பழுப்பு நிறப் பக்கங்கள் – தஞ்சை ப்ரகாஷ்

இந்த வாரம் தஞ்சை ப்ரகாஷ்.  கட்டுரை பற்றி முகநூலில் உமா சக்தி இப்படி எழுதியிருக்கிறார்:

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள், தஞ்சை ப்ரகாஷ் படைப்புலகம், மீனின் சிறகுகள், கள்ளம் இவையே என்னிடம் இருக்கும் அவருடைய ஆக்கங்கள். சாரு எழுதுவதற்கு முன்னர் முதல் தடவையாக இந்தத் தகவல்கள் எல்லாம் ஏற்கனவே எனக்குத் தெரிந்திருந்தது எழுத்தாளர்கள் மீது நான் வைத்திருக்கும் பேரன்பும் மரியாதையும் காரணமாக இருக்கலாம். தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகளை படித்துவிட்டு இவ்வளவு எராட்டிக்காக எழுதியுள்ளார் என்று கோபப்பட்டு, என் வாழ்க்கையிலேயே ஒரு புத்தகத்தை முதல் தடவையாக பரணில் தூக்கிக் எறிந்தேன். என் புத்தக அலமாரியில் அது இருக்கக் கூடாது வீட்டிலும் இருக்க கூடாது என்று பழைய புத்தகக் கடையில் போட்டுவிட்டேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று பின்னாட்களில் வருந்தியதுண்டு. காரணம் அதற்குப் பின்னர் தான் தஞ்சை ப்ரகாஷ் எழுதிய மேபிள் சிறுகதையைப் படித்தேன். இப்படி ஒரு பெண்ணா என்று திகைக்கும் அளவிற்கு அதில் ஒரு குணாதிசியத்தை எழுத்தில் வார்த்திருப்பார். தந்தை மகள், காதலித்த ஒருவனுக்காக மேபிளின் பிடிவாதம் என கதை ஒருவிதமான நயமான மொழியில் மனத்தை உருக்கும். என் அபிமான எழுத்தாளர்களின் பட்டியலில் தஞ்சை ப்ரகாஷ் எப்போதும் இருக்கிறார். சில நாட்களுக்கு முன் முகநூலில் அவருடைய ‘கள்ளம்’ நாவலைப் பற்றி எழுதியுள்ளேன்.அவரின் மாணவர்களான இருவர் எனக்கு நண்பர்கள் ஒருவர் கீரனூர் ஜாகிர்ராஜா மற்றவர் சுந்தர்ஜி ப்ரகாஷ். அவர்களின் எழுத்தில் தஞ்சை ப்ரகாஷின் சாயல் இருப்பதை உணர்ந்துள்ளேன்.

சாருவின் எழுத்தில் தஞ்சை ப்ரகாஷைப் படிப்பதென்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆகச் சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களால் புறக்கணிக்கப்படுவது என்பது அவரது எழுத்துக்களின் தோல்வியல்ல. கடைகோடியில் ஒரு ரசிகன் அந்த எழுத்தை கண்டடைந்து கொண்டாடுவது தான் முக்கியம். சாருவின் பழுப்பு நிற பக்கங்கள் அதன் நோக்கத்தை இவ்வளவு அழகாக நிறைவேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்கிறேன்.

***

சந்திராவின் கருத்து முகநூலில்:

நான் தஞ்சை பிரகாஷின் எந்த எழுத்தையும் வாசித்ததில்லை.(இதற்கு சாரு திட்டுவாரோ?) அவர் அதிகம் பாலியல் கதைகளை எழுதியவர் என்ற பிம்பம் நிச்சயமாக அதற்கு காரணம் இல்லை. ஏனேனில் ஜி.நாகராஜன் தமிழில் எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர். சாருவின் ”ஸீரோ டிகிரி”யும் எனக்கு பிடித்த நாவல்தான். அதனால் தஞ்சை ப்ரகாஷின் பாலியல் சார்ந்த எழுத்து எனக்கு பிரச்னையாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்போது தஞ்சை ப்ரகாஷ் பற்றி யாராவது பேசும் பொழுது ஏன் அந்த எழுத்தாளரின் கதை ஒன்றைக்கூட நாம் வாசிக்கவில்லை என்ற குற்றவுணர்வு மேலிடுகிறது. படிக்காமலே நிராகரிக்கும் பொது மனம்தான் தமிழ் எழுத்தாளர்களை காலிசெய்கிறது. கடைசிவரை அவர்களை பொருளாதார துன்பத்தில் ஆழ்த்தி, இலக்கியத்தை கைவிட்டு வருமானத்திற்கு வேறு வேலையை செய்யச் செய்கிறது.கடைசியில் இலக்கியத்திலிருந்தும் எழுத்தாளர்களை துரத்துவதும் படிக்காமலே நிராகரிக்கும் நியாயமற்ற
பொது மனமே…தஞ்சை பிரகாஷின் எல்லா எழுத்துகளையும் வாசிக்க ஆசை. அவருடைய புத்தகங்கள் கிடைக்கும் பதிப்பகங்களை நண்பர்கள் பரிந்துரைக்கலாம்.

***

உமா சக்தி, சந்திரா இருவருக்கும் என் நன்றி.  ப்ரகாஷைப் படிக்காவிட்டால் திட்ட மாட்டேன் சந்திரா.  ஆனால் முப்பது வருடமாக ப்ரகாஷ் என் உயிர் நண்பர்; ஒரே தட்டில்தான் சாப்பிட்டோம்.  ஆனால் அவர் சாவுறதுக்குக் கொஞ்ச நாள் முந்திதான் அவர் எழுதுவார் என்றே தெரிந்தது என்று கட்டுரை எழுதினால் அப்போதும் திட்ட மாட்டேன்; அந்தப் பொன்னான வாசகங்களை என் கட்டுரையில் மேற்கோள் மட்டுமே காட்டுவேன்.  என் கட்டுரையில் பாருங்கள்; நான் வெங்கட் சாமிநாதனைத் திட்டவில்லை. வெறுமனே அவரது கட்டுரையிலிருந்து மேற்கோள் மட்டுமே காட்டியிருக்கிறேன்…  ஒரு எழுத்தாளனைப் படிக்காமல் இருப்பது தவறே இல்லை.  இன்று படிக்காவிட்டால் நாளை படித்துக் கொள்ளலாம்.  அவன் எழுத்தாளன் என்றே தெரிந்து கொள்ளாமலும் இருக்கலாம்.  ஆனால் உயிர் நண்பர்களாக இருந்து கொண்டு அவன் சாகும் வரை அவன் எழுத்தாளன் என்று தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.  இப்போதெல்லாம் நான் யாரையும் திட்டுவதில்லை என்பதை கவனிக்கவில்லையா சந்திரா?

கட்டுரையின் இணைப்பு:

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/08/09/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/article2964127.ece