எழுதி விடாதீர்கள்…

மற்ற எழுத்தாளர்களுக்கு எப்படியோ, எனக்கு ஒரு விசேஷமான அனுபவம் கிடைத்தபடி இருக்கிறது. என்னைச் சந்திக்கும் எல்லோருமே ஒரு விஷயத்தைத் தவறாமல் என்னிடம் சொல்கிறார்கள்.  “என்னைச் சந்தித்தது பற்றி எழுதி விடாதீர்கள்.”  ஒருத்தர் சொன்னால் பரவாயில்லை.  சந்திக்கும் அத்தனை பேருமே சொல்கிறார்கள் என்றால் இதில் ஏதோ சூட்சுமம் இருக்க வேண்டும்.  என்ன என்றுதான் தெரியவில்லை. ஆனால் சென்ற வாரம் சந்தித்த நண்பர் சொன்ன போது காரணம் கேட்டேன்.   ”நீங்கள் குறிப்பிட்டு எழுதும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லையே?” என்றார்.   கல், மண், தூசு, நிலா, காற்று, கடல், சேறு, குப்பை, கடவுள், ஞானி, பிச்சைக்காரன், நாய், பூனை, மரம், செடி, மலர் என்று நான் சந்திக்கும் அத்தனையையும் பற்றி நான் எழுதிக் கொண்டே தானே இருக்கிறேன்?  என்னைப் பொறுத்தவரை இங்கே நான் பட்டியலிட்டுள்ள விஷயங்களில் என்னைப் பொறுத்தவரை உயர்வு தாழ்வு இல்லை.  எனக்கு வேசியும் ஞானியும் ஒன்றுதான்.  முந்திய வாக்கியத்தில் உள்ள முதல் வார்த்தையான எனக்கு என்பதைச் சேர்க்காமல் இருந்தால் வேறு அர்த்தம்.  அது அனர்த்தம்.  எனக்கு என்பதுதான் அந்த வாக்கியத்தை வேறு எங்கோ கொண்டு சேர்க்கிறது.  நான் ஞானியாகவும் இருந்ததில்லை; வேசியாகவும் வாழ்ந்ததில்லை. அதனால் அவர்களின் வாழ்க்கை பற்றிக் கருத்துச் சொல்ல எனக்கு அருகதை இல்லை.  ஆனால் எனக்கு ஞானியும் வேசியும் ஒன்றுதான்.  ஏன் என்றால், நான் அந்த இருவரிடமும் கற்றுக் கொள்கிறேன். இருவருமே என் ஆசான்கள்.  அந்த வகையில் அந்த இருவருமே எனக்கு ஒன்றுதான்.  அந்த வகையில் என்னைச் சந்தித்த நண்பர் சிறிய ஆளா, பெரிய ஆளா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நான் தான். ஆனால் அவர் சிலருடைய பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் அவரது வாழ்க்கைத் துணைவி அல்லது துணைவர் விவாகரத்து செய்து விடுவார் என்று அடிக்கடி கேள்விப்படுகிறேன்.  அதை ஒரு நண்பர் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே குறிப்பிட்டார்.  சாரு பெயரைச் சொன்னால் என் மனைவிக்குப் பிடிக்கவில்லை.  அதனால் கொஞ்ச காலம் ரகசியமாக என்னைச் சந்தித்துக் கொண்டிருந்தார்.  இப்போது அதுவும் இல்லை.

சமயங்களில் நம்முடைய அடக்க உணர்வு கூட மற்றவரின் சுதந்திரத்தைப் பாதித்து விடக் கூடும் என்ற அரிய உண்மையை அந்த நண்பரின் வேண்டுகோளிடமிருந்து தெரிந்து கொண்டேன்.  சிலர் என்னை விருந்துக்கு அழைக்கிறார்கள்.  கிளம்பும் போது “இங்கே வந்தது பற்றி எதுவும் எழுதி விடாதீர்கள்” என்று சொல்கிறார்கள்.  அடப்பாவிகளா!  அப்புறம் ஏன் ஐயா என்னைக் கூப்பிட்டு விருந்து வைக்கிறீர்கள்? கிட்டத்தட்ட 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற ஒரு தாசியைப் போல் உணர்கிறேன்.