ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு மாத்யமம் பத்திரிகையில் நான் எழுதி வந்த கோணல் பக்கங்கள் என்ற தொடர் கேரளத்தில் மிகவும் பிரபலமான ஒரு பத்தி. குறிப்பாக வட கேரளத்தில். மாத்யமம் பத்திரிகை வார இதழ். நான் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எழுதியதாக ஞாபகம். நான்கு ஆண்டுகள் எழுதினேன். அது ஒரு இஸ்லாமியக் கலாச்சார அமைப்பால் நடத்தப்படுவது. அதில் நான் எழுதியது பற்றி மலையாள எழுத்துலகில் என் மீது மதரீதியான முத்திரையும் குத்தப்பட்டது. அது பற்றி நான் கவலைப்பட்டது இல்லை. என்னைப் பொறுத்தவரை எனக்கு எழுதுவதற்கான தளம்தான் முக்கியம். மேலும், மாத்யமம் பக்கங்களைப் பார்த்தால் அதில் ஒரு பக்கத்தில் கூட எந்தவித மத அடையாளத்தையும் காண முடியாது. பின்னர், மாத்யமம் ஆசிரியர் குழுவில் மாற்றம் நிகழ்ந்தது. மாறியவர்கள் தூய்மைவாதிகள். என் தொடர் நிறுத்தப்பட்டது. ஆனால் நான் இன்றைக்கும் மலப்புரம் போனால் அதை மாணவர்களும் ஆசிரியர்களும் பிற வாசகர்களும் அன்புடன் நினைவு கூர்வதை கவனித்திருக்கிறேன்.
அதேபோல் உயிர்மையில் நான் எழுதி வந்த பத்தி. பத்து ஆண்டுகள் எழுதினேன். பிறகு நான் ஏன் ஏழையாகவே இருக்கிறேன் என்று ஒருநாள் தோன்றியது. தொடர் எழுதுவதை நிறுத்தினேன். ஏழ்மை அதிகரித்ததே தவிர மற்றபடி எந்த முன்னேற்றமும் இல்லை. மனுஷ்யபுத்திரன் உட்பட பலரும் உயிர்மையில் நான் எழுதியதை ஒரு நாஸ்டால்ஜியாவோடு நினைவு கூரும் போது மனம் நெகிழ்கிறது. ஆனால் உயிர்மை, மாத்யமம் தவிர மற்ற பத்திரிகைகள் 24 வாரம் (ஆறு மாதம்) பத்தி எழுதியதும் போதும் என முடித்து விடுகிறார்கள். 22-ஆம் வாரம் ஆனதுமே பத்திரிகை ஆசிரியரிடமிருந்து தொலைபேசி அழைப்பை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறேன். “எப்படியும் 23-ஆம் வாரம் வந்து விடும். சார், 24-ஆவது வாரம் வரப் போவுது; ஒரு ப்ரேக் குடுக்கலாம்னு பார்க்கிறோம்.” அது உண்மையில் ப்ரேக் இல்லை. மரண ஓலை. சில பேர் சின்ன ப்ரேக் என்று சொல்லி விட்டு வாழ்நாள் பூராவும் தடை செய்து விடுவார்கள். ஒரு விஷயம் எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. கலா கௌமுதியில் ஐந்து ஆண்டுகள் வாரா வாரம் எழுதினேன். மாத்ருபூமியில் ஒரு ஆண்டு தொடர்ந்து எழுதினேன். உயிர்மையில் பத்து ஆண்டுகள். உயிர்மை முதல் இதழிலிருந்து. என் வாழ்நாளின் இறுதிக் கணம் வரை உயிர்மையில் நான் எழுதியிருக்கலாம். ஆனால் மற்ற பத்திரிகைகள் ஏன் 24 வாரத்தோடு நிறுத்திக் கொள்கின்றன? குஷ்வந்த் சிங் 70 ஆண்டுகள் தொடர்ந்து வாராவாரம் பத்தி எழுதிக் கொண்டிருந்தார். அதிலும் ஹிந்துஸ்டான் டைம்ஸில் 30 ஆண்டுகள் எழுதினார். ஆனால் தமிழ்ப் பத்திரிகைகள் மட்டும் ஏன் இப்படி ஒரு அபத்தமான கொள்கையை வைத்து அழுது கொண்டிருக்கின்றன?
சரி, நான் சொல்ல வந்தது அது அல்ல. உயிர்மையைப் போல், மாத்யமமைப் போல் இப்போது மிகத் தீவிரமான மனஒன்றுதலோடு தினமணி இணைய தளத்தில் நான் பழுப்பு நிறப் பக்கங்களை எழுதி வருகிறேன். ஒருவகையில் அந்த இரண்டு பத்திரிகைகளில் எழுதியதை விடவும் இது முக்கியமான பத்தி. காரணம், நான் எடுத்துக் கொண்ட விஷயம் அப்படி. ஆனால் வாழ்நாளில் நான் சந்தித்த சவால்களிலேயே இதுதான் ஆகப் பெரிதானது. ஒவ்வொருத்தரும் லாரி லாரியாக எழுதிக் குவித்திருக்கிறார்கள். அது பற்றி – ஒவ்வொருத்தர் பற்றியும் – வாரா வாரம் எழுத வேண்டும். சவால் தானே? காலத்துக்கும் எனக்குமான போராட்டம். கண் விழித்தும் படிக்க இயலாத உடல்நிலை. செம ’த்ரில்’லாக இருக்கிறது. நேற்று கூட படுக்க மனசே இல்லாமல் பனிரண்டு மணிக்குத்தான் படுத்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு என்றால் சிவராத்திரிதான். இப்போதும் முடியும். ஆனால் கூடாது. என் உடல்நலன் பற்றி நண்பர்கள் அன்பாகவும் அக்கறையாகவும் கண்டிக்கிறார்கள். கவலை வேண்டாம். சில சீனத்து மூலிகைகளை உட்கொள்கிறேன். நினைத்துப் பார்க்க முடியாத அளவு விலை. அதை விடக் கொடுமை காஃபியை விட வேண்டும். விட்டு விட்டேன். காஃபியை விடுவேன் என்று மூன்று மாதம் முன்னால் ஒருவர் என்னிடம் சொல்லியிருந்தால் அதற்குப் பிறகு அவரை நான் சந்தித்தே இருக்க மாட்டேன். காஃபி வெறியன் நான். காஃபி இல்லாமல் என்னால் உயிர் வாழவே முடியாது. ஹிண்டு ஆஃபீஸுக்குக் கிளம்பினால் ஆஹா நல்ல காஃபி குடிக்கலாம் என்று நினைக்கும் மனம். அந்த அளவுக்கு காஃபி அடிக்ட். இப்போது காஃபி குடித்து ஒன்றரை மாதம் ஆகிறது. இன்னும் நான்கரை மாதம் காஃபியைத் தொடக் கூடாது. சீன மூலிகையை காஃபி முறித்து விடுமாம். இத்தனையும் நான் செய்ய வேண்டிய பணிகளுக்காக. எழுத்தாளனுக்கு உடம்பு ராணுவ வீரனைப் போல் இருக்க வேண்டும். நோஞ்சானாக இருந்தால் ஒன்றுமே முடியாது. ஒரு நாளில் 16 மணி நேரம் படிக்க வேண்டும், எழுத வேண்டும் சாமி. மற்றவர்களால் நினைத்துப் பார்க்க முடியுமா? ஏன் எங்கள் மூவரின் பெயரை மட்டுமே எல்லோரும் குறிப்பிடுகிறார்கள்? ஒரு நாளில் பதினாறு மணி நேரம் படிக்கிறோம்; எழுதுகிறோம்.
எம்.வி. வெங்கட்ராம் பற்றிய கட்டுரையின் மூன்றாம் பகுதியை மூன்று நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். நீங்கள் எழுதியதில் ஆகச் சிறந்தது என்றார்கள். எனக்குமே அப்படித்தான் தோன்றியது. தமிழுக்கும் என் மூதாதையருக்கும் நான் அளித்த மிகச் சிறந்த பரிசு இந்தக் கட்டுரை தான்.