சமீபத்தில் எனக்கு வந்த ஒரு முக்கியமான கடிதத்தைப் பற்றி வாசகர்களோடு என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். நண்பர் எனக்குப் பிடித்த எழுத்தாளர். இளைஞர். இது மிகவும் அபூர்வமாகவே நிகழ்வது. வாழும் எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்தவர்கள் என்றால் அவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இவரோ மிகவும் இளைஞர். வெகுஜனரீதியாக மக்களின் சிந்தனை ஓட்டத்தில் சில பல சீரிய மாற்றங்களைச் செய்து விடக் கூடிய இடத்தில் இருப்பவர். செய்து கொண்டும் இருக்கிறார். ஆனால் இவரை ஐந்து பத்து நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. முகநூலில் இருக்கிறார். ஆனால் பயன்படுத்தமாட்டார். கூச்ச சுபாவம் உள்ளவர். புகழின் வெளிச்சம் தன் மீது படவே கூடாது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டவர். அந்தக் காரணத்தினால்தான் அவரது கடிதத்தை வெளியிடாமல் என் பதிலை மட்டுமே தருகிறேன்.
ஒருவர் தனிமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது அவரது தனி உரிமை. அதைப் பற்றிக் கருத்து சொல்ல நான் யார்? ஆனால் அவர் ஒரு எழுத்தாளராகவும் இருப்பதால் என் மாற்றுக் கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன். நண்பர் ஒரு கிராமத்திலிருந்தே வந்தவர் எனினும் அவரது மனோபாவம் முழுக்க முழுக்க ஐரோப்பிய மரபைச் சார்ந்தது. அங்கே ஒரு எழுத்தாளனை புகைப்படம் எடுப்பது கூட கடினம். மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள முடியாது. ஐரோப்பிய எழுத்தாளர்கள் யாருக்கும் தெரியாதபடி வாழ்வதையே விரும்புகின்றனர். ஆனால் அதற்கான நியாயம் அங்கே இருக்கிறது. ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மிஷல் ஃபூக்கோ என்பவர் அவர் வாழ்ந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி அளவுக்கு உலக அளவில் பிரபலம் அடைந்தவராக இருந்தார். ”தமிழ்நாட்டின் தெருக்களில் ஃபூக்கோவின் பிரேதத்தை இழுத்தபடி வரும் எழுத்தாளர்” என்று என்னைக் குறிப்பிட்டுத் திட்டினார் இன்னொரு எழுத்தாளர் என்றால் ஃபூக்கோவின் பிராபல்யத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். ஓரான் பாமுக்கை துருக்கியில் இங்கே ரஜினிகாந்தை எப்படித் தெரியுமோ அப்படித் தெரிகிறது. அதன் காரணமாகவே அவர்கள் யாருக்கும் தெரியாமல் வாழ முயற்சிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்படியா? சி. மோகனும் நானும் இன்னும் ஓரிருவரும் இல்லாவிட்டால் ப. சிங்காரத்தின் பெயரே தெரியாமல் போயிருக்கும். தி.ஜ. ரங்கநாதனின் பெயர் அப்படித் தெரியாமலேயே போய் விட்டது. இன்னும் கொஞ்ச நாளில் கரிச்சான் குஞ்சுவின் பெயரும் காணாமல் போய் விடும். இப்படியே ந. சிதம்பர சுப்ரமணியன், ஜி. சம்பத் போன்ற பெயர்கள். தஞ்சை ப்ரகாஷின் கரமுண்டார் வூடு என்ற நாவலை ஒரு பதிப்பகம் இன்றைய நிலையில் பிரசுரிக்க முடியாது. அப்பேர்ப்பட்ட ரத்தக் களறி சமாச்சாரங்களை உள்ளடக்கிய நாவல். மேற்கோள் காட்டக் கூட எனக்கு அச்சமாக இருக்கிறது. பெருமாள் முருகனுக்குக் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள். எனக்கு என்றால் சாகட்டும் என்று விட்டு விடுவார்கள். என் வாசகர் வட்ட நண்பர்களைத் தவிர ஒரு ஆள் வர மாட்டார். ஊடகங்களிலேயே என்னைத் தடை செய்து வைத்திருக்கும் போது எனக்கு யார் ஆதரவாக வருவார்? எனவே கரமுண்டார் வூடு நாவலிலிருந்து மேற்கோள் காட்டுவதற்குக் கூட அஞ்சுகிறேன். அப்பேர்ப்பட்ட நாவலை எழுதிய ப்ரகாஷ் – இவ்வளவுக்கும் தமிழ் எழுத்தாளர்கள் அத்தனை பேரோடும் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தவர் – பற்றி யாருமே குறிப்பிடுவதில்லை. ஏன்? சுந்தர ராமசாமியை விட, ஜி. நாகராஜனை விட, புதுமைப்பித்தனை விட மிகப் பெரிய ஆளுமை ப்ரகாஷ். தமிழின் ஆகச் சிறந்த பத்து நாவல் என்றால் அதில் கரமுண்டார் வூடு வர வேண்டும். அப்படி நான் பார்த்ததே இல்லை. நூறு நாவல் வரிசையில்தான் அதன் பெயரை ஒரு முறை பார்த்திருக்கிறேன். புயலிலே ஒரு தோணியைப் போன்ற ஒரு நாவல் தமிழிலே இல்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் கரமுண்டார் வூடு அதைத் தாண்டி விட்டது. அப்பேர்ப்பட்ட நாவலை எழுதிய ப்ரகாஷின் பெயர் யாருக்கும் தெரியாமல் போனதற்கு ப்ரகாஷும் ஒரு காரணம். அவர் தன் மீது எந்த வெளிச்சமும் விழுவதை விரும்பியதில்லை. ஒரு ஞானியின் மனோபாவத்துடன் வாழ்ந்தவர்.
என் நண்பருக்கு என் பதில் ஒன்றுதான். இங்கே சமூகம் எழுத்தாளர்களைக் கண்டு கொள்வதில்லை. இது படிக்காதவர்களின் சமூகம். இங்கே உள்ள பத்து இருபது படித்தவர்களிடம் நம் பெயரை நாம் தான் சொல்லிக் கொள்ள வேண்டும். சொல்லிக் கொள்ளாமல் இருப்பது, தனிமையை விரும்புவது என் தனிப்பட்ட உரிமை என்றால் அதை நான் மறுக்கிறேன். ஒரு philistine சமூகத்தில் எழுத்தாளன் என்பவன் ஒரு ஆக்டிவிஸ்ட். செயல்வீரன். இந்த சமூகத்தினுள் உங்கள் கருத்து, உங்கள் படைப்பு ஊடுருவிச் செல்ல வேண்டும். நீங்கள் மறுக்கப்படலாம்; ஒதுக்கப்படலாம்; என்னைப் போல் உதாசீனப்படுத்தப்படலாம்; தீண்டத் தகாதவனைப் போல் நடத்தப்படலாம்; தண்டிக்கவும் படலாம். அப்படியெல்லாம் நடந்தால் உங்கள் பணி வெற்றி அடைந்து விட்டது என்று நீங்கள் திருப்தி அடையலாம். ஒரு இயக்குனர் ஒரு தினசரியில் தனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் என ஒரு பட்டியல் போட்டார். திருவள்ளுவரிலிருந்து துவங்கி இளங்கோ, பாரதி, என்று வந்து கு. சின்னப்ப பாரதி, டி. செல்வராஜ், தி. ஜானகிராமன், ஆதவன், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி என்றெல்லாம் வரிசையாகச் சொல்லி, கடைசியாக ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என்று முடிக்கும் போது அவர் வேண்டுமென்றே என் பெயரைத் தவிர்த்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். ஆக, என் பெயர் அச்சில் வராவிட்டாலும் தன் பத்திரத்தை எண்ணி அவர் என் பெயரைத் தவிர்க்கும் போதே நான் வெற்றி அடைந்து விட்டேன். அச்சில் வந்து என்ன? அதில் பயன் இல்லை. கமல்ஹாசன் கோடிக் கணக்கான பேர் பார்க்கும் நீயா நானா நிகழ்ச்சியில் எல்லோரும் ஜெயமோகன் எழுதிய அறம் என்ற நூலை வாங்கிப் படியுங்கள் என்று சொன்னதாக அறிந்தேன். அதன் காரணமாக அந்த நூல் ஐந்து லட்சம் பிரதிகள் விற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் சொன்னதால் அந்த சிபாரிசினால் 500 பிரதிகள் அதிகம் விற்றிருக்கலாம். அதில் ஒருவர் திரு மு. கருணாநிதி. அவருடைய மேஜையில் அந்த நூல் படிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக தி இந்துவில் சமஸ் எழுதியிருந்தார். எனவே கமலுக்கே பெப்பே காட்டி விடும் இந்தத் தமிழ்ச் சமூகத்தில் ஒரு இயக்குனர் என் பெயரைப் போடாததால் எந்த நஷ்டமும் எனக்கு இல்லை. (என் வாழ்நாளிலேயே என் பெயரைக் குறிப்பிட்ட இரண்டே எழுத்தாளர்கள் மனுஷ்ய புத்திரனும் ஷோபா சக்தியுமே ஆவர்.) இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த 30 ஆண்டுகளாக நானும் ஜெயமோகனும் மட்டுமே எங்களைத் தீவிரமாக சமூக வெளியில் மிக மூர்க்கமாக எங்களை முன்னிறுத்திக் கொண்டு வருகிறோம். (எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அந்த அவசியம் நேரவில்லை. அந்த வேலையை விகடன் கவனித்துக் கொண்டது.)
ஜெயமோகனுக்காக நான் பேச முடியாது. என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளலாம். ஆம்; நான் சுய விளம்பரம்தான் செய்து கொண்டேன். ஒட்டு மொத்த சமூகமே எழுத்தாளர்களைத் தடை செய்து வைத்திருக்கும் போது – இல்லை, இந்த வாக்கியம் தவறு. படித்தால்தானே தடை செய்யலாம்? தமிழ்ச் சமூகத்திற்குப் படிப்பறிவு இல்லாத காரணத்தால் எழுத்தாளர்களின் இருப்பு பற்றியே அதற்குத் தெரியாது என்ற நிலையில் எனக்கு நானே தான் சுய விளம்பரம் செய்து கொண்டேன். தி.ஜ.ர.வைப் போல், கரிச்சான் குஞ்சுவைப் போல், ப. சிங்காரத்தைப் போல் ஆகி விட எனக்கு விருப்பம் இல்லை.
மேலும், தமிழ்ச் சமூகம் மிகவும் நன்றி கெட்ட ஒரு சமூகம். நான் தினமுமே ஒரு நூலைப் புரட்டுகிறேன். புரட்டும் போதெல்லாம் அதை உருவாக்கிய மனிதரை நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். ஆனால் எத்தனை பேருக்கும் அவர் பெயர் தெரியும்? எத்தனை பேர் அவர் பெயரை நினைவு கூர்கிறார்கள்? க்ரியா பதிப்பகம் வெளியிட்ட தமிழ் அகராதியையே குறிப்பிடுகிறேன். அதை உருவாக்கியவர் எஸ். ராமகிருஷ்ணன். க்ரியா பதிப்பக உரிமையாளர்.
எனவே நண்பரே, நீங்கள் ஒரு சிறுகதையோ நாவலோ கவிதையோ எழுதினால் அது பற்றி நீங்கள் உரத்துச் சொல்லி விடுங்கள். அல்லது, உங்கள் நண்பனையாவது அதைப் பற்றிச் சொல்ல அனுமதியுங்கள். ரஜினி கிழிந்த சட்டை போட்டால் அது ஒரு ஜாலி. பிச்சைக்காரன் கிழிந்த சட்டை போடக் கூடாது. கோட்டும் சூட்டும்தான். சுருக்கமாக ஒரே வாக்கியத்தில் சொல்கிறேன். உங்களுக்கான anonymity-ஐ நீங்களே தேர்ந்து கொள்ள வேண்டாம். அதை சமூகமே உங்களுக்குப் பரிசாகத் தரும்.
இதையே கூட நீங்கள் வன்மையாக மறுக்கலாம். ஆனால் இதை நான் இங்கே பொதுவெளியில் எழுதியிருப்பதற்குக் காரணம்…