இப்படிப் பண்ணினதுக்கு நம்மளப் பிஞ்ச செருப்பாலதான் அடிச்சுக்கணும் என்று எப்போதாவது உங்களையே நீங்கள் வைது கொண்டிருக்கிறீர்களா? சில தினங்கள் முன்பு வாசக நண்பர்களைச் சந்திக்க ஈரோடு அருகில் உள்ள மண்கரடு லிங்காத்தாள் குட்டையில் ஒரு நண்பரின் தோட்டத்திற்குச் சென்றிருந்தேன் அல்லவா? அன்றைய தினம்தான் என்னையே அப்படி வைது கொண்டேன். அந்த நண்பர் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர். பழகுவதற்கு இனியவர். அதனால் அந்தச் சந்திப்புக்கு இசைந்தேன். சந்திப்புக்கு வருகிறேன் என்று சொன்ன முக்கியஸ்தர்கள் யாரும் வரவில்லை. அதில் குறிப்பாக என்னுடைய வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒருவர். என்ன வாங்கிக் கொண்டு வரட்டும் என்று வேறு கேட்டார். அப்படிக் கேட்டவர் வரவில்லை. என்ன பிரச்சினை என்றால் அவருக்கும் சேர்த்து இரவு உணவு வாங்கியிருந்தோம். விஷ்ணுபுரம் வாசகர் வட்ட அன்பர் ஒருவர் வந்திருந்தார். இளைஞர். வந்தவுடனே கலாம் பற்றிக் கேட்டார். கலாம் பற்றி நான் எழுதியிருந்த எதையும் அவர் படித்திருக்கவில்லை. சொன்னேன். முரண்பட்டு விவாதித்தார். நானும் கொஞ்சமும் அறிவு இல்லாமல் அவரோடு விவாதத்தில் இறங்கினேன். பத்து நிமிடம். அடுத்து, ஓநாய் குலச் சின்னம் பற்றிய பேச்சு வந்தது. அவர் கேட்டாரா, நான் உதாரணத்துக்கு இழுத்தேனா நினைவில்லை. அது பற்றிய என் கட்டுரையையும் அவர் படித்ததில்லை. அது பற்றியும் காமன்மேன் கருத்தையே வெளியிட்டார். மறுத்தேன். மறுத்தார். அரை மணி நேரம். வானவியல் சாஸ்திரம் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு அஞ்சாம் வகுப்பு மாணவனிடம் சரிக்கு சரியாக விவாதம் பண்ணினால் ஸ்டீஃபனுக்கு என்ன நடக்கும்? பைத்தியம் பிடிக்கும். எனக்கு நெஞ்சு வலி வந்தது. காரசாரமாக யாரிடம் விவாதித்தாலும் – அதாவது, கடுமையாக என்னை உசுப்பேற்றி விவாதம் செய்ய வைத்தால் நெஞ்சு வலி வருகிறது என்பதை ஏற்கனவே அனுபவப்பட்டிருக்கிறேன். உதாரணமாக, ஒரு தாலுகா ஆஃபீஸ் குமாஸ்தாவிடம் சரிக்கு சரியாய் அமர்ந்து கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று விவாதம் செய்தால் எனக்கு நெஞ்சு வலி வரும். எந்த அணியை எடுத்துக் கொண்டாலும் வரும். தாலுகா ஆஃபீஸ் குமாஸ்தாவின் விவாத முறை அப்படி இருக்கும் அல்லவா? டிவி சீரியலிலிருந்துதானே அவர் தன் வாதத்துக்கான தரவுகளை முன்வைப்பார்? என் வாழ்நாளின் படுமுட்டாள்தனமான ஒரு மாலை நேரத்தின் அரை மணிநேரத்தை அங்கே அனுபவம் கொண்டேன். தபால் இலாகாவில் பணி புரிந்த போது இது போன்ற பல அறிவுக் கொழுந்துகளை நான் தினந்தோறும் சந்தித்திருக்கிறேன். அது எல்லாம் ராஸ லீலாவில் வரும். ஆர் யூ கம் ஃபார் லஞ்ச் என்பதிலிருந்து எல்கேஜீ படிக்கும் என் மகன் குறைந்த மார்க் வாங்கி விட்டான் என்று கண்ணீர் விட்ட கதையிலிருந்து தினந்தோறும் அறிவுக் கொழுந்துகளின் அலம்பல் தாங்க முடியாது அங்கே. அப்பேர்ப்பட்ட அறிவுக் கொழுந்துகளே தேவலாம் போல் இருந்தது, என்னிடம் கலாம் மற்றும் ஓநாய் குலச் சின்னம் பற்றிக் கேள்வி கேட்டு எனக்கு நெஞ்சு வலி வரவழைத்த அன்பரின் விவாதங்கள். எல்லாம் என் தப்புதான். ஒரு கட்டத்தில் வலி அதிகமாகி “என் கருத்தோடு ஒத்த கருத்து உள்ளவர்களோடு மட்டுமே நான் விவாதிக்க விரும்புகிறேன். உங்களை மனமாற்றம் செய்வது எனக்கு ஆகாத வேலை” என்று சொல்லி விட்டுக் குளிக்கப் போய் விட்டேன். குளியல் அறைக் கதவை உள்ளுக்குள் திறந்து வைத்துக் கொண்டேன். கலாம் பற்றி விமர்சித்தால் கொலை செய்வோம் என்று பல மிரட்டல்கள் வந்தன. இந்த நண்பர் மூலம் வந்தது வித்தியாசமான கொலை முயற்சி என்று புரிந்து கொண்டேன். இது போன்ற காமன்மேன்கள், இளைஞர்கள் ஜெயமோகன் பேசும் போது முன்னேயும் பின்னேயும் பொத்திக் கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் ஒரு ஆன்மீக குருவிடம் போதனை கேட்பது போல் மூடிக் கொண்டு கேட்பார்கள் என்று எனக்குப் புரிகிறது. சாரு என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தப்பு என்னுடையது. காமன்மேன்களிடம் உரையாடியது என் தப்பு.
இது தவிர புதிய வாசகர்கள் பதினைந்து பேரைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் என் எழுத்தை முறையாகப் பயின்றிருந்தார்கள். அவர்களோடு பேசியது இனிமையாக இருந்தது. அவர்கள் அனைவரும் சென்ற ஆண்டுதான் பொறியியல் படிப்பை முடித்து விட்டு இந்த ஆண்டு வேலைக்குச் சென்றிருப்பவர்கள். ஒருவர் சட்டம் படித்தவர். இரவு எட்டரை மணிக்கு ஈரோட்டிலிருந்து சிவந்தி ராஜன் வந்தார். விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த விஜயராகவனும் ஸ்ரீதரும் எங்கள் எல்லோருக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். அந்த இடைவெளியில்தான் காமன்மேனிடம் மாட்டியது. விஜயராகவன் இருந்திருந்தால் அப்படி நேர்ந்திருக்காது. விஜயராகவனோடு உரையாடுவதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. மிகவும் பண்பட்ட மனிதராகவும் எதிர்க் கருத்தைப் புரிந்து கொள்ளக் கூடியவராகவும் இருக்கிறார். ஆனாலும் இதுவே கடைசி. இனிமேல் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த யாரோடும் உரையாடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். நமக்கு அது கட்டுப்படி ஆகாது.
வழக்கம் போல் இளைஞர்கள் கை வீசிக் கொண்டே வந்திருந்தனர். நான் தான் பத்துப் பன்னிரண்டு கொய்யாப்பழம் வாங்கிக் கொண்டு போனேன். ஒரு நண்பர் ஒரு தார் வாழைப்பழம் வாங்கிக் கொண்டு வந்தார். அவருடைய நல்ல மனதைப் பாராட்டுகிறேன். ஆனால் வாழை எனக்குப் பிடிக்காது. அதிலும் சீக்கிரம் கெட்டு விடும். எனக்குப் பிடித்த பழம் மற்றும் தீனி வகைகளை கீழே தருகிறேன். ஏனென்றால் இரண்டு நண்பர்கள் “வரும்போது என்னென்ன வாங்கி வரட்டும்?” என்று அன்புடன் கேட்டனர். இப்படிக் கேட்டால் என்ன சொல்வது? ஒன்றும் வேண்டாம் என்றுதானே சொல்ல முடியும்? அதைத்தான் நாங்களும் சொன்னோம். ஒருத்தர் வரவே இல்லை. இன்னொருத்தர் கைவீசம்மா கை வீசு. அந்தக் கைவீசம்மா ஒரு மணி நேரம் பிரயாணம் செய்து வந்து என்னைப் பார்த்து விட்டு, என் மீது கோபம் இல்லையே என்ற கேள்வியை இரண்டு தரம் கேட்டு விட்டு நான் இல்லை என்று சொன்னதும் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பி விட்டார். அடப்பாவி, பயங்கரமான வில்லன் போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். பிறகு இரண்டு நாள் சென்று, ஸ்ரீதருக்கு இரண்டு மூன்று முறை ஃபோன் செய்து சாருவைப் பார்க்க நான் ரயில் நிலையத்துக்கு வரவா என்று கேட்டு டார்ச்சர் கொடுத்திருக்கிறார். ஸ்ரீதரிடமிருந்து அவருடைய தொலைபேசி எண்ணை வாங்கி போன் செய்து நீங்கள் ரயில் நிலையம் வர வேண்டாம் என்றேன். முக்கால் மணி நேரம்தான் சார்; வந்து விடுகிறேன் என்றார். வேண்டாம்; நான் உங்களுக்கு அளித்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏதோ சாமி தரிசனம் செய்வது போல் பார்த்து விட்டுப் போய் விட்டீர்கள். இப்போது ரயில்வே ஸ்டேஷன் வரவா என்று காலையிலிருந்து ஃபோன் செய்து டார்ச்சர் கொடுக்கிறீர்கள். என்னுடைய அந்தரங்க நேரத்தில் குறுக்கீடு செய்யாதீர்கள் என்று கடுமையாகச் சொல்ல வேண்டி வந்தது.
இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து நடக்கும் ஒரு வாசகர் வட்டச் சந்திப்பில் வந்து என் மேல் கோபமா சார் என்று அவர் கேட்கத்தான் போகிறார். எனக்கு அதில் சந்தேகம் இல்லை.
இவ்வளவு துன்பத்துக்கு இடையிலும் அந்தச் சந்திப்பு அருமையாகவே இருந்தது. சந்தித்த இளைஞர்களின் காரணமாக. விஜயராகவனோடும் அந்த இளைஞர்களோடும் ட்ரான்ஸ்கிரெஸிவ் ஃபிக்ஷன் பற்றி இரவு பதினோரு மணி வரை பேசிக் கொண்டிருந்தது நல்லதொரு அனுபவம்.
ஆனாலும் இது போன்ற சந்திப்புகளை நம்முடைய வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்களே திட்டமிட வேண்டும். என்னால் எக்காரணம் கொண்டும் காமன்மேன்களோடு மாரடிக்க முடியாது. இன்னொரு முக்கிய விஷயம். என்ன கொண்டு வர வேண்டும் என்று இனிமேல் கேட்காதீர்கள். கொண்டு வர வேண்டும் என்று விரும்பினால் பட்டியல் கீழே:
அவகாதோ (Avacado)
வறுக்காத பாதாம் பருப்பு
மெழுகு தடவாத ஆப்பிள்
திராட்சை
லிச்சி
Brilinta 90 mg. நான் சாப்பிடும் இதய வலு மாத்திரை. பதினாலு மாத்திரை 700 ரூ. ஒரு நாளைக்கு இரண்டு சாப்பிடுகிறேன். எனவே எவ்வளவு வாங்கினாலும் ஓடும்.
கையில் காசு இல்லாதவர்கள் கொய்யா.
கொங்கு நாடு விருந்தோம்பலுக்குப் பெயர் போனது. சந்திப்புக்கு அழைத்த பிரமுகர் இரவு உணவுக்கு ஸ்ரீதரிடம் இரண்டாயிரத்து சொச்சம் வாங்கிக் கொண்டார். ஸ்ரீதர் பத்து இளைஞர்களிடம் ஆளுக்கு நூறு என்று வாங்கியதால் மீதி ஆயிரத்தை நான் கொடுத்தேன். அப்புறமாக ஸ்ரீதர் என்னிடம் அந்த ஆயிரத்தைக் கொடுத்தார். அவர் கொடுக்கும் வரை எனக்கு பக் பக் என்றே இருந்தது. பிரமுகரின் பண்ணை வீட்டை நாங்கள் இரவு பயன்படுத்திக் கொண்டதற்கு வாடகை கேட்காததற்கு என் நன்றி.
ம், பிச்சைக்காசு ரெண்டாயிரம் ரூபாய்க்குக் கூட நான் பெறுமானம் இல்லையா? நண்பர்களே, இனிமேல் நம்முடைய வாசகர் வட்டச் சந்திப்புக்கு மட்டுமே வருவேன். வேறு எங்கும் செல்வதாக இல்லை. ஆனால் நம்முடைய வாசகர் வட்டத்தினர் எந்தச் சந்திப்புக்கும் தயாராக இல்லை என்று தெரிகிறது. அதுவும் நல்லதுக்கே.