ஒன்று சேர்ந்து நடத்தும் திருவிழா தானே எக்ஸைல் 2 வெளியீடு. இது அவர்களுக்குத் தெரியாத பதில். நான் என்ன செய்ய முடியும்? எக்ஸைல் 2 பற்றிய ஆர்வ மிகுதியால் தினமும் இப்படி ஏதாவது நடந்து விடுகிறது.
தங்களது உடல் நலம் குறித்து செய்தி வந்த பொழுதில் உங்களைச் சந்திக்க வேண்டும் என நினைத்தேன். யாரிடம் கேட்பது, எங்கே வருவது என எதுவும் தெரியவில்லை. அராத்துவிடம் கேட்டு விடலாமா என்றால், அப்படிக் கேட்பவர்கள் குறித்து முகநூலில் கடுமையாகத் திட்டி பதிவிட்டிருந்தார். பயமாக இருந்தது விட்டுவிட்டேன். பல தருணங்களில் தங்களைக் காண வேண்டும் என நினைத்தது உண்டு. எதுவும் நடக்கவில்லை. மதுரைக்கு நீங்கள் வந்த பொழுது அழகேசன் அண்ணனிடம் என்னையும் உடன் அழைத்துச் செல்லுமாறு கேட்டேன். சரி என்று சொல்லி, விட்டுச் சென்றுவிட்டார். (அழகேசன் – பல முறை தங்களைச் சந்தித்து இருக்கிறார். ஒரு பதிவில் அவரது பெயரை, எப்பொழுதும் மறந்து போகும் பெயர் இந்த முறை ஞாபகம் வந்து விட்டது என, நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள்.) இப்பொழுது சென்னையில் தான வசிக்கிறேன். மூன்று மாதங்கள் ஆகிறது. தங்களைக் காண வேண்டும் என ஆசையாக இருக்கிறது. இந்த மாதத்தில் காண வாய்புகள் ஏதும் உள்ளதா? தங்கள் பதிவிலிருந்து தொடர் பயணங்கள், பணிகள் இருப்பது போல் தெரிகிறது. அதற்கிடையில் ஒரு மணி நேரமோ, பத்து நிமிடமோ, எதுவாக இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. நானும் என் உடன் படிக்கும் நண்பன் ஸ்ரீநிவாசும் வரலாம் என தங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
ச.பா.முத்துகுமார்
(பிழைகள் எதுவும் இருந்தால் மன்னித்து விடவும்.)
டியர் முத்துகுமார்,
முத்துக்குமார் என்று அல்லவா வர வேண்டும்? இதுதான் பெயரா, அல்லது தட்டச்சு செய்யும் போது விடுபட்டு விட்டதா? என்னைச் சந்திக்க நீங்கள் இவ்வளவு தயங்கி இருக்க வேண்டாம். மதுரையிலேயே சந்தித்திருக்கலாம். என்னைச் சந்திக்க சுலபமான வழி, வாசகர் வட்டத்தில் சேர்வதுதான். மருத்துவமனைக்கு வராதது நல்லது தான். கூட்டம் அதிகமாகி விட்டது. இப்போது என்னை நீங்கள் வீட்டில் சந்திக்கலாம். நான் எப்போதுமே என் வாசகர்களை சந்திப்பதில் உற்சாகம் அடைவதே வழக்கம்.
எக்ஸைல் விழாவுக்கு வருவது போலவே எக்ஸைல் முன்வெளியீட்டுத் திட்டத்தையும் பரவலாக மாணவர்களிடையே கொண்டு செல்லுங்கள். அந்த அறிவிப்பை அடுத்த பதிவில் எழுதுகிறேன்… நேரில் சந்திப்போம்…
பிழைகளை நான் பொருட்படுத்துவதில்லை. அது குறித்தும் கவலை வேண்டாம்.
சாரு