தெரிந்த நாவல், தெரியாத செய்தி : தி இந்து

தினமணி.காம்-இல் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்களுக்காக ஏராளமாகப் படிக்க வேண்டியிருப்பதால் தினசரிகளைப் படிக்க நேரம் இருப்பதில்லை.  இந்த நிலையில் இன்று பத்து மணி அளவில் ஒரு தொலைபேசி அழைப்பு.  பேசி முடித்ததும் அவந்திகா, “யாரிடம் இவ்வளவு பவ்யமாகப் பேசுகிறாய்?” என்றாள்.  லெனின், எடிட்டர் என்றேன்.  எனக்குத் துறவிகளின் மீது எப்போதுமே ஆர்வமும் அன்பும் உண்டு.  பக்தி என்று கூட சொல்லலாம்.  லெனின் நம்மைப் போல் லௌகீக வாழ்வில் இருந்தாலும் அவர் ஒரு துறவி என்றே எனக்குள் எப்போதும் தோன்றும்.  இப்போதைய துறவிகள் பி.எம்.டபிள்யூ.விலும் ஜகுவாரிலும் பயணம் செய்கிறார்கள்.  அப்படிப்பட்ட துறவி அல்ல.  தன்னைப் போலவே அல்லது தன்னை விடவும் அதிகமாக சக மனிதர்களை நேசிப்பவன் துறவி.  நேசிப்பது மட்டும் அல்ல; மற்றவர்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் லெனின்.  அதனால்தான் அவரிடம் எப்போது பேசினாலும் பவ்யமாகப் பேசுகிறேன்.  அவரை நான் இரண்டு மூன்று முறை மட்டுமே அதுவும் நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்.  ஆனாலும் அவருடைய கண்களிலிருந்து பொங்கும் பேரன்பைத் தெரிந்து கொள்ள அதுவே போதும்.  எப்போதும் நினைப்பேன், லெனின் சாரோடு நெருங்கிப் பழக வேண்டும்; அவரோடு பயணங்கள் செல்ல வேண்டும் என்று.  எல்லாம் வெறும் ஆசையாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.

அவரோடு பேசும் போதெல்லாம் பேசி முடித்ததும் மனதில் ஒரு அன்பும் அமைதியும் நிரம்பும்.  இன்றும் அப்படியே.  ”உங்கள் கட்டுரையை தி இந்துவில் பார்த்தேன்.  உடனே பேச வேண்டும் போல் தோன்றியது.”  பிறகு ஒரு கதை சொன்னார்.  அந்தக் கதை ஒரு நல்ல சிறுகதைக்கான கரு.  தி இந்துவில் வந்துள்ள கட்டுரை ஸீரோ டிகிரி பற்றியது.  அந்த நூல் உங்களிடம் இருக்கிறதா சார் என்று கேட்டேன்.  ”இருப்பதா, அதெல்லாம் அப்போதே படித்தாகி விட்டது.  அதையெல்லாம் படிச்சுத்தானே இப்படி இருக்கிறோம்.”   அதைக் கேட்டதும் என் கண்கள் கலங்கி விட்டன.  அவர் இருக்கும் உயரத்தில் இருப்பவர்கள் எத்தனை பேரால் இப்படிச் சொல்ல முடியும்?  அவரவர் என் பெயரைச் சொல்லவே தயங்குகிறார்கள்.  லெனினோ இப்படிச் சொல்கிறார்.  லெனினோடு நெருங்கிப் பழகுபவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.

இன்றைய தி இந்துவில் தெரிந்த நாவல், தெரியாத செய்தி என்ற தலைப்பில் என் கட்டுரை வந்துள்ளது.  பாருங்கள்.  தி இந்து குழுவினருக்கு என் நன்றி.