ஜன்னல்

இன்று ஜன்னல் என்ற பத்திரிகையைப் பார்த்தேன்.  கடைகளில் கேட்டு வாங்கிப் படியுங்கள்.  மலையாள மாந்த்ரீகம், பேய் விரட்டுதல் பற்றிய ஜெயமோகனின் அனுபவக் கட்டுரை  அட்டகாசமாக  இருந்தது.  ரெமி மார்ட்டினுக்கு அடங்கும் பேய் பற்றிக் கூட எழுதியிருக்கிறார்.  இப்போது அந்தப் பேய் ரெமி மார்ட்டினைத் துறந்து விட்டது.  வெறும் கனி வகைகளைத்தான் தின்று கொண்டிருக்கிறது. துஷ்டப் பேயாய் இருந்து விட்டு திடீரென்று  சைவப் பேயாய் மாறி வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை ஜெயமோகன் அறிய மாட்டார்.

ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி ஆதரித்து நானும் விமர்சித்து ஞாநியும் எழுதியிருக்கிறோம்.  எனக்கு ஞாநி கட்டுரை தான் பிடித்திருந்தது.  ஆனால் இரண்டு பேருமே ஒரே விஷயத்தைத்தான் எழுதியிருந்தது போலவும் இருந்தது.   எனக்கு சரித்திரக் கதைகள் பிடிக்கும்.  கௌதம நீலாம்பரனும் எனக்கு ஓரளவு பிடித்த எழுத்தாளர் தான்.  ஆனால் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு தேவை என்று தோன்றியது.  கல்கியையும் சுஜாதாவையும் மிஞ்சுவது அவ்வளவு கடினமா என்ன?  இதை விட இலக்கியம் கொஞ்சம் சுலபம் போல் தெரிகிறது.  அசோகமித்திரனை ஆதவன் மிஞ்சி விட்டார்.  அசோகமித்திரன், ஆதவன் இருவரையும் ஜெயமோகன் மிஞ்சி விட்டார். ஜெயமோகனை மிஞ்ச நாளை ஒருத்தர் வருவார்.  இலக்கியத்தில் தேக்க நிலையே இல்லை.  ஊருக்கு ஒரு ஜாம்பவான் இருக்கிறார்.  கோவில்பட்டியில் மட்டும் அரை டஜன் ஜாம்பவான்கள்.  ஆனால் ஜனரஞ்சக எழுத்தோ வெறும் வெட்டவெளியாகக் கிடக்கிறது.  இலக்கிய எழுத்தை விட ஜனரஞ்சக எழுத்து அவ்வளவு கடினமா என்ன?   ஆங்கிலம் அப்படி இல்லை.  இப்போது கூட ஆர்தர் ஹெய்லியின் டிடெக்டிவ் என்ற நாவலைப் படித்தேன்.  மனிதர் என்னமாய்ப் பின்னியெடுத்திருக்கிறார்!

ஜன்னலில் எனக்கு மிகவும் பிடித்தது, எல்லா பக்கங்களையும் நடிகைகளின் படங்களைப் போட்டு ரொப்பாமல் படிப்பதற்கு விஷயங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.  மதனின் கார்ட்டூன் கூடுதல் பலம்.  மதனுக்குப் பரிபூரண சுதந்திரம் அளிக்கப்படும் என்று நினைக்கிறேன்.

ஜன்னல் ஆசிரியர் குழுவினருக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்…